0
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயர்வான தேர்ச்சியைப் பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்ற புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கமைய ‘நாகரிகமான பிரஜை – முன்னேற்றகரமான மனிதவளத்தை’ உருவாக்கும் நோக்கத்தை அடைவதற்காக உயர்தர பரீட்சையில் உயர்வான தேர்ச்சியைப் பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை சர்வதேச ரீதியாக உயர் தரப்படுத்தலுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்குத் தேவையான புலமைப்பரிசிலை வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனை மூலம் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச தரப்படுத்தல் குறிகாட்டிகளில் முதல் 500 இடங்களைப் பிடித்துள்ள, ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் 4 ஆண்டுகள் பட்டப்படிப்புக்களைப் பூர்த்தி செய்வதற்குப் புலமைப்பரிசில்களை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் முதலாம் கட்டத்தின் கீழ் 2025 ஆண்டுக்காக 20 தொடக்கம் 50 மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்;க்கப்படுகின்றது. உயர்தர பரீட்சையில் பிரதான பாடத்துறைகளின் கீழ் உயர்வான இசட் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
குறித்த விண்ணப்பங்களில் பொருத்தமான மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கூடிய தேர்ச்சிக்கான நேர்முகத் தேர்வுக் குழுவொன்றின் மூலம் மேற்கொள்ளப்படும்.
அதற்கமைய, உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.