0
இலங்கையைப் பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்றும் மாற்றமின்றி தொடர்கின்றது என்று பேராசிரியர் இந்துராகரே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு இதற்காகப் பல்வேறு உத்திகளைத் கையாள்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொக்காவில் தாக்குதலின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே பேராசிரியர் இந்துராகரே தம்மரதன தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு ஒரு தசம புள்ளிக் கூட மாறவில்லை. இந்தியா இப்போது இலங்கைக்கு 300 பில்லியன் ரூபா கடன் நிவாரணம் வழங்கப் போகின்றது.
இலங்கை இந்தியாவுக்குச் செலுத்த வேண்டிய 1.7 பில்லியன் டொலர்களை மீள அறவிடாமல் நமது பெரிய சகோதரர் கடன் நிவாரணம் வழங்கப் போகின்றார்.
புலம்பெயர் மக்களைப் பயன்படுத்தியேனும், அப்பாவித் தமிழ் மக்களைப் பயன்படுத்தியேனும், தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியேனும், நமது நாட்டைப் பொருளாதார ரீதியாகவோ, பிராந்திய ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஒரு நாடாக நிலைகுலைத்து இறுதியில் 29 ஆவது இந்திய மாநிலமாக உருவாக்கி, அதன் பின்னர் கிழக்கு மற்றும் வடக்கை உடைத்த உடனேயே 30ஆவது இந்திய மாநிலமாக உருவாக்கும் திட்டமே இடம்பெறுகின்றது .” – என்றார்.