1
இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு 30 சதவீத வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கையைப் போன்று அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கும் 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புருனே மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் 25 சதவீத வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் 20 சதவீத வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வரி விதிப்பு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
முன்னதாக, இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி விதித்திருந்த வரி 44 சதவீதம் ஆகும். எனினும், 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை தனது வரிகளை உயர்த்தினால், அந்த வீதம் தற்போதைய 30 சதவீத வரியுடன் சேர்க்கப்படும் என டிரம்ப் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விதிக்கப்பட்ட 44 சதவீத வரியை 30 சதவீதமாக குறைத்தது நேர்மறையான அணுகுமுறை என இலங்கை வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
பட்டியலிடப்பட்ட அனைத்து நாடுகளிலும் இலங்கைக்கு மிகப்பெரிய வரிக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சுட்டிக்காட்டினார்.
இது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இராஜதந்திர மத்தியஸ்தத்தின் விளைவு என்றும் அவர் தெரிவித்தார்.