பட மூலாதாரம், AFP via Getty Images
-
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
இந்தியா-அமெரிக்கா இடையிலான பெரிய வர்த்தக ஒப்பந்தம் கைநழுவிச் செல்கிறதா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்ணயித்த ஜுலை 9 காலக்கெடுவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன.
இந்தியா, அமெரிக்கா இடையே ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது. ஆனால், பேச்சுவார்த்தைகள் கடுமையான பேரங்களில் சிக்கிக் கொண்டுள்ளது.
வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கேரோலின் லெவிட், “ஒப்பந்தம் தவிர்க்க முடியாதது” எனக் குறிப்பிட்டிருந்தார். டிரம்பின் ஒரு கூற்றுக்கு எதிர்வினையாற்றிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரு “பெரிய, நல்ல, அழகான” ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்கும் எனக் கூறியிருந்தார்.
இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட இருப்பதாகவும், அது இந்திய சந்தைகளை அணுகுவதற்கு வழிவகுக்கும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இப்படியாக நம்பிக்கையான அறிகுறிகள் தென்பட்டாலும், இரு தரப்பிலும் இருக்கும் பேச்சுவார்த்தையாளர்கள் அதற்கு இன்னும் கடினமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் இதில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை.
விவசாய உற்பத்திப் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் இந்திய எஃகு மீதான வரிகள் போன்ற முக்கியமான விஷயங்கள் குறித்தான பேச்சுவார்த்தைகள் இன்னமும் நீடிக்கின்றன.
வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளச் சென்ற இந்திய அதிகாரிகள் இன்னொரு சுற்று பேச்சுவார்த்தைகளுக்காக காலக்கெடுவை மேலும் நீட்டித்துள்ளனர்.
ஒருபுறம், விவசாயம் மற்றும் பால்வளத் துறையின் சந்தைகளை வெளிநாடுகளுக்குத் திறந்துவிட முடியாது என்றும் வளைந்து கொடுக்க முடியாது என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது. மறுபுறம் இந்திய சந்தைகளை மேலும் திறக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இப்போதைய சூழ்நிலை நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான கால அவகாசம் குறைந்துகொண்டே வருகிறது.
டிரம்பின் விருப்பம்
பட மூலாதாரம், Justin Merriman/Bloomberg via Getty Images
“இப்போதைக்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு குறைந்தபட்ச ஒப்பந்தத்தை எட்டுகிறார்களா அல்லது பேச்சுவார்த்தையில் இருந்து விலகப் போகிறார்களா என்பதை அடுத்த ஏழு நாட்கள் நிர்ணயிக்கும்,” என்கிறார் டெல்லியை சேர்ந்த குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) என்ற சிந்தனைக் குழுவைச் சேர்ந்த முன்னாள் இந்திய வர்த்தக அதிகாரி அஜய் ஸ்ரீவாஸ்தவா.
சில விஷயங்களில் நிச்சயமற்றத்தன்மை இருக்கிறது. அதில், வேளாண் துறை மிகப் பெரியது. “முதல்கட்ட ஒப்பந்தத்தை எட்டுவதில் இரண்டு உண்மையான சவால்கள் உள்ளதாக” வாஷிங்டனை சேர்ந்த சென்டர் ஃபார் ஸ்டிராட்டஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் (CSIS) நிறுவனத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ரோஸோவ், பிபிசியிடம் கூறினார்.
“முதலாவது சவால், அமெரிக்காவின் அடிப்படை வேளாண் பொருட்களை இந்திய சந்தையில் அனுமதிப்பது. பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா தனது அடிப்படை வேளாண் துறையைப் பாதுகாக்க வேண்டிருக்கும்.” இந்திய வேளாண் துறையில் பெரும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதுவதால் பல ஆண்டுகளாக அதில் நுழைவதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஆனால், உணவுப் பாதுகாப்பு, லட்சக்கணக்கான சிறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்தியா அதைக் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது.
இரண்டாவது முக்கியப் பிரச்னை, “வரிகள் அல்லாத தடைகள், இந்தியாவின் வளர்ந்து வரும் ‘தரக் கட்டுப்பாடு உத்தரவுகள்’ (QCO) போன்றவை அமெரிக்கா இந்திய சந்தையை அணுகுவதற்கு முக்கியமான தடைகளாக உள்ளன. இவற்றுக்கு ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் அர்த்தமுள்ள தீர்வுகளைக் காண்பது கடினமாக இருக்கலாம்,” என்கிறார் ரோஸோவ்.
அதிகரித்து வரும் பெரும் சுமையாக இருக்கும் இந்தியாவின் இறக்குமதி தர விதிகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. 700க்கும் மேற்பட்ட QCOக்கள் ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளன. இவை தரமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதையும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டவை.
இந்த விதிகள் இறக்குமதியைத் தடுப்பதுடன், உள்நாட்டின் நடுத்தர மற்றும் சிறுதொழில்களின் செலவை உயர்த்துகின்ற ‘தீங்கு விளைவிக்கும் தலையீடு’ என்று நிதி ஆயோக்கின் மூத்த உறுப்பினர் சுமன் பேரி விமர்சித்துள்ளார்.
இந்திய வேளாண் துறையே மிகப்பெரிய பிரச்னை
பட மூலாதாரம், Getty Images
பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய பிரச்னை வேளாண் பொருட்கள் ஏற்றுமதிதான். இந்தியா, அமெரிக்கா இடையே வேளாண் வர்த்தகம் 8 பில்லியன் டாலர் மதிப்புள்ளது. இதில் இந்தியா அரிசி, இறால், மற்றும் மசாலாப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா உலர் பழங்கள், ஆப்பிள்கள், மற்றும் பயறு வகைகளை அனுப்புகிறது.
ஆனால், வர்த்தகப் பேச்சுவார்தை தொடரும் நிலையில், இந்தியாவுடனான 45 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்க மக்காச்சோளம், சோயாபீன்ஸ் மற்றும் பருத்தியை இந்தியாவுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்வதற்கான கதவுகளைத் திறக்க வேண்டுமென அமெரிக்கா முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பொது கொள்முதலை குறைத்துக் கொள்ள இந்தியாவுக்கு வர்த்தக சலுகைகள் அழுத்தம் தரக்கூடும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
இவை இரண்டும் இந்திய விவசாயிகளுக்கு முக்கிய பாதுகாப்புக் கவசங்களாக உள்ளன. இவை அவர்களுக்கு பயிர்களுக்கான உரிய விலையை உறுதி செய்வதுடன், விலைகளில் ஏற்படும் திடீர் வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்கின்றன மற்றும் தானிய கொள்முதலை உறுதி செய்கின்றன.
“வேளாண்மை சார்ந்த வாழ்வாதாரங்கள் சிக்கலில் உள்ளதால், பால் பொருட்கள் அல்லது அரிசி மற்றும் கோதுமை போன்ற முக்கிய உணவு தானியங்களுக்கு எந்தவொரு வரிக் குறைப்பும் இருக்காது என்றே எதிர்பார்ப்பதாக” கூறுகிறார் ஸ்ரீவாஸ்தவா. “இவை இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தில் இருக்கும் 70 கோடி பேரை பாதிப்பவை என்பதால் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முக்கியமானவை.”
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அரிசி, பால் பொருட்கள், கோழி, மக்காச்சோளம், ஆப்பிள், பாதாம், மரபணு மாற்றப்பட்ட சோயா உள்ளிட்ட அமெரிக்க விவசாய இறக்குமதிகளுக்கு வரிக் குறைப்பைப் பரிந்துரைத்துள்ளது சுவாரஸ்யமானது.
இருப்பினும், இந்தப் பரிந்துரை அதிகாரபூர்வ அரசு கருத்தைப் பிரதிபலிக்கிறதா அல்லது வெறும் கொள்கைப் பரிந்துரையா என்பது தெளிவாக இல்லை.
“ஒருவேளை இந்தியா அடிப்படை விவசாயத் துறையில் அனுமதிப்பதற்கு ஏற்காவிட்டால், இந்த ஒப்பந்தம் முடிவடையாது என அமெரிக்கா கூறினால், அதன் எதிர்பார்ப்புகள் சரியாக உருவாக்கப்படவில்லை என்பது தெளிவாகும்,” என்கிறார் ரோஸோவ்.
அவரைப் பொறுத்தவரை, “எந்தவொரு ஜனநாயக ரீதியாகத் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும் வர்த்தகக் கொள்கை தொடர்பான தேர்வுகளில் ஓர் அரசியல் எல்லைகள் இருக்கும்.”
ஒப்பந்தத்தில் உள்ள சிக்கல்கள்
பட மூலாதாரம், Getty Images
மே 8ஆம் தேதியன்று அமெரிக்கா-பிரிட்டன் இடையே நடந்த சிறிய வர்த்தக ஒப்பந்தத்துக்குப் பிறகு, “பேச்சுவார்த்தையின் விளைவாக ஒரு வரையறுக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் இருக்கவே வாய்ப்பு உள்ளது” என்று ஸ்ரீவஸ்தவா போன்ற நிபுணர்கள் கருதுகின்றனர்.
பரிந்துரைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா நீண்ட காலமாகக் கோரி வருவதைப் போல ஆட்டோமொபைல் துறை உள்ளிட்ட பல தொழில்துறை பொருட்களுக்கு இந்தியா வரிக் குறைப்பு செய்யலாம்.
வரிக் குறைப்பு மற்றும் எத்தனால், பாதாம், அக்ரூட், ஆப்பிள், திராட்சை, அவகேடோ, ஆலிவ் எண்ணெய், ஸ்பிரிட்ஸ், ஒயின் போன்ற தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கு ஒதுக்கீட்டை (quota) நிர்ணயிப்பதன் மூலம் விவசாயத் துறையில் குறைந்த அளவில் இந்தியா அனுமதி அளிக்கலாம்.
வரிக் குறைப்பு தவிர, எண்ணெய், எல்என்ஜி, போயிங் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் அணு உலைகள் வரை பெரிய அளவிலான வணிகக் கொள்முதல்களைச் செய்யும்படி இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.
அமேசான், வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் வகையில், பல-பிராண்ட் சில்லறை விற்பனையில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) எளிதாக்க வேண்டும் என்றும் மறு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான விதிகளைத் தளர்த்த வேண்டும் என்றும் அமெரிக்கா கோரலாம்.
“இந்த ‘மினி-ஒப்பந்தம்’ எட்டப்பட்டால், அது வரிக் குறைப்பு மற்றும் மூலோபாய உறுதிப்பாடுகளில் கவனம் செலுத்தும். மேலும் சேவை வர்த்தகம், அறிவுசார் சொத்து (IP) உரிமைகள், டிஜிட்டல் ஒழுங்குமுறைகள் உள்ளிட்ட FTA-வின் பரந்த பிரச்னைகள் எதிர்காலப் பேச்சுவார்த்தைகளுக்கு விட்டு வைக்கப்படும்,” என்கிறார் ஸ்ரீவாஸ்தவா.
ஆரம்பத்தில், இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை தெளிவான மற்றும் நியாயமான கண்ணோட்டத்தில் அமைந்திருப்பதாகத் தோன்றியது.
“டிரம்ப், மோதி என இரு தலைவர்களும், இந்த ஆண்டு தங்கள் முதல் சந்திப்பில் ஓர் எளிய கொள்கையை முன்வைத்தனர். அமெரிக்கா அதிக மூலதனம் தேவைப்படும் பொருட்களில் கவனம் செலுத்தும், இந்தியா தீவிர உழைப்பு தேவைப்படும் பொருட்களில் கவனம் செலுத்தும் என்பதே அந்தக் கொள்கை” என்கிறார் ரோஸோவ். ஆனால், அதன் பின்னர் விஷயங்கள் மாறிவிட்டதாகத் தெரிகிறது.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் டிரம்ப் இந்தியா மீது 26% வரிவிதிப்பை மீண்டும் அமல்படுத்துவதற்குச் சாத்தியமில்லை என நிபுணர்கள் கருதுகின்றனர். அதற்கு மாறாக பெரும்பாலான இந்திய இறக்குமதிகள் மீது தற்போதுள்ள எம்.எஃப்.என் வரிவிகிதங்களுடன் கூடுதலாக 10% வரி விதிக்கப்படலாம்.
எம்.எஃப்.என் (Most Favoured Nation) வரிவிகிதம் என்பது உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகள், அந்த அமைப்பைச் சேர்ந்த பிற உறுப்பு நாடுகளுக்கு விதிக்கும் குறைந்தபட்ச வரி விகிதமாகும்.
கடந்த ஏப்ரலில் 57 நாடுகள் இந்த வரியை எதிர்கொண்டன, ஆனால் பிரிட்டனால் மட்டுமே இதுவரை ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது. எனவே, இந்தியாவை மட்டும் குறிவைப்பது நியாயமற்றதாகத் தெரியலாம்.
“இருந்தாலும், டிரம்பின் ஆச்சரியப்படுத்தும் பாணி காரணமாக இதுபோன்ற ஒரு சாத்தியக்கூற்றைப் புறந்தள்ளிவிட முடியாது,” எனகிறார் ஸ்ரீவாஸ்தவா.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு