• Sun. Sep 22nd, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது

Byadmin

Sep 22, 2024


இலங்கை முழுவதும் இன்று (21) இரவு 10 மணிமுதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்று இரவு வெளியாகின்ற நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி இலக்கம் 2402/23க்கு அமைய நாடளாவிய ரீதியில் மற்றும் உள்ளூர் கடற்பரப்பிற்கு உட்பட்டு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மிகவும் அமைதியான சூழல் நிலவுகின்ற போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் தமது வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் அடையாள அட்டைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்தப்படலாம்.

வெளிநாட்டிற்குச் செல்வதற்காக விமான நிலையம் செல்லும் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறும் அனைவரும் தங்கள் விமான டிக்கெட் அல்லது ஆதார ஆவணங்களை ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரமாகப் பயன்படுத்தலாம்.

இதற்கு மேலதிகமாக, அத்தியாவசிய சேவைகளை நடத்தும் நிறுவனங்களின் தொடர்புடைய ஊழியர்களுக்கு, அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டை அல்லது பொருத்தமான ஆவணம் பயன்படுத்த முடியும்.

மேலும், அந்த ஆவணம் மற்றும் தொடர்புடைய நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்களை பொலிஸாரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனை மீறும் எந்தவொரு செயலையும் செய்ய வேண்டாம் என அனைத்து பொதுமக்களிடமும் இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin