பட மூலாதாரம், Getty Images
சிரியாவில் பல்வேறு மதக் குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. புதிய அரசாங்கம் பிளவுபட்ட பகுதிகளைக் கட்டுப்படுத்த முயலும் வேளையில், இன்னமும் நாட்டின் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.
ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை, ட்ரூஸ் சிறுபான்மையைச் சேர்ந்த ஒரு வணிகர் கடத்தப்பட்ட செய்தி, தெற்கு சிரியாவில் ட்ரூஸ் போராளிகள், சுன்னி பெடோயின் போராளிகள் இடையே மோதல் ஏற்பட வித்திட்டது.
பின்னர் ஜூலை 15ஆம் தேதி, ட்ரூஸ் மக்களைப் பாதுகாக்கவும் சுவெய்தாவில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அரசு ஆதரவுப் படைகளை அழிக்கவும் தனது படைகள் முயல்வதாகக் கூறி இஸ்ரேல் இதில் ராணுவ ரீதியாகத் தலையிட்டது. சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (SOHR) கூற்றுப்படி சுவெய்தாவில் ஞாயிறு முதல் குறைந்தது 350 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல டஜன் பேர் உயிர்களைப் பறித்த ட்ரூஸ் போராளிகள் மற்றும் சிரியாவின் புதிய பாதுகாப்பு படையினர் இடையே ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த வன்முறைக்குப் பிறகு நிகழ்ந்த முதல் வன்முறை இது.
இதற்கு முன்னர், மார்ச் மாதத்தில் சிரியாவின் கடலோர மாவட்டங்களில் நடந்த மோதல்களில் முன்னாள் ஆட்சியாளர் பஷர் அல்-அசாத் சார்ந்த அலவைட் சிறுபான்மையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
பத்து ஆண்டுகளுக்கும் மேலான உள்நாட்டுப் போரின் விளைவுகள், அண்மையில் 2024 டிசம்பரில் இஸ்லாமியவாதிகள் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸை கைப்பற்றியது ஆகியவற்றின் விளைவுகளை சிரியா சமாளிக்கப் போராடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போதைய கொடிய கலவரங்கள் மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் சிரியாவின் பாதுகாப்பை மீண்டும் சீர்குலைக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஜிஹாதியான சிரியாவின் தற்போதைய தலைவர் அகமது அல்-ஷரா, சிரியாவின் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாக உறுதி அளித்துள்ளார்.
யார் இந்த ட்ரூஸ் மக்கள்?
பட மூலாதாரம், Getty Images
சிரியா, லெபனான், இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் குன்றுகளில் வாழும் அரபு மொழி பேசும் இன-மத சிறுபான்மையினர்தான் ட்ரூஸ் மக்கள். அதற்கே உரிய தனித்துவமான அடையாளமும் நம்பிக்கைகளும் உள்ள ட்ரூஸ் மதநம்பிக்கை, ஷியா இஸ்லாமின் ஒரு பிரிவாகும்.
மொத்தமுள்ள சுமார் பத்து லட்சம் ட்ரூஸ் மக்களில் பாதி பேர் சிரியாவில் வசிக்கின்றனர். அங்குள்ள மக்கள்தொகையில் அவர்கள் 3 விழுக்காடு அளவு உள்ளனர். இஸ்ரேலில் உள்ள ட்ரூஸ் சமூகம், ராணுவ சேவையில் பங்கேற்பதால், இஸ்ரேல் அரசுக்கு விசுவாசமானதாகக் கருதப்படுகிறது. இஸ்ரேல் மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகளில் சுமார் 1,52,000 ட்ரூஸ் மக்கள் வாழ்கின்றனர்.
ட்ரூஸ் மக்கள் வரலாற்று ரீதியாக சிரியாவின் அரசியல் படிநிலையில் நிலையற்ற சூழலில் இருந்து வந்துள்ளனர். சிரியாவின் 14 ஆண்டுகள் உள்நாட்டுப் போரின்போது, ட்ரூஸ் மக்கள் தெற்கு சிரியாவில் தங்களது சொந்தப் படைகளை இயக்கினர்.
டிசம்பர் மாதத்தில் பஷர் அல் அசாத் வீழ்ந்த பின்னர், தெற்கு சிரியாவின் மீது அதிகாரத்தை நிலைநிறுத்தும் அரசின் முயற்சிகளை ட்ரூஸ் மக்கள் எதிர்த்து வந்துள்ளனர். சிரியாவில் உள்ள ட்ரூஸ் பிரிவுகள், புதிய ஆட்சியாளர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது முதல் முற்றிலும் நிராகரிப்பது வரை பல்வேறு அணுகுமுறைகளைக் கொண்டுள்ளன. பலர் சுவெய்தாவில் அதிகாரப்பூர்வ சிரியா பாதுகாப்புப் படைகளின் இருப்பை எதிர்ப்பதுடன் சிரியா ராணுவத்தில் இணைவதற்கு மறுத்து, உள்ளூர் ஆயுதப் படைகளை நம்பியுள்ளனர்.
ஷார்ட் வீடியோ
ட்ரூஸ் மக்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களைக் கண்டித்த சிரியா அரசு, தெற்கு சிரியாவில் சட்டம் ஒழுங்கைச் சீரமைப்பதாக உறுதியளித்தது. இருந்த போதிலும், அரசுப் படைகள் சிறுபான்மை மக்களைத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேலும், ட்ரூஸ் மக்கள் அரசுப் படைகளால் மொத்தமாகக் கொல்லப்பட்டதை பிரிட்டனை சேர்ந்த சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் (SOHR) ஆவணப்படுத்தியுள்ளது. இத்தகைய செய்திகள் ட்ரூஸ் சமூகத்தைச் சேர்ந்த சிலரிடம் டமாஸ்கஸ் அதிகாரிகள் மீதான நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது.
அசாத் வீழ்த்தப்பட்டதற்குப் பின், சிரியாவின் சிறுபான்மையினருடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள இஸ்ரேல் அதன் வடக்கு எல்லைக்கு அருகே இருக்கும் ட்ரூஸ் சமூகத்துடன் தொடர்புகொள்ள முயன்று வருகிறது. சிரியா மற்றும் அரசுப் படைகளைத் தாக்கும் அதே நேரம் குர்திஷ், ட்ரூஸ் மற்றும் அலவைட் உள்ளிட்ட சிரியாவில் இருக்கும் சிறுபான்மையினரின் பாதுகாவலராக இஸ்ரேல் தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்கிறது.
மே மாதம் நடைபெற்ற மதமோதலின்போது, ட்ரூஸ் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான எச்சரிக்கை என்று கூறி டமாஸ்கஸில் இருக்கும் அதிபர் மாளிகைக்கு அருகே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், சிரியா மற்றும் லெபனானில் உள்ள சில ட்ரூஸ் தலைவர்கள், இஸ்ரேல், தனது விரிவாக்கத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக மதப் பிரிவினைகளைத் தூண்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்?
தெற்கு சிரியாவில் ஆயுதமற்ற பகுதி ஒன்றை உருவாக்க இஸ்ரேல் முயன்று வரும் நிலையில், அந்தப் பகுதிக்கு சிரியா ராணுவம் அனுப்பப்படுவதைத் தடுப்பதற்கான ஓர் எச்சரிக்கையாக சமீபத்திய தாக்குதல்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, அதன் வடக்கு எல்லையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகளுக்கு அருகில் இஸ்லாமியவாத ஆயுதப் படையினரின் இருப்பு குறித்து இஸ்ரேல் அச்சம் கொண்டுள்ளது.
ஜூலை 15ஆம் தேதி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் சுவெய்தாவில் இருக்கும் பாதுகாப்புப் படைகளையும், வாகனங்களையும் மட்டும் குறிவைத்தாலும், ஜூலை 16ஆம் தேதி இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை விரிவுபடுத்தி, டமாஸ்கஸில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம், சிரியாவின் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியது. சிரியா இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளது.
டிசம்பர் 2024இல் சிரியா முழுவதும் நூற்றுக்கணக்கான ராணுவ தளங்களை அழித்து சிரியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோலன் குன்றுகளில் ஐ.நா-வின் கண்காணிப்பில் இருந்த பப்ஃபர் மண்டலத்தைக் கைப்பற்றிய நிகழ்வுக்குப் பிறகு சிரியாவில் இஸ்ரேலின் மிகக் கடுமையான தாக்குதலாக இது இருக்கிறது. சிரியா ராணுவ ஆற்றலை வளர்த்துக்கொள்வது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படும் நிலையில் அதைத் தடுப்பதற்காக இஸ்ரேல் பலமுறை சிரியாவை தாக்கியுள்ளது.
“டமாஸ்கஸில் எச்சரிக்கைகள் முடிந்துவிட்டன. இனி வலிமிகுந்த அடிகள் வரும்,” என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், டமாஸ்கஸில் தாக்குதல்கள் தொடங்கிய உடனே தனது சமூக ஊடக பக்கத்தில் எழுதினார்.
சிரியாவின் ராணுவ தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அந்தக் கட்டடத்துக்கு எதிரே உள்ள கட்டடத்தில் செயல்படும் சிரியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலின் ஸ்டூடியோவில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சி நெறியாளர் ஸ்டூடியோவை விட்டு தப்பியோடும் காட்சி அதில் பதிவானது.
உலகின் பிற நாடுகள் என்ன கூறியுள்ளன?
இந்த வன்முறை குறித்து அமெரிக்கா “மிகவும் கவலை” கொண்டிருப்பதாகத் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, “இந்த கவலையளிக்கும் பயங்கரமான சூழலை இன்றிரவு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக்கொண்டுள்ளோம்,” என்று ஜூலை 16ஆம் தேதி அறிவித்தார்.
சிரியா அரசு மற்றும் பாதுகாப்புப் படைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு லெபனான், இராக், கத்தார், ஜோர்டான், எகிப்து, குவைத் ஆகிய அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சிரியா மீதான “அப்பட்டமான தாக்குதல்” என விவரித்து செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் “எதிர்பார்க்கப்பட்டதுதான்” என இரான் விமர்சித்துள்ளது.
அசாத் ஆட்சிக்குப் பிந்தைய சிரியாவின் முக்கியக் கூட்டாளிகளில் ஒன்றான துருக்கி இந்தத் தாக்குதல்களை “அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் சிரியாவின் முயற்சிகளைச் சீர்குலைக்கும் நடவடிக்கை” என்று விவரித்தது.
ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், சுவெய்தா மற்றும் டமாஸ்கஸில் இஸ்ரேலின் “பதற்றத்தை அதிகரிக்கும்” தாக்குதல்களைக் கண்டித்தார்.
அடுத்து என்ன நடக்கலாம்?
இந்த வன்முறை, சிரியாவின் போருக்குப் பிந்தைய பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழலில் இருக்கும் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. சமீபத்திய வன்முறைகள், சிரியா முழுவதும் மீண்டும் மதப் பிரிவு தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளன.
சிரியாவில் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டவும், பல்வேறு குழுக்களை ஒன்றிணைக்கவும் ஷரா முயன்றுகொண்டிருக்கும் நிலையில், இஸ்லாமியவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் அவரது அரசு, பல ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போரால் தூண்டப்பட்ட ஆழமான மதப் பிளவுகளை அவரால் சீர்செய்ய முடியுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இஸ்ரேல் தாக்குதல்களுடன் மதப் பிரிவு மோதல்களும் நிகழ்வது, போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான முயற்சிகளை சீர்குலைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, புதிய ஆட்சியாளர்களையும் அவர்களுடன் தொடர்புடைய தெற்குப் பகுதி இஸ்லாமியவாத ஆயுதப் படையினரையும் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பார்த்து, புதிய ஆட்சியாளர்களால் ஒதுக்கப்பட்டதாக உணரக்கூடிய குழுக்கள் இருக்கின்றன. இஸ்ரேல் அதன் பங்குக்கு, அந்தக் குழுக்களுடன் நட்புறவை உருவாக்க முயலும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு