சென்னை: கடலூர் ரயில் விபத்து சம்பவம் எதிரொலியாக, இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க முக்கிய நடவடிக்கைகளை எடுக்க தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் அறிவுறுத்தி உள்ளார். கடலுார் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது பயணிகள் ரயில் மோதிய சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது, இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படாத பகுதிகளில் உள்ள லெவல் கிராசிங் கேட்களை தினமும் ஆய்வு செய்வது உட்பட பல்வேறு உத்தரவுகளை ரயில்வே துறை பிறப்பித்துள்ளது.
இதன்தொடர்ச்சியாக அரக்கோணம் – செங்கல்பட்டு தடத்தில் நடத்திய சோதனையில் திருமால்பூர் அருகில் இரவு பணியின்போது தூங்கிக் கொண்டிருந்த 2 கேட் கீப்பர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: இன்டர்லாக் செய்யப்படாத லெவல் கிராசிங் கேட்களில் புதர்களை அடுத்த 10 நாட்களுக்குள் தவறாமல் அகற்ற வேண்டும். 100 சதவீதம் இன்டர்லாக்கிங் செய்யப்படாத லெவல் கிராசிங் கேட்களில் பேனர் கொடிகளை அமைப்பதற்கும், பதாகை, சிக்னல் விளக்குகளை தண்டவாளத்தின் குறுக்கே பொருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு அதிகாரிகள், தலைமையக அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
லெவல் கிராசிங் கேட்கள் திறக்கப்படுவதற்கு முன்பும், அவை திறந்த நிலையில் இருக்கும் போதெல்லாம், கேட் கீப்பர்களால் லெவல்கிராசிங் கேட்களில் பேனர் கொடிகள் வைக்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். நிலைய அதிகாரி அனுமதி இல்லாமல், கேட்டை திறந்து வைத்திருப்பது கண்டறியப்பட்டால், கேட் கீப்பர் இடைநீக்கம் செய்யப்படுவார்கள்.
சிறப்பாக பணிபுரியும் கேட் கீப்பர்களுக்கு விருது வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களையே இன்டர்லாக்கிங் செய்யப்படாத கேட்களில் பணியமர்த்தப்பட வேண்டும். ரயில் வருவதற்கு முன்பே, லெவல் கிராசிங் கேட் அதிக நேரம் மூடக்கூடாது. பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பான ஊழியர்களுக்கான தண்டனை விதிமுறைகள் உட்பட மொத்தம் 21 நடவடிக்கைகளை செயல்படுத்த ஆர்.என்.சிங் அறிவுறுத்தியுள்ளார்.