1
இந்தியா – தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் – கீழ்புத்துப்பட்டு, திருப்பூர் மாவட்டம் – திருமூர்த்தி நகர், சேலம் மாவட்டம் – தம்மம் பட்டி, தருமபுரி மாவட்டம் – நாகாவதி அணை மற்றும் கேசர்குளி அணை, விருது நகர் மாவட்டம் – கண்டியாபுரம் ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களிலிலேயே புதிதாக 729 வீடுகள் கட்டப்பட்டன.
பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் 38 கோடியே 76 இலட்சம் இந்திய ரூபாய் செலவில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இவ்வீடுகளை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திங்கட்கிழமை (07) உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார்.
மேலும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 36 கோடியே 62 இலட்சம் இந்திய ரூபாய் செலவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம், 17 கோடியே 52 இலட்சத்து 33 ஆயிரம் இந்திய ரூபாய் செலவில் 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 65 இலட்சத்து 76 ஆயிரம் இந்திய ரூபாய் செலவில் 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்களும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் இன்றைய தினம் திறந்துவைத்த கட்டிடங்களை அமைக்க மொத்தம் 54 கோடியே 80 இலட்சத்து 10 ஆயிரம் இந்திய ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.