பட மூலாதாரம், Getty Images
மாக்சர் டெக்னாலஜியின் செயற்கைக்கோள் படங்கள் மூலம், இரானின் ஃபோர்டோ அணுசக்தி தளத்தில் பெரிய அளவில் கட்டுமான பணிகள் நடைபெறுவது தெரியவந்துள்ளது.
சமீபத்திய தாக்குதல்களின் போது அமெரிக்காவால் குறிவைக்கப்பட்ட இரானிய அணுசக்தி நிலையங்களில் இதுவும் ஒன்று.
ஜூன் 29 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், அமெரிக்காவின் பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகளால் சேதமடைந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் ஆழ்துளை இயந்திரங்கள் மற்றும் கிரேன்கள் இயங்கும் காட்சிகள் தெரிகின்றன. ஒரு புல்டோசரும் ஒரு லாரியும் மலையிலிருந்து கீழே இறங்கும் காட்சியும் அந்தப் படங்களில் பதிவாகியுள்ளது.
ஃபோர்டோ அணுசக்தி தள வளாகத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நுழைவு வாயில் மற்றும் கட்டிடத்திலும் கட்டுமான இயந்திரங்கள் வேலை செய்து வருகின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் அத்தளத்தின் நுழைவு வாயில் மற்றும் கட்டிடத்தின் கிழக்குப் பகுதிகள் சேதமடைந்தன.
ஜூன் 28 அன்று அதே இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அணு ஆயுத நிபுணர் டேவிட் ஆல்பிரைட் பகுப்பாய்வு செய்தார்.
அவரைப் பொறுத்தவரை, ஃபோர்டோ அணு தளத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளில், தாக்குதலால் ஏற்பட்ட குழிகளை மண்ணால் நிரப்பும் வேலைகளும் அடங்கும்.
அதேபோல், அங்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பீடு அல்லது கதிரியக்க மாதிரிகள் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கருதுகிறார்.
அமெரிக்க தாக்குதல்களுக்குப் பிறகு, இரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
ஆனால், இரானால் “சில மாதங்களுக்குள்” யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் என்று சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி வெள்ளிக்கிழமையன்று கூறினார்.
இதற்கிடையில், மாக்சர் எடுத்த சமீபத்திய செயற்கைக்கோள் படங்களின்படி, இரானிய அரசாங்கம் யுரேனியத்தை செறிவூட்டும் , ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தில் சில பணிகள் நடந்து வருகின்றன என அறியப்படுகின்றது.
மாக்சர் எடுத்த இரண்டாவது செயற்கைக்கோள் படம், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் சேதமடைந்த வளாகத்தின் சில பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருவதைக் காட்டியது.
ஜூன் 13 அன்று இரானில் உள்ள அணு மற்றும் ராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல், இரானிய ராணுவ தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகளையும் கொன்றது.
மேலும், இரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் நிலைக்கு வந்துவிட்டதாக இஸ்ரேல் கூறியது.
பதிலுக்கு இரான் இஸ்ரேலைத் தாக்கியது.
இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் 12 நாட்கள் தொடர்ந்தது.
மோதல் நடந்த காலகட்டத்தில், இரானின் மூன்று அணுசக்தி தளங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசியது.
அமெரிக்கா கூறியது என்ன ?
பட மூலாதாரம், Getty Images
இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமீபத்திய மோதலின் போது, ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் போன்ற மூன்று இரானிய அணுசக்தி தளங்களை அமெரிக்க ராணுவம் தாக்கியதாக, ஜூன் 22 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
இந்தத் தாக்குதல்கள் “வெற்றிகரமாக” இருந்தன என்றும், இந்த தளங்கள் “அழிக்கப்பட்டன” என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஜூன் 22 அன்று, இந்தத் தாக்குதல்களைத் திட்டமிடுவதில் தனக்கும் அமெரிக்காவிற்கும் இடையே “முழுமையான ஒருங்கிணைப்பு” இருப்பதாக இஸ்ரேல் கூறியது.
இந்த தளங்களுக்கு மிகக் குறைந்த சேதம் மட்டுமே ஏற்பட்டதாக இரானிய அதிகாரிகள் ஆரம்பத்தில் கூறியிருந்தனர்.
மேலும், இந்த தாக்குதலில் பி2 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்கள் (MOP- பதுங்கு குழியை தகர்க்கும் திறன் கொண்டவை என்றும் அழைக்கப்படுகிறது) எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை ஜூன் 22 அன்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் விளக்கினார்.
“அமெரிக்காவின் பி2 ரகசிய குண்டுவீச்சு விமானங்கள் இரானுக்குள் நுழைந்து, அணுசக்தி தளங்களைத் தாக்கிவிட்டு திரும்பி வந்தன. உலகிற்கு இதனைப் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை” என்று பீட் ஹெக்செத் கூறினார்.
“இந்த தாக்குதலில், 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு பி2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்கள் மிக நீண்ட தூரம் சென்று தாக்குதலில் ஈடுபட்டன. மேலும், எம்ஓபி எனப்படும் பதுங்கு குழியை தகர்க்கும் திறன் கொண்ட ஏவுகணைகளும் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டன” என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஏழு பி2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் உட்பட 125 அமெரிக்க விமானங்கள் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ தாக்குதலில் ஈடுபட்டதாக கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் டான் கேன் கூறினார்.
இந்த நடவடிக்கையில் சுமார் 75 “துல்லியமான ஆயுதங்கள்” பயன்படுத்தப்பட்டதாக கேன் குறிப்பிட்டார். அதில் 14 எம்ஓபிக்களும் அடங்கும்.
அமெரிக்கத் தாக்குதல்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜூன் 24 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைத்து தரப்பினரும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.
இருப்பினும், அந்த நேரத்தில் போர்நிறுத்தம் குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று இரான் கூறியிருந்தது.
இரான் கூறியது என்ன ?
பட மூலாதாரம், Getty Images
இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 12 நாட்கள் மோதலுக்குப் பிறகு, இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி ஜூன் 26 அன்று ஒரு தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
ஜூன் 26 அன்று வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், இரானின் அணுசக்தி தளங்களைத் தாக்கியதன் மூலம், அமெரிக்கா “எதையும் சாதிக்கவில்லை” என்று காமனெயி தெரிவித்தார்.
“என்ன நடந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதை மிகைப்படுத்திவிட்டார். அவர் சொல்வதைக் கேட்கும் எவரும் அவர் உண்மையைத் திரித்துக் கூறுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்” என்று அவர் கூறியிருந்தார்.
காமனெயியின் கூற்றுகளுக்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது கூற்றுகளை “தவறானது” என்று குறிப்பிட்டார்.
“அவர்களின் நாடு (இரான்) அழிக்கப்பட்டது. அவர்களின் மூன்று அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன” என்று டிரம்ப் கூறினார்.
இருப்பினும், இப்போது இரான் மீண்டும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அமெரிக்கா விரும்பினால், அது (அமெரிக்கா) இனி எந்தத் தாக்குதலையும் நடத்தாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இரானின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் மஜித் தக்த்-ரவஞ்சி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
“இந்த வாரம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க விரும்புவதாக டிரம்ப் நிர்வாகம் மத்தியஸ்தர்கள் மூலம் இரானிடம் கூறியது.
ஆனால், மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுமா என்பது தொடர்பான மிக முக்கியமான கேள்வியில் அமெரிக்கா இதுவரை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை” என்று மஜித் தக்த்-ரவஞ்சி குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு