• Thu. Apr 16th, 2026

24×7 Live News

Apdin News

இலண்டன் நுண்கலை அகாடமிக்கான ஆசிரிய டிப்ளோமா தேர்வு அவைக்காற்றுகை

Byadmin

Apr 16, 2026


 

இலண்டன் ஹாரோ ஐயப்பன் மண்டபத்தில் ஏப்ரல் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நுண்கலை அகாடமியின் ஆசிரிய டிப்ளாமா பட்ட படிப்பிற்கான அவைக்காற்றுகைத் தேர்வு நடைபெற்றது. இலண்டன் நுண்கலை அகாடமி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஆசிரிய டிப்ளோமா பட்டப்படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள், இதனுடன் ஒரு பிரதான பல்கலைக்கழகப் பட்டப் படிப்பை இணைத்துக்கொண்டால், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நேரடியாக முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் ஸ்ரீமதி திலகசக்தி ஆரமுதன் அவர்களின் மாணவர்களான முறையே செல்வி ஆரிகா கேதீஸ்வரன், செல்வி அஸ்வன்யா செந்திராஜா, செல்வன் விஷ்ணு தேவ் பிரபாகர் மற்றும் செல்வன் கேதாரன் சரவணபவன் ஆகிய நான்கு மாணவர்களும் கச்சேரி அமைப்பிற்கு ஏற்ப ஒவ்வொருவராகச் சுமார் ஒன்றரை மணிநேர இசைச் சமர்ப்பணத்தைச் செய்தார்கள். ஆற்றுகையை வெளிப்படுத்திய மாணவர்கள் ஹரோ தமிழ்ப் பாடசாலையைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிருதங்க வித்துவான் ஸ்ரீ காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி, வயலின் வித்துவான் ஸ்ரீ சிதம்பரநாதன் ஜலதரன் ஆகியோரின் அனுசரணையுடன், ஸ்தாபகர் கலாநிதி இரத்னம் நித்தியானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதற்கான தேர்வாளர்களாக இலண்டனைச் சேர்ந்த சங்கீத வித்துவான் ஸ்ரீமதி சிவதாரணி சகாதேவன் மற்றும் சங்கீத வித்துவான் ஸ்ரீமதி சரஸ்வதி குகதாஸ் ஆகியவர்கள் கடமையாற்றினார்கள். இசைக் கச்சேரி நிகழ்த்தியவர்கள் வயதில் பாலகர்களாக இருந்தாலும், பழுத்த அனுபவம் மிக்க ஆசான்கள் போன்று பல சவாலான உருப்படிகளை லாவகமாக அனுபவித்துப் பாடியது செவிக்கும் கண்களுக்கும் பெரு விருந்தாக அமைந்தது. இந்த அவைக்காற்றுகைத் தேர்வு இசைக்கச்சேரியை அனுபவித்த கலாரசிகர்கள் குரு திருமதி திலகசக்தியையும் அவரது மாணவர்களையும் நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள்.

பிருந்தா – இலண்டன்

By admin