1
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘அடுத்த அத்தியாயம்’ (The Next Chapter) திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய அணியின் தலைமைப் பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தத்தை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் புதுப்பித்துள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமருக்கும் தலைமைப் பயிற்றுநர் அல்முத்தய்ரிக்கும் இடையில் நடைபெற்ற இலங்கை கால்பந்தாட்டத்தின் எதிர்கால இலக்கு மற்றும் லட்சியங்கள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, தலைமைப் பயிற்றுநரின் அர்ப்பணிப்பு, தொழில்முறைத்தன்மை மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் பெற்றுக்கொடுத்த சிறந்த பெறுபேறுகளுக்கு ஜஸ்வர் உமர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
மேலும், இலங்கை காலப்தாட்ட சம்மேளனத்தின் மூலோபாய அபிவிருத்தி கட்டமைப்பான ‘அடுத்த அத்தியாயம்’ திட்டத்தின் கீழ் தேசிய அணி அடைய எதிர்பார்க்கும் புதிய இலக்குகள் மற்றும் செயல்திறன் இலக்குகளையும் அவர் விவரித்தார்.
பயிற்றுநர் அல்முத்தய்ரி தனது முதலாவது பதவிக் காலத்தை குறிப்பிடத்தக்க வெற்றியுடன் நிறைவு செய்ததுடன், சர்வதேச அரங்கில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கும் உதவினார்.
FIFAவின் அணிகளுக்கான தரவரிசையில் 205ஆம் இடத்தில் இருந்த இலங்கை, அவரது பயிற்றுவிப்பின் கீழ் பிரமிக்கத்தக்க வெற்றிகளை ஈட்டி18 இடங்கள் முன்னேறி 187ஆவது இடதுக்கு முன்னேறியுள்ளது. மிகக் குறுகிய காலத்திற்குள் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் நேர்மறையான பெறுபேறுகளையும் இலங்கை பதிவு செய்துள்ளது.
அல்முத்தய்ரியின் முதலாவது பதவிக் காலத்தில் எட்டப்பட்ட சாதனைகள் மற்றும் முக்கிய செயல்திறன் இலக்குகளின் வெற்றிகரமான நிறைவு குறித்து திருப்தி அடைவதாக ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.
அவரது ஆளுமை மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றின் மீது சம்மேளனம் கொண்டுள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டும் வகையில், அவருக்கு புதிய ஒப்பந்தத்தை வழங்குவதில் சம்மேளனம் எவ்வித தயக்கமும் காட்டவில்லை என அவர் மேலும் கூறினார்.
புதிய ஒப்பந்தத்திற்கு அமைய பயிற்றுநர் அல்முத்தய்ரி, அடுத்துவரும் சர்வதேச போட்டிகளுக்கு இலங்கை அணியைத் தயார்படுத்துவது, தேசிய அணியின் வெற்றிக்கான சம்மேளனத்தின் நீண்டகால தொலைநோக்கு பார்வை உட்பட, சம்மேளனத்தின் புதிய தொழில்நுட்ப மற்றும் போட்டி இலக்குகளை செயல்படுத்துவது ஆகிய முக்கிய விடயங்களுக்கு தலைமை தாங்குவார்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தனது அடித்தளத்தை தொடர்ந்து பலப்படுத்தி, தனது போட்டித்தன்மையை அதிகரித்து, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் அதிக அங்கீகாரத்தையும் வெற்றியையும் கட்டியெழுப்பி வருகிறது. இதன் காரணமாக புதுப்பிக்கப்பட்ட இந்த ஒப்பந்தமானது ‘அடுத்த அத்தியாயம்’ என்ற முயற்சியின் மற்றொரு முக்கிய நகர்வை குறிக்கிறது.