அமெரிக்கா – இரான் இடையேயான போர்நிறுத்தம் முடிந்துவிட்டது என தான் நினைப்பதாகக் கூறிய சில மணி நேரத்திலே இரானைக் கடுமையாக தாக்கப்போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.
துருக்கியில் நடைபெறு நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள டிரம்ப் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். இரானியத் தலைமைப் பற்றி குறிப்பிடுகையில், “இனி அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. அவர்கள் மோசமானவர்கள், மோசமானவர்களால் வழிநடத்தப்படுகிறார்கள்.” என்றார்.
இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைக் குழுவினர் தொடர்ந்து பேசலாம் என்று தெரிவித்த டிரம்ப், “ஆனால் அவர்கள் நேரத்தை விரயம் செய்வதாகவே நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.
டிரம்பின் கருத்துகள் “பிராந்தியத்தை நெருப்பை நோக்கி நகர்த்துவதாகக்” கூறும் இரானிய அதிகாரி ஒருவர், பிராந்தியத்தில் உள்ள இரானின் பினாமிகள் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாகவும் எச்சரித்தார்.
டிரம்பிடம் ஏதோ மாற்றம் உள்ளதாக பிபிசி வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்னட் டெபுஸ்மென் ஜூனியர் தெரிவிக்கிறார்.
இருநாடுகளுக்கும் இடையே போட்டி தாக்குதல்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து டிரம்பின் கருத்துக்கள் வந்துள்ளன. செவ்வாய்கிழமையன்று 80-க்கும் மேற்பட்ட இரானிய இலக்குகளைத் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்தது.
அதற்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இலக்கு வைப்பதாக இரான் தெரிவித்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்காவின் பதில் தாக்குதல்கள் அரங்கேறியது.
தற்போது இரான் உடன் எந்தவொரு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை எனக் கூறும் டிரம்ப் எதிர்கால தாக்குதல்கள் பாலங்கள், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்கலாம் என்றும் எச்சரித்தார்.
அமெரிக்கா கார்க் தீவைக் கைப்பற்றலாம் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இங்குதான் இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையம் இருக்கிறது. “அதற்கு எதிராக இரானால் எதுவும் செய்ய முடியாது” என்றும் தெரிவித்தார்.
ஒரு முக்கியமான தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அவர் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், “அத்தகைய தாக்குதல்கள் நடந்தால் அது இரானுக்கு உள்ளே பகுதிகளை இலக்கு வைக்கும்.” என்றும் தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இரான் உடனான தனது ஏற்பாடு முடிந்துவிட்டது எனத் தெரிவித்தார்.
‘போர்நிறுத்த மீறல்’ – பரஸ்பரக் குற்றச்சாட்டு
பட மூலாதாரம், Getty Images
இரான் உடன் தான் மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறிய டிரம்ப், இரான் அணு ஆயுதங்கள் பெற அனுமதிக்கக்கூடாது என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என்று மீண்டும் வலியுறுத்தினார்.
“ஒட்டுமொத்த விஷயமும் ஆட்சி மாற்றம் பற்றியது அல்ல. இரானின் அணுசக்தி திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்கா கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது,” என்றார் டிரம்ப்.
ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜெரால்டு குஷ்னர் உடன் பேசுவேன் என்று கூறிய டிரம்ப், “பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வருவது இரானின் முடிவு.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், “அவர்கள் அணு ஆயுதங்கள் பெறக்கூடாது என அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை அடைந்தோம். ஆனால் அதற்குப் பிறகு அத்தகைய பேச்சுவார்த்தைகளே நடக்கவில்லை என ஊடகங்களிடம் காட்டுவதற்கு முயற்சித்தனர்.” என்றும் தெரிவித்தார்.
இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதிலடி தாக்குதல்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து டிரம்பின் கருத்து வந்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இருநாடுகளும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தினர்.
‘எட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்’ – இரான் ராணுவம் தகவல்
அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் எட்டு இரான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இரானிய ராணுவத்தை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
பல இரானிய ஊடகங்களில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையில், கொல்லப்பட்ட வீரர்கள் விமானப்படை மற்றும் கடற்படையில் பணியில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீரர்கள் பந்தர் அப்பாஸ் மற்றும் புசெஹரில் பணியில் இருந்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
இரான் அரசு ஊடகப் பிரிவான ஐஆர்ஐபி-ன் ஆங்கில மொழி தொலைக்காட்சியான பிரஸ்டிவி பாதுகாப்பு துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிட்ட செய்தியில், “நாட்டிற்கு எதிராக ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் ஹோர்மூஸ் நீரிணையில் அனைத்து கடல்போக்குவரத்தையும் இரான் மூடும்.” எனக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கப்படும் ஒவ்வொரு இரானிய இலக்குகளுக்கும் குறைந்தபட்சம் இரண்டு இலக்குகளை இரான் தாக்கும் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்தச் செய்தி கூறுகிறது. மேலும் “பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் கூட்டாளிகள் இடையே இரான் வேறுபடுத்தி பார்க்கவில்லை.” என்று தெரிவித்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.