• Wed. Sep 30th, 2026

24×7 Live News

Apdin News

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை காப்பாற்ற தீவிர நடவடிக்கை | அரசாங்கம்

Byadmin

Sep 30, 2026


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரின் உயிரைப் பாதுகாத்து, அவரை மீள நாட்டிற்கு அழைத்து வருவதற்காக அரசாங்கம் சாத்தியமான அனைத்து வழிகளிலும் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை(29) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சவுதியில் உள்ள இலங்கை இளைஞரைக் காப்பாற்றுவதற்காகத் திட்டமிடப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தற்போது நடைமுறை மட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சவுதி மன்னரிடம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைப்பதற்காக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் உதவி நாடப்பட்டுள்ளது. இதன் கீழ் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

அத்துடன், பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வக் கோரிக்கைக் கடிதத்துடன் சவூதி மன்னரைச் சந்தித்து கலந்துரையாடத் தயாராகி வருகிறது. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரின் போது, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து இது குறித்து மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சம்பவம் இடம்பெற்ற நாள் முதலே சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தேவையான இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு பிறிதொரு நாட்டின் சட்ட கட்டமைப்பிற்குட்பட்டே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை இளைஞரின் தரப்பிலிருந்தும், சவுதி அரசாங்கத்தின் தரப்பிலிருந்தும் என இரண்டு மேல்முறையீடுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அந்த இரண்டு மேல்முறையீடுகளையும் பரிசீலித்த பின்னரே இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும். எவ்வாறாயினும், குறித்த இலங்கை இளைஞரின் உயிரைப் பாதுகாத்து அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றார்.

By admin