போலியான காப்புரிமை புகார்கள் காரணமாக தங்களது இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டதாகவோ, நீக்கப்பட்டதாகவோ கூறும் கிரியேட்டர்கள், இதனால் ஆயிரக்கணக்கான பவுண்டுகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
மெட்டாவுக்குச் சொந்தமான சமூக ஊடகத் தளத்தில் சிலர் போலியான காப்புரிமை புகார்களை பதிவு செய்து, பின்னர் அவற்றைத் திரும்பப் பெற பணம் கேட்டு மிரட்டுகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற காப்புரிமை புகார் பதிவு செய்யப்பட்டால் கணக்குகள் முடக்கப்படலாம் என்பதை அவர்கள் அறிந்தே இதைச் செய்வதாகக் கூறப்படுகிறது.
15 லட்சம் பின்தொடர்பாளர்களைக் கொண்ட ஓர் இன்ஸ்டாகிராம் பயனர், தனது கணக்கை மீண்டும் பெறுவதற்காக மோசடி செய்த ஒருவருக்கு 50 டாலர் கொடுத்ததாக பிபிசியிடம் தெரிவித்தார். மெட்டாவின் மேல்முறையீட்டு நடைமுறை பல வாரங்கள் ஆகும் என்று அந்த மோசடி நபர் கூறியதாகவும், இதற்கு முன்பு இதேபோன்ற நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான பவுண்டுகள் வருமானத்தை இழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தொடக்கத்திலேயே தடுக்கும் வகையில் எங்கள் அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்று மெட்டா செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
“எங்கள் ஆய்வுக்குப் பிறகு, உள்ளடக்கத்தை மீண்டும் வழங்கியுள்ளோம். இதுபோன்ற முயற்சிகள் மீண்டும் நடைபெறாமல் கணக்குகளைப் பாதுகாக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.”
இருப்பினும், பிபிசியிடம் பேசிய கிரியேட்டர்கள், வெளிப்படையாகவே போலியானதாகத் தெரியும் காப்புரிமை புகார்களைகூட மெட்டா முறையாகக் கண்டறிவதில்லை என்றும், மாதாந்திரக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே அதன் மேல்முறையீட்டு நடைமுறை விரைவாகச் செயல்படுவதாகவும் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
‘வெளிப்படையாகவே போலியானவை’
லாஸ்ட் இன் டைம் ஹிஸ்டரி என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வரலாற்றுப் படங்கள் பதிவிடப்படுகின்றன. அந்தக் கணக்கை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
அதன் கிரியேட்டரான ஒல்லி, தனது குடும்பப் பெயரை வெளியிடவில்லை. பொதுப் பயன்பாட்டில் உள்ள படங்களையோ அல்லது உரிமையாளரிடம் அனுமதி பெற்ற படங்களையோதான் தான் பதிவிடுவதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இருப்பினும், 2026-ஆம் ஆண்டில் இதுவரை “வெளிப்படையாகவே தெரியும் போலியான” காப்புரிமை புகார்கள் டஜன் கணக்கில் தனக்கு வந்துள்ளதாக அவர் கூறுகிறார்.
புகார்கள் பதிவு செய்யப்படும்போது அவை உண்மையானவையா என்பதை மெட்டா சரிபார்ப்பதில்லை. இதனால், ஒரே கணக்கு மீது தொடர்ந்து புகார்கள் பதிவு செய்யப்பட்டால், அந்தக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படலாம்.
ஒரே நேரத்தில் பல பதிவுகள் மீது தனக்கு காப்புரிமை புகார்கள் வருவதாகவும், அவை அனைத்தும் ஒரே மின்னஞ்சல் முகவரியில் இருந்து வருவதாகவும் ஒல்லி கூறுகிறார்.
அதன்பிறகு, ”புகார் அளித்த நபர் தன்னை டெலிகிராமில் தொடர்புகொள்ளுமாறு கேட்பார். அவர்கள் குறிப்பிட்ட தொகையை பணமாகக் கேட்பார்கள்,” என்று அவர் கூறினார்.
அந்தத் தொகை வழக்கமாக சில நூறு டாலர்களாக இருக்கும். பணம் கொடுத்தால் காப்புரிமை புகாரைத் திரும்பப் பெறுவதாக அவர்கள் கூறுவார்கள் என்கிறார்.
பணம் கொடுக்குமாறு கோருவதுடன், எதிர்காலத்தில் மேலும் காப்புரிமை புகார்களைப் பதிவு செய்வதாக மிரட்டியவர்கள் அனுப்பிய செய்திகளையும் பிபிசி பார்த்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ஒல்லி, இன்ஸ்டாகிராமால் தற்காலிகமாக முடக்கப்பட்ட தனது இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்பதற்காக மோசடி செய்த ஒருவருக்கு 50 டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சியை செலுத்த ஒப்புக்கொண்டார்.
மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்த வேண்டாம் என்று சட்ட அமலாக்க அமைப்புகள் அறிவுறுத்துகின்றன. அவ்வாறு பணம் செலுத்துவது குற்றச் செயல்களின் தொடர்ச்சியான அமைப்பை ஊக்குவிக்கும் என்பதே இதற்குக் காரணம்.
ஆனால், மெட்டாவின் நடைமுறையைப் பின்பற்றுவதற்கு பல வாரங்கள் ஆகலாம் என்பதால், “வேறு வழியில்லாத கடைசி முயற்சியாக” தான் பணம் செலுத்தியதாக ஒல்லி கூறினார்.
ஆனால், பணம் செலுத்திய உடனேயே அவரது கணக்கில் மேலும் பல காப்புரிமை புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
“அதுதான் மிகவும் மோசமான விஷயம்,” என்று அவர் கூறினார்.
“உங்களை இவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நபருக்கே பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பணம் கொடுத்த உடனேயே அதே பிரச்னை மீண்டும் நடந்துவிட்டது.”
தனது கணக்கு மீது பலமுறை காப்புரிமை புகார்கள் பதிவு செய்யப்பட்டதன் விளைவாக, ஒல்லியின் இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் பணம் ஈட்டும் வசதி நீக்கப்பட்டது. இதனால், அதிக வரவேற்பைப் பெறும் பதிவுகள் மூலம் இன்ஸ்டாகிராமில் அவரால் வருமானம் ஈட்ட முடியவில்லை.
“முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை விசாரிக்கவோ, அது முறைகேடாக இருக்கலாம் என்பதை மெட்டாவின் அமைப்பு கண்டறியவோ எந்த நடவடிக்கையும் இல்லை,” என்று அவர் கூறினார்.
மற்ற இன்ஸ்டாகிராம் பயனர்களும் இதேபோன்ற அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.
“முழு நடைமுறையிலும் மெட்டா எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. கிரியேட்டர்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறிக்கொண்டே, அவர்களுடன் பேசுவதற்கான சேவைக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது,” என்று மார்பிட் கியூரியாசிட்டி என்ற கணக்கை நடத்தி வரும் அபின் டாம் செபாஸ்டியன் கூறினார்.
இன்ஸ்டாகிராமில் வெரிஃபைட் கணக்கைப் பெற மெட்டா கட்டணம் வசூலிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் நேரடி குறுஞ்செய்தி சேவை வாயிலாக 24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் நிறுவனத்திடம் தங்கள் பிரச்னைகள் குறித்து பேச முடியும்.
“பிராண்டுகளுடனான ஒப்பந்தங்களை நான் இழந்துவிட்டேன். அவை துரதிர்ஷ்டவசமாக வேறு கிரியேட்டர்களிடம் சென்றுவிட்டன. இது மீண்டும் நடக்காது என்று மெட்டாவிடம் இருந்து எந்த உத்தரவாதமோ ஆதரவோ கிடைக்கவில்லை,” என்று செபாஸ்டியன் கூறினார்.
காப்புரிமை மீறல் குறித்து புகார் அளிக்க காப்புரிமை உரிமையாளர்கள் அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே முடியும் என்று இன்ஸ்டாகிராம் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்ட பயனர்கள் நேரடியாக காப்புரிமை உரிமையாளர்களைத் தொடர்புகொள்ளவும் அது அறிவுறுத்துகிறது.
ஒல்லி மற்றும் பிற கணக்கு உரிமையாளர்களின் புகார்களுக்கு உதாரணங்களுடன் பிபிசி மெட்டாவைத் தொடர்புகொண்ட பிறகு, அவர்களது கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மெட்டா தெரிவித்தது. இதுபோன்ற பிரச்னைகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் இருக்கும் என்றும் அது கூறியது.
மக்கள் மற்றும் நிறுவனங்களை ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக தாங்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
மோசடி செய்பவர்கள் கூறுவது என்ன?
காப்புரிமை உரிமையாளர்கள் இல்லாதபோதிலும், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு எதிராக காப்புரிமை புகார்களைப் பதிவு செய்யும் மூன்று நபர்களிடம் பிபிசி பேசியுள்ளது.
அவர்கள் மூவரும் இந்தியாவிலோ அல்லது அதற்கு அருகிலுள்ள நாடுகளிலோ வசிப்பவர்களாகத் தெரிகின்றனர்.
தாங்கள் கணக்குகளை முடக்கி பணம் பறிக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். மாறாக, காப்புரிமை உரிமையாளர்களின் சார்பில் முறையான புகார்களையே பதிவு செய்வதாகக் கூறுகின்றனர்.
ஆனால், அவர்களில் ஒருவருடன் பரிமாறப்பட்ட செய்திகளை பிபிசி பார்த்துள்ளது. அதில், ஒரு காப்புரிமை புகாரைத் திரும்பப் பெறுவதற்காக 900 டாலர் கேட்கப்பட்டுள்ளது.
இது தாங்கள் வழங்கும் சேவைக்கான கட்டணம் என்று அந்த நபர் கூறியதுடன், அந்தப் பணம் முழுவதையும் தானே வைத்துக்கொள்வதாகவும் உறுதிப்படுத்தினார்.
மற்ற இருவர் தாங்கள் எந்தப் பணமும் சம்பாதிப்பதில்லை என்று மறுத்தனர்.
அவர்களில் ஒருவர், குறிப்பிட்ட கணக்குகளை ஆய்வு செய்து, அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தன்னிடம் அனுப்பப்படுவதாகக் கூறினார்.
“அவர்கள் வேறொருவரின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துகிறார்களா என்பதை நான் கண்டறிந்தால், அனைவரின் நலனுக்காகவும் காப்புரிமை புகார்களைப் பதிவு செய்கிறேன்,” என்று அவர் கூறினார்.
மற்றொருவர், கணக்கு உரிமையாளர் அல்லது அவரது பிரதிநிதி மூலம் குறிப்பிட்ட கணக்குகள் அல்லது பதிவுகள் தன்னிடம் அனுப்பப்படுவதாகக் கூறினார்.
வாடிக்கையாளர்களின் சார்பில் காப்புரிமை புகார்களைப் பதிவு செய்வதற்காகக் கட்டணம் பெறும் முறையான நிறுவனங்களும் உள்ளன.
ஆனால், காப்புரிமை உள்ளடக்கத்தைத் தவறுதலாகப் பதிவிட்டபோது இதுபோன்ற நிறுவனங்களுடன் ஏற்கெனவே தொடர்புகொண்டுள்ள ஒல்லி, அவற்றைக் கையாள்வது வழக்கமாக எளிதானது என்றும், “இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை எளிதாகக் கண்டறிய முடியும்” என்றும் கூறுகிறார்.
“அவை லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்ட நிறுவப்பட்ட நிறுவனங்கள். எனவே, இது முற்றிலும் வேறுபட்டது,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
சமீபத்திய அதிகரிப்பு
இதுபோன்ற காப்புரிமை மோசடிகள் புதிதல்ல. இதன் ஒரு வடிவம் இணையத்தின் ஆரம்ப காலத்திலேயே இருந்ததாகவும், தற்போது இந்தத் துறையில் அதிகரித்து வரும் டிஜிட்டல் காப்புரிமை மோசடிகள் குறித்து ஆய்வு செய்து வரும் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிவுசார் சொத்துரிமை சட்டப் பேராசிரியர் ஆண்ட்ரெஸ் குவாடமுஸ் கூறுகிறார்.
முன்பு, இணையதளங்களில் பயன்படுத்தப்பட்ட படங்களின் காப்புரிமை தங்களிடம் இருப்பதாகக் கூறி, இணையதள உரிமையாளர்களுக்கு மின்னஞ்சல்கள் அல்லது கடிதங்கள் அனுப்பப்பட்டன. சட்ட நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காகப் பணம் செலுத்துமாறும் அதில் கேட்கப்பட்டது.
இதேபோன்ற காப்புரிமை புகார்கள் யூடியூப் பயனர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், சமீப காலமாக இந்த முறையின் பயன்பாடு அதிகரித்திருப்பதற்கு, செயற்கை நுண்ணறிவு மூலம் இதுபோன்ற செயல்களை மிகப் பெரிய அளவில் எளிதாக மேற்கொள்ள முடிவதும் காரணமாக இருக்கலாம்.
“இது எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு,” என்று குவாடமுஸ் பிபிசியிடம் கூறினார்.
“இப்போது கிட்டத்தட்ட யாராலும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, இவை அனைத்தையும் ஒருவிதத்தில் தானியங்கிமயமாக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
மேலும், பில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட சமூக ஊடகத் தளங்களுக்கு இதுபோன்ற மோசடிகளைக் கட்டுப்படுத்துவதும், உண்மையான காப்புரிமை புகார்களையும் போலியானவற்றையும் வேறுபடுத்திக் கண்டறிவதும் மிகவும் கடினமாக உள்ளது.
“காப்புரிமை புகார் அளிப்பவர் உண்மையான உரிமையாளர் என்ற அனுமானத்திலேயே இந்த அமைப்பு கிட்டத்தட்ட உருவாக்கப்பட்டிருந்தது,” என்று அவர் கூறினார்.