பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ஜார்ஜ் சாண்டேமன்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
“நானும் அவர்களில் ஒருவர் தான். நானும் என்னுடன் தலையணையை எடுத்துச் செல்வேன்”என்கிறார் மருத்துவர் கிறிஸ் மெக்கார்த்தி.
ஒரு கைக்குக் கீழே தலையணையை வைத்துக்கொண்டு, மறுகையில் சூட்கேஸை இழுத்தபடி செக்-இன் பகுதிக்குச் செல்பவர்களை விமான நிலையத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம்.
அல்லது நீங்களே அப்படிப்பட்ட ஒருவராக இருக்கலாம்.
மென்மையாகவும், அதில் தலை வைத்து படுக்கும்போது வசதியாகவும், அதே நேரத்தில் காலையில் உருண்டையாக சுருங்கிவிடாத அளவுக்கு உறுதியானதாகவும் இருக்கும் தலையணையுடன் நீங்கள் இணைந்திருக்கலாம்.
தான் அதிகம் எதிர்பார்ப்பவர் அல்ல என்று மெக்கார்த்தி உறுதியாகக் கூறுகிறார். அவர் ஒரு முன்னணி பிசியோதெரபிஸ்ட். தவறான தலையணை கழுத்து வலியை ஏற்படுத்தும் என்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார்.
அவர் தலையணையை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதில்லை.
அவர் தனது தலையணையை வெளிநாட்டுப் பயணங்களுக்குக் கொண்டு செல்வதில்லை. ஆனால், ஹோட்டலுக்குச் சென்றவுடன் அங்குள்ள தலையணைகளை மாற்றியமைக்கத் தொடங்கிவிடுவார்.
தூக்கத்துக்கு ஏற்றதாக இல்லாத தலையணையைக்கூட தூங்குவதற்கு ஏற்றதாக மாற்ற, பலமுறை முயற்சி செய்து பரிசோதித்த ஒரு வழியும் அவரிடம் உள்ளது.
உங்களுக்கான சரியான தலையணையைத் தேர்ந்தெடுப்பதற்கான அவரது வழிகாட்டி இதோ.
பட மூலாதாரம், Chris McCarthy
நீங்கள் எந்த நிலையில் தூங்குபவர்?
மான்செஸ்டர் ஸ்கூல் ஆஃப் பிசியோதெரபியில் இணைப் பேராசிரியராக இருக்கும் மெக்கார்த்தி, சரியான தலையணை என்பது நீங்கள் எந்த நிலையில் தூங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும் என்கிறார்.
பெரும்பாலானவர்கள் தூங்கும் நிலையை , பக்கவாட்டில், முதுகில் அல்லது குப்புறப் படுப்பது என மூன்று வகைகளில் ஒன்றாகப் பிரிக்கலாம் என்று அவர் பிபிசியின் ஸ்லைஸ்டு பிரட் பாட்காஸ்ட்டிடம் கூறுகிறார்.
குப்புறப் படுத்துத் தூங்குவதை மெக்கார்த்தி தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்.
ஏனெனில், நீண்ட நேரம் கழுத்து ஒரு பக்கமாகத் திரும்பிய நிலையில் இருக்கும்.
“இதனால் தசை அல்லது தசைநார் ஒன்று நீண்ட நேரம் இழுபட்டு, சிறிது பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்,” என்கிறார் அவர்.
“முதுகெலும்பு தொடர்பான வலிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பிசியோதெரபி துறையில் நல்ல ஒருமித்த கருத்து ஒன்று உள்ளது என்றால், அது குப்புறப் படுத்துத் தூங்கக்கூடாது என்பதுதான்.”
தலையணையைத் தேர்ந்தெடுக்கும்போது, முதுகில் படுத்துத் தூங்குபவர்கள் தங்களது முதுகுத்தண்டின் மேற்பகுதியில் உள்ள வளைவைக் கருத்தில் கொள்ள வேண்டும். வயதாகும் போது பலருக்கும் இந்த வளைவு இயற்கையாகவே அதிகரிக்கும்.
“உங்களுக்கு அதிக வளைவு இருந்தால், முதுகு மிகவும் நேராக இருப்பவரைவிட சற்று தடிமனான தலையணை உங்களுக்குத் தேவைப்படும்” என்கிறார் மெக்கார்த்தி.
ஒருக்களித்துப் படுத்துத் தூங்குபவர்களுக்கு முக்கியமான அளவீடு தோள்களின் அகலம். பொதுவாக, தோள்கள் அகலமாக இருந்தால், தடிமனான தலையணை தேவைப்படும். ஆனால், நீங்கள் பயன்படுத்தும் மெத்தையையும் கருத்தில் கொள்ள வேண்டும்
பட மூலாதாரம், Getty Images
உங்கள் மெத்தை எவ்வளவு மென்மையாக இருக்கிறது?
உங்கள் மெத்தைக்குள் எவ்வளவு ஆழமாக உடல் இறங்குகிறது என்பது, அதன் பிறகு உங்களுக்குத் தேவையான தலையணையின் உயரத்தில் “மிகப்பெரிய தாக்கத்தை” ஏற்படுத்தும் என்கிறார் மெக்கார்த்தி.
“தோள்கள் அகலமாக இருந்து, மிகவும் கடினமான மெத்தையில் படுத்தால், தடிமனான தலையணை தேவைப்படும்” என்று அவர் விளக்குகிறார்.
“மென்மையான மெத்தையில் படுத்தால், உங்கள் தோள் மெத்தைக்குள் அதிகமாக இறங்குவதால், மெல்லிய தலையணை தேவைப்படும்”என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஒருக்களித்துப் படுத்துத் தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது, முதுகில் படுத்துத் தூங்குபவர்களுக்கு இந்த விஷயம் அவ்வளவு முக்கியமானதல்ல. ஏனெனில், அவர்களின் உடல் மெத்தைக்குள் அதிகமாகப் புதைவதில்லை.
உங்கள் தலையணை மிகவும் தட்டையாக இருப்பதாக உணர்ந்தால், அதன் அடியில் மடித்த துண்டை வைக்குமாறு மெக்கார்த்தி பரிந்துரைக்கிறார். தலையணையின் உயரத்தைச் சரிசெய்ய, துண்டை எத்தனை முறை மடிக்க வேண்டும் என்பதை மாற்றிக்கொள்ளலாம்.
பின்னர், அந்த அளவைத் தோராயமாகக் கணக்கிட்டு புதிய தலையணையைத் தேர்வு செய்யலாம்.
எந்த வடிவம் சிறந்தது?
சிறப்பு வகை தலையணைகள் பெரும்பாலும் ‘வடிவமைக்கப்பட்டது’, ‘உடலுக்கு ஏற்றது’ அல்லது ‘எலும்பு நலனுக்கானது’ என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை எந்தளவுக்குப் பலனளிக்கும் என்பது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்று மெக்கார்த்தி கூறுகிறார்.
“தலையணையின் முன்பகுதி சற்று உயரமாக இருந்து, கழுத்துப் பகுதியைத் தாங்குவது ஒருக்களித்துப் படுத்துத் தூங்குபவர்களுக்கு உதவக்கூடும் என்பதற்குச் சில தரவுகள் உள்ளன. ஆனால், அவை மிகவும் வலுவான ஆதாரங்கள் அல்ல,” என்கிறார் அவர்.
தலையணையின் முன்பகுதி உயரமாக இருப்பது, நீங்கள் சிறப்பாகத் தூங்க உங்களுக்கு உதவுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள, மெக்கார்த்தி கூறும் துண்டு முறையை முயற்சி செய்யலாம். ஒரு துண்டைச் சுருட்டி, அதை உங்கள் தலையணைக்குக் கீழே வைக்கலாம்.
ஒருக்களித்துப் படுத்துத் தூங்குபவர்கள், முதுகு நேராக இருக்கும் வகையிலான நிலையைத் தேர்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்
முதுகுப் பகுதி கீழ் இருக்குமாறு படுத்துத் தூங்குபவர்களுக்காக, சில உற்பத்தியாளர்கள் நடுப்பகுதியில் பள்ளமாகவும், இருபுறமும் உயரமாகவும் இருக்கும் தலையணைகளை விளம்பரப்படுத்துகின்றனர்.
அது மக்களை நன்றாக தூங்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது என்கிறார் மெக்கார்த்தி. ஆனால், தனது நோயாளிகளில் சிலர் அந்தத் தலையணைகளை “சற்று சுற்றி அடைப்பது போன்ற உணர்வைத் தருவதாகக்” கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
மேலும், தலை பெரியதாகவும் கனமாகவும் இருப்பவர்களுக்கு தடிமனாகவும் உறுதியாகவும் இருக்கும் தலையணை தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இறகுத் தலையணையா அல்லது ஃபோம் தலையணையா ?
இறகு தலையணைகள் உங்கள் தலையிலிருந்து வெப்பத்தை வெளியேற்றுவதால், வெப்பமான இரவுகளில் அவை உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் என்கிறார் மெக்கார்த்தி.
ஆனால், குறிப்பாக தூங்கும்போது அதிகமாக புரண்டு படுபவர்களுக்கு, இரவு நேரத்தில் அவை தங்களது வடிவத்தை மாற்றிக்கொள்ளக்கூடும்.
“ஆரம்பத்தில் நல்ல, தட்டையான, நன்கு படிந்து சமமாக இருக்கும் தலையணை பின்னர் சாய்வான வடிவமாக மாறிவிடுகிறது. இதனால் உங்கள் கழுத்து மேல்நோக்கி வளைந்துவிடும்.”
ஹாலோ ஃபைபர் மற்றும் மைக்ரோஃபைபர் நிரப்பப்பட்ட தலையணைகள் வடிவத்தைச் சிறப்பாகத் தக்கவைத்துக்கொள்ளும். ஆனால், அவை பொதுவாக தலையில் இருந்து வெப்பத்தை வெளியேற்றும் திறன் குறைவாக இருக்கும் என்கிறார் மெக்கார்த்தி.
சில தலையணைகளின் கீழ்ப்பகுதியில் உறுதியான பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இது இரவு நேரத்தில் தலையணை தனது வடிவத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவும்.
காற்றோட்டத்துக்காக இடைவெளிகளைக் கொண்ட தனது ஃபோம் தலையணையை மெக்கார்த்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 50 பவுண்ட்களுக்கு வாங்கினார்.
அவர் பக்கவாட்டில் படுத்துத் தூங்குபவர் என்பதால், தலையணைக்குக் கீழே மடித்த துண்டை வைத்து அதன் உயரத்தைச் சரிசெய்துகொள்கிறார்.
சரியான தலையணையைத் தேர்ந்தெடுப்பது என்பது “ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப” என்பதுதான் என்று அவர் கூறுகிறார்.
மேலும், சில உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சோதனைக்காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மக்களை அவர் ஊக்குவிக்கிறார்.
“எல்லோருக்கும் அல்லது எல்லா தூங்கும் நிலைகளுக்கும் பொருத்தமான ஒரே ஒரு வடிவமைப்பு இருக்கவே முடியாது. இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். உங்களுக்கு ஏற்றவாறு அதை உருவாக்கிக்கொள்ள வேண்டும்”என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு