• Tue. Jul 22nd, 2025

24×7 Live News

Apdin News

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு: ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார் | M.M. Srivastava takes oath as Chief Justice of chennai High Court

Byadmin

Jul 22, 2025


சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-வது தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், அந்த பதவியில் இருந்த மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணிமாறுதல் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நேற்று மாலையில் நடைபெற்ற நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திர இந்தியாவின் 36-வது தலைமை நீதிபதியாகவும் எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாண உறுதிமொழியை ஸ்ரீவஸ்தவா ஏற்றுக்கொண்டார். பின்னர், இருவரும் பரஸ்பரம் பூங்கொத்து வழங்கி, வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

உடல்நல குறைவு காரணமாக முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் உள்ளிட்டோரும், எதிர்க்கட்சி தலைவர் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் புதிய தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவாவுக்கு பூங்கொத்து வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள், அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட அரசு வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள எம்.எம்.ஶ்ரீவஸ்தவா, சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் கடந்த 1964-ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தவர். கடந்த 2009-ம் ஆண்டு சட்டீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், கடந்த 2021-ம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள ஸ்ரீவஸ்தவாவுக்கு, உயர் நீதிமன்ற வளாகத்தில் சம்பிரதாயப்படி இன்று காலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.



a2a_kit a2a_kit_size_32 addtoany_list" data-a2a-url="https://24x7livenewz.com/tamil/%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/8266030/" data-a2a-title="உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு: ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார் | M.M. Srivastava takes oath as Chief Justice of chennai High Court">

By admin