பட மூலாதாரம், AFP via Getty Images
நான்கு ஆண்டுகளுக்கு முன், ஒரு சரக்குக் கப்பல் விபத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய பிளாஸ்டிக் கசிவுக்கு பிறகு, இன்னும் இலங்கை கடற்கரைகளின் மணலில் இருந்து நச்சுத் தன்மை கொண்ட சிறிய பிளாஸ்டிக் உருண்டைகளை (நர்டுல்ஸ்-nurdles) தன்னார்வலர்கள் பிரித்தெடுத்து வருகிறார்கள்.
2021 ஆம் ஆண்டு எக்ஸ்-பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பில்லியன் கணக்கான பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்), டன் கணக்கில் எரிபொருள், அமிலம், காஸ்டிக் சோடா, ஈயம், செப்புக் கழிவு, லித்தியம் பேட்டரிகள், எபோக்சி பிசின் ஆகியவை கடலுக்குள் சிதறியதாகக் கருதப்படுகிறது. இவை அனைத்தும் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தானவை.
அந்த விபத்தினால் ஏற்பட்ட சேதம் உடனடியாகத் தெரிந்தது. பிளாஸ்டிக் துகள்கள் கடற்கரையை வெண்மையாக மாற்றின. இறந்த ஆமைகள், டால்பின்கள், மீன்கள் கரையோரத்தில் ஒதுங்கத் தொடங்கின.
ஆனால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு முன்பு நினைத்ததைவிட, மிக நீண்ட காலம் நீடிக்கலாம் என விஞ்ஞானிகள் தற்போது எச்சரிக்கின்றனர்.
அதிகரிக்கும் நச்சுத்தன்மை
இதுவரை கோடிக்கணக்கான பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்) அகற்றப்பட்டிருக்கலாம். ஆனால், மணலில் ஆழமாக மறைந்திருக்கும் பயறு அளவிலான மைக்ரோபிளாஸ்டிக் துகள்களைக் கண்டுபிடிப்பது இப்போது மிகவும் கடினமாக உள்ளது.
மோசமான விஷயம் என்னவென்றால், இந்த பிளாஸ்டிக் துகள்கள் இன்னும் அதிக நச்சுத்தன்மையுடையதாக மாறுவதாக புதிய ஆராய்ச்சி கூறுகிறது.
“அவை கடலின் மாசுபாட்டை உறிஞ்சும் ஒரு பெரிய ரசாயன ஸ்பாஞ் போல இருக்கின்றன,” என்று மான்செஸ்டர் பெருநகர பல்கலைக்கழகத்தின் டேவிட் மெக்சன் கூறுகிறார்.
நர்டில்கள் என்பது பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க உருக்கப்படும் மூலப்பொருட்கள். உலகளாவிய பிளாஸ்டிக் விநியோகத்தில் இவற்றைப் பெரிய அளவில் கொண்டு செல்வது, வழக்கமான ஒன்று தான்.
துபாய் துறைமுகத்திலிருந்து மலேசியாவின் போர்ட் கிளாங்கிற்குப் பயணிக்கும்போது, எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் நைட்ரிக் அமிலம் கொண்ட ஒரு கொள்கலன் கசிந்து உலோகப் பெட்டியை அரிப்பதாக குழுவினர் கண்டனர்.
ஆனால், புகையை வெளியிடுகின்ற , கசியும் கொள்கலனை நிறுத்த கத்தார் மற்றும் இந்திய துறைமுகங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.
2021ம் ஆண்டு,மே 19ம் தேதி இரவு , அக்கப்பல் இலங்கை கடற்பரப்பில் நுழையும்போது, அதில் உள்ள கொள்கலன் எட்டு நாட்களாக மணிக்கு ஒரு லிட்டர் வீதம் அமிலம் கசிந்து கொண்டிருந்தது.
பின்னர் அக்கப்பல் அவசரமாக துறைமுகத்தில் நிறுத்தப்பட அனுமதி கோரியது, ஆனால் காலையில் சிங்கப்பூர் கொடியுடைய அந்தக் கப்பல் தீப்பிடித்தது.
அந்தக் கப்பலின் குழுவினர், இலங்கை அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்களின் தீயணைப்பு முயற்சிகள் இருந்தபோதிலும், தீ முழுக் கப்பலுக்கும் பரவியது.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு கப்பல் மூழ்கியது.
அதன் சரக்குகள் மற்றும் எரிபொருள், இலங்கையின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து, ஒன்பது கடல் மைல் தொலைவில், தலைநகர் கொழும்புக்கும் வடக்கே நீர்கொழும்புக்கும் இடையில் கடலில் சிந்தியது.
“போர் திரைப்படத்தைப் போல இருந்தது”
“அடுத்து நடந்தது ஒரு போர் திரைப்படத்தைப் போல இருந்தது,” என்று சுற்றுச்சூழல் ஆர்வலரும், பேர்ல் ப்ரொடெக்டர்ஸ் என்ற உள்ளூர் அரசு சாரா அமைப்பின் நிறுவனருமான முதித கட்டுவாலா கூறினார்.
இந்த அமைப்பு, இலங்கை அரசு அதிகாரிகள் நடத்திய, கப்பல் உரிமையாளர்களின் நிதியுதவியுடன் இயங்கிய துப்புரவுப் பணியில் தன்னார்வமாக பங்கேற்றது.
“அதே மாதிரியான பாதிப்புகளுடன் ஆமைகள் கரையோரத்தில் ஒதுங்கத் தொடங்கின. அவற்றின் தோலில் இருந்த தீக்காயங்கள் உரிந்து கொண்டிருந்தது. அவற்றின் மூக்கும் கண்களும் சிவந்து வீங்கி இருந்தன. டால்பின்களும் கரை ஒதுங்கின. அவற்றின் தோலும் சிவந்து உரிந்து இருந்ததை நாங்கள் பார்த்தோம்” என்றார் முதித கட்டுவாலா.
கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் , “பனி போல” இருந்தன. “அதைப் பார்க்கவே பயமாக இருந்தது,” என்றும் அவர் கூறினார்.
அதனை சுத்தம் செய்யும் பணி தீவிரமாகத் தொடங்கியது. தொடக்கத்தில், கட்டுவாலாவும் அவரது சக தன்னார்வலர்களும் சேர்ந்து, ஒவ்வொரு நாளும் “300–400 கிலோ நுண்துகள்களை” சேகரித்தனர்.
காலப்போக்கில், துப்புரவுப் பணியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் உருண்டைகளின் (நர்டுல்ஸ்) அளவு இரண்டு மணி நேரத்தில் 3-4 கிலோவாகக் குறைந்தது.
“பிளாஸ்டிக் உருண்டைகள் சிதறிக் கொண்டிருந்தன. மணலில் புதைந்து போனதால் அவற்றைப் பார்ப்பதே கடினமாக இருந்தது,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பது இனி பயனளிக்காது என முடிவு செய்யப்பட்டது. எனவே, அவர்களின் பணி நிறுத்தப்பட்டு, அரசு ஏற்பாடு செய்த உள்ளூர் துப்புரவுக் குழுக்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
அதே நேரத்தில், பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்) விலங்குகளுக்கு ஏற்கனவே தீங்கு விளைவிப்பதோடு, கசிவு அல்லது வேறு மாசு மூலங்களால் இன்னும் அதிகமான நச்சுத்தன்மை பெற்று மாசடைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்தனர்.
அடுத்த சில ஆண்டுகளில், அவர்கள் மாதிரிகளைச் சேகரித்து, காலப்போக்கில் ஏற்படும் தாக்கங்களைக் கண்டறிய முயன்றனர்.
பிபிசி நடத்திய புலனாய்வு
2024 நவம்பரில், பிபிசி மற்றும் வாட்டர்ஷெட் புலனாய்வுகள் 20க்கும் மேற்பட்ட மாதிரிகளை மான்செஸ்டர் பெருநகர பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் நிபுணத்துவம் பெற்ற தடயவியல் வேதியியலாளர்கள் குழுவிற்கு அனுப்பின.
தீயில் எரிந்த பிளாஸ்டிக் உருண்டைகள் மிகவும் மாசுபட்டிருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர். அவை ஆர்சனிக், ஈயம், காட்மியம், தாமிரம், கோபால்ட், நிக்கல் போன்ற நச்சுத்தன்மையுள்ள உலோகங்களை வெளியிடுகின்றன. இவை நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தானவை.
“இன்னும் சுற்றி வரும் துகள்கள் சுற்றுச்சூழலில் இருந்து மாசுபாட்டை உறிஞ்சி, மேலும் நச்சுத்தன்மையுடையதாக மாறுகின்றன” என்றும், “அவற்றை கடல்வாழ் உயிரினங்கள் உட்கொள்ளும் போது, மாசுபாட்டை அவற்றுக்குள் பரப்பும்”என்றும் மெக்சன் கூறுகிறார்.
பேரழிவை ஏற்படுத்திய கப்பல் விபத்து நடந்த இடம் மற்றும் அதற்கு அருகிலுள்ள நீர்கொழும்பு தடாகத்தில் பிடிக்கப்பட்ட மீன்களில், கப்பலின் சரக்குகளிலும், பிளாஸ்டிக் உருண்டைகளிலும் இருந்த அதே மாசுபாடுகள் கண்டறியப்பட்டன.
அதேபோல் அந்த விபத்தின் போது கண்டுபிடிக்கப்பட்ட அபாயகரமான உலோகங்கள் சிலவும் மீன்களில் காணப்பட்டன. அவை பாதுகாப்பான வரம்பை மீறியிருந்தன.
இந்தப் பேரழிவு மாசுபாட்டின் மூலமாக இருக்கலாம்.
ஆனால் அதை நேரடியாக உறுதிப்படுத்த முடியாது. ஏனென்றால், மீன்கள் பிளாஸ்டிக் உருண்டைகளை உண்டனவா, எத்தனை உருண்டைகளை உண்டன, அல்லது மாசுபாடு வேறு மூலங்களில் இருந்து வந்ததா என்பது தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
“ஆனால் அந்த கடல் சூழலில் ஏற்கனவே உள்ள மாசுபாட்டுடன் சேரும்போது, இது சுற்றுச்சூழலுக்கும், அந்த கடலில் வாழும் உயிரினங்களை உணவுக்கான ஆதாரமாக நம்பியிருக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று மெக்சன் கூறுகிறார்.
உள்ளூர் மீனவர்கள் கூறுவது என்ன?
உள்ளூர் மீனவர்கள் இந்த பேரழிவிற்கும், மீன்களின் எண்ணிக்கை குறைவதற்கும் தொடர்பு உள்ளது என்று நம்புகிறார்கள்.
“எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. கப்பல் மூழ்கிய இடத்திலிருந்து இங்கு வரைக்கும், புதிய இளம் மீன்கள் கிடைப்பதே இல்லை,” என்று மீனவர் ஜூட் சுலந்தா கூறுகிறார்.
ஆனால், கடலில் மூழ்கிய கப்பல் மற்றும் குப்பைகளை அகற்ற 130 மில்லியன் டாலருக்கும் மேல் செலவிட்டோம் என கப்பலின் உரிமையாளரான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் லிமிடெட் கூறுகிறது.
மேலும் கடற்கரையில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காகவும், மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகவும் இலங்கை அரசாங்கத்திற்கு 20 மில்லியன் டாலருக்கும் அதிகமாக செலுத்தியுள்ளதாகவும் அது கூறுகிறது.
கரையோரப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் பொறுப்பை இலங்கை அரசு ஏற்றுள்ளது என்றும்,
அந்த செயல்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியான பாதிப்புகள் குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.
ஆனால், பிரிட்டன் கடல்சார் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவால் வரம்பிடப்பட்ட, கப்பல் உரிமையாளர் செலுத்திய தொகை நீண்டகால சேதத்தை ஈடுசெய்யப் போதாது.
எனவே, அந்த வரம்பை நீக்கவும், இன்னும் அதிகமான இழப்பீடு பெறவும் சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
கடந்த வியாழக்கிழமையன்று , இலங்கை உச்ச நீதிமன்றம், பேரழிவால் நாடு அனுபவித்த நீண்டகால பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சேதங்களுக்கு ஆரம்பகால இழப்பீடாக 1 பில்லியன் டாலர்களை நிறுவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவுக்கு வரம்பு உள்ளது. ஏனெனில், எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் உள்ள சிங்கப்பூர் மீது உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.
மறுபுறம், இந்தத் தீர்ப்பால் மிகவும் ஏமாற்றமடைந்ததாகவும், அடுத்த கட்ட நடவடிக்கையை மதிப்பிடுவதற்காக தங்கள் சட்ட ஆலோசகர்கள், காப்பீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் அதை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் தெரிவித்துள்ளது.
கப்பல் நிறுவனம் கூறுவது என்ன?
வனவிலங்குகளின் இழப்பு, சுற்றுலா, மீன்பிடித்தல் மற்றும் கப்பல் எரிந்தபோது வெளியான நச்சுப் புகையால் உள்ளூர்வாசிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தப் பேரழிவின் மதிப்பு 6 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று சேதத்தை மதிப்பிடுவதற்கான விஞ்ஞானிகள் குழுவிற்குத் தலைமை தாங்கிய ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பொருளாதார நிபுணர் பேராசிரியர் பிரசாந்தி குணீர்தேனா கூறுகிறார்.
“வளிமண்டலத்தில் டையாக்ஸின் மற்றும் ஃபுரான்” என்ற புற்றுநோய் உண்டாக்கும் நச்சுப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. “இவை சுமார் 70 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம்” என்கிறார் பேராசிரியர் குணீர்தேனா.
ஆனால் கப்பல் நிறுவனம் இந்த மதிப்பீட்டை நிராகரிக்கிறது.
கடலில் ஏற்பட்ட கசிவுகளை மதிப்பீடு செய்யும், கப்பல் துறையால் நிதியளிக்கப்படும் அமைப்பான சர்வதேச டேங்கர் உரிமையாளர்கள் மாசுபாடு கூட்டமைப்பை (ITOPF) இந்த விவகாரத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
அந்த அமைப்பு, “இந்த அறிக்கை தெளிவாக இல்லை, அதில் சரியான தகவல்களும் இல்லை. நம்பத்தகுந்த அறிவியல் ஆதாரமின்றி உள்ளது” என தெரிவித்துள்ளது.
தானும், அதன் குழுவினரும் “அமில கசிவை கையாள்வதில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றியதாகவும், அதே நேரத்தில் அனைத்து பாதுகாப்பு மற்றும் அவசரகால நெறிமுறைகளையும் பின்பற்றியதாகவும்” கப்பல் உரிமையாளர் கூறியுள்ளார்.
மறுபுறம், கப்பல் தங்கள் கடற்பரப்பை வந்தடையும் வரை, அதன் பிரச்னைகள் குறித்து தெரியாது எனவும், தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை எனவும் கொழும்பு துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கை எனும் தீவு தேசத்தின் உயிர்நாடியாக இருப்பது கடல்.
அதன் அழகிய தங்க நிறக் கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றன, மேலும் பல தலைமுறைகளாக மீன்பிடித் தொழில் அந்நாட்டிற்கு உணவளித்து வருகிறது.
ஆனால், தனது தொழிலுக்கு இனி எதிர்காலம் இல்லை என்று கவலைப்படுகிறார் மீனவர் சுலந்தா.
“பலர் தங்கள் படகுகளை விற்று வெளிநாடு செல்ல முயற்சிக்கிறார்கள். பலர் சோர்வடைந்துவிட்டனர். உண்மையில், என் மகன் தான் தற்போது என்னுடன் வேலை செய்கிறார். அவனும் ஒரு மீனவர்”என்று கூறும் சுலந்தா,
“ஆனால் அவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே பல வருடங்கள் ஆகிவிட்டன. எங்களுக்கு நீதி கிடைத்திருக்க வேண்டும் என்றால், இந்நேரம் கிடைத்திருக்கும்” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு