உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பத்திரிகையாளர்களை சந்திந்துள்ளார்.
அப்போது அவர் உக்ரைனுடன் புதிய அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் நாங்கள் தயார். ஆனால், எங்களுடைய இலட்சியங்கள் நிறைவேறும் வரை போர்த் தாக்குதல் தொடரும்.
“நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதைத் தவிர்க்க வேண்டும். எல்லை மீறி ஆக்கிரமித்த பகுதிகளை சுதந்திரமாக அறிவிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளுடனான தொடர்பைத் துண்டித்து, இராணுவத்தைக் குறைத்தால் நாங்கள் புதிய அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார்” எனக் குறிப்பிட்டார்.
டிரம்ப்பின் எச்சரிக்கை
இதேவேளை, ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, ரஷ்யாவை உடனடியாக போர் தாக்குதலை நிறுத்துமாறு டிரம்ப் தற்போது அறிவுறுத்தியுள்ளார்.
இதற்காக 50 நாட்கள் கெடு விதித்துள்ளார். அதனை மீறி போர் தாக்குதலை நீடித்தால் கடுமையான பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போரின் ஆரம்பம்
ஐரோப்பிய இராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டி வந்த நிலையில், ரஷ்யா ஜனாதிபதி புதின் உக்ரைனுடன் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நிதி கொடுத்தும், ஆயுதங்கள் கொடுத்தும் செய்தும் உதவி வருகின்றன.
ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியா படைவீரர்களை அனுப்புகிறது. சீனா மறைமுகமாக உதவுவதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் – ரஷ்ய போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.
The post இலட்சியங்கள் நிறைவேறினால் உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது ரஷ்யா! appeared first on Vanakkam London.