1
குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் தமிழ் திரைப்படங்களுக்கான வணிகத்தில் தனித்துவமான சந்தை மதிப்பைப் பெற்றுள்ள நடிகர் வெற்றி, கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தில் வெற்றி, பிரிகிடா சகா, ரங்கராஜ் பாண்டே, கவிதா பாரதி, லிசி ஆண்டனி, சுப்ரமணிய சிவா, ‘அருவி’ மதன், ‘பருத்திவீரன்’ சரவணன், மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். கிரைம் த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 எம் சினிமாஸ் மற்றும் டி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. வி. சபரீஷ் – தயாள் பத்மநாபன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் தேதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் தயாள் பத்மநாபன் பேசுகையில்,”எம்முடைய வாழ்க்கையில் இரண்டு முறை குற்றச் செயலில் ஈடுபடுவதற்கான சூழல் ஏற்பட்டது. இதில் முதல்முறையாக குற்றச் செயலில் ஈடுபட வேண்டும் என்ற தூண்டலால் ஆறு மாத காலம் விவரிக்க இயலாத உணர்வை அனுபவித்தேன். அதன் பிறகு இரண்டாவது முறையாக குற்றச் செயலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் குறைந்த கால அவகாசம் வரை நீடித்தது. நமக்கு ஏற்பட்டதைப் போல், இந்த கதையின் நாயகனுக்கும் குற்றச் செயலில் ஈடுபட வேண்டும் என்ற தூண்டுதல் சூழலால் ஏற்படுகிறது. அவர் அதனை நிகழ்த்துகிறார். அதனால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்கிறார். ஆனால் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடும் வலிமையான உளவியல் காரணிகளுக்காக அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது சரியா? தவறா? என்பதை இப்படம் அலசுகிறது” என்றார்.