• Wed. Sep 30th, 2026

24×7 Live News

Apdin News

எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்படும் சுமையை குறைக்க 41 பில்லியன் ரூபா மானியம் | அரசாங்கம்

Byadmin

Sep 30, 2026


உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதன் பாரிய சுமையை நாட்டின் மக்கள் மீது நேரடியாக சுமத்துவதைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு 41 பில்லியன் ரூபாவை மானியமாக வழங்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மத்திய கிழக்கில் ஆரம்பமான போர்ச் சூழல் காரணமாக மார்ச் மாதம் முதல் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிகரிக்கத் தொடங்கின. இதன்போது ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் மக்கள் மீது சுமை விழாதவாறு திறைசேரியிலிருந்து 100 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதில் டீசல் லீற்றர் ஒன்றுக்கு 100 ரூபாவையும், பெற்றேல் லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாவையும் அரசாங்கம் மானியமாக ஏற்றுக்கொண்டதுடன், இதன் மூலம் 70 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டிருந்தது.

தற்போது போர்ச் சூழல் தொடர்ந்து நீடிப்பதாலும் உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்து வருவதாலும், அடுத்த மூன்று மாத காலத்திற்கு மேலும் 41 பில்லியன் ரூபாவை திறைசேரியிலிருந்து ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒக்டோபர் மாதத்துக்கு 15 பில்லியன் ரூபாவும், நவம்பர் மாதத்துக்கு 13.5 பில்லியன் ரூபாவும், டிசம்பர் மாதத்துக்கு 12.5 பில்லியன் ரூபாவும் மானியமாகப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இம்முறை ஒதுக்கப்பட்டுள்ள நிதி அளவுக்கு ஏற்ப டீசலுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். பெற்றோலுக்கு மானியம் வழங்கப்படமாட்டாது. எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் போது நாட்டின் பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் உயர்ந்து விடுவதைக் கருத்திற் கொண்டே அரசாங்கம் இந்த நிவாரணப் பங்களிப்பை வழங்குகிறது.

அதேவேளை, நாட்டில் எரிபொருள் இறக்குமதியில் எந்தவொரு தட்டுப்பாடோ அல்லது பிரச்சினையோ இல்லை. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் போதியளவு எரிபொருளைக் கையிருப்பில் வைத்துள்ளன. எனவே பொதுமக்கள் தேவையற்ற முறையில் வரிசைகளில் நிற்கவோ அல்லது எரிபொருளைச் சேமித்து வைக்கவோ தேவையில்லை. விலை மாற்றங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் தருணத்தில், எரிபொருளை விநியோகிக்காமல் முடக்கி வைக்கும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூட்டுத்தாபனத்துக்கு அதிகாரம் உள்ளது.

உலகச் சந்தை விலை அதிகரிப்பு காரணமாக, அரசாங்கம் பெருந்தொகை மானியத்தை வழங்கிய போதிலும் வரவிருக்கும் விலை திருத்தத்தின் போது டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலைகளில் குறிப்பிட்டளவு உயர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. லீற்றர் ஒன்றுக்கான நிவாரணத் தொகை மற்றும் புதிய விலைக் கணிப்பீடுகளை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விரைவில் உத்தியோக பூர்வமாக வெளியிடும் என்றார்.

By admin