பட மூலாதாரம், ullstein bild Dtl./Getty Images
2026-ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 11 முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளை வரலாற்றிலேயே முதன்முறையாக, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா என மூன்று நாடுகள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன.
இந்த மூன்று நாடுகளின் 16 நகரங்களில் மொத்தம் 104 போட்டிகளின் முடிவில் உலகக் கோப்பையை வென்று மகுடம் சூடப்போவது யார் என்பது உலகிற்குத் தெரியும். இந்த போட்டிகள் அமெரிக்காவின் 11 நகரங்களிலும், மெக்சிகோவின் 3 நகரங்களிலும் மற்றும் கனடாவின் 2 நகரங்களிலும் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடரை நடத்துவதன் மூலம், உலகக் கோப்பையை மூன்று முறை நடத்தும் உலகின் முதல் நாடு என்ற பெருமையை மெக்சிகோ பெறுகிறது. இதற்கு முன்பு 1970 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டிகளை மெக்சிகோ நடத்தியுள்ளது.
கால்பந்து உலகின் மகுடத்திற்கான இந்தக் கடுமையான மோதலில், உலகெங்கிலும் இருந்து 48 அணிகள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முந்தைய ஏழு உலகக் கோப்பை போட்டிகளில், உலகின் சிறந்த 32 அணிகள் மட்டுமே பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, இந்த முறை உலகம் முழுவதிலுமிருந்து மேலும் 16 நாடுகளுக்கு உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த உலகக் கோப்பையின் 64 போட்டிகளுடன் ஒப்பிடும்போது, இந்த முறை அதிக போட்டிகள் விளையாடப்படுகின்றன.
இதனால், இந்த முறை குறைந்தது 600 கோடி பார்வையாளர்கள் இப்போட்டிகளைக் காண்பார்கள் என்று ஃபிஃபா கணித்துள்ளது. அதாவது, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கத்தாரில் நடந்த உலகக் கோப்பை தொடரை விட கூடுதலாக 100 கோடி பார்வையாளர்கள் இந்தப் போட்டிகளைக் கண்டு ரசிப்பார்கள்.
உலகக் கோப்பையின் இந்த 23-வது தொடரில் உலகின் நான்கு நாடுகளான கேப் வெர்டே, குராசோவா, ஜோர்டான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய கால்பந்து அணிகள் முதன்முறையாக பங்கேற்கின்றன.
ஆனால், இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு இதில் உற்சாகமடைய எதுவும் இல்லை, ஏனெனில் இதுவரை இந்தியா இந்த உலகக் கோப்பை தொடரில் ஒருமுறை கூட பங்கேற்றது இல்லை.
ஃபிஃபா, இந்தியா மற்றும் 1950…
பட மூலாதாரம், PABLO PORCIUNCULA/Getty Images
இந்தியா இதுவரை கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்றதே இல்லை என்றாலும், இந்தியாவும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது என்பது இன்றைய தலைமுறை விளையாட்டு ரசிகர்களில் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
இதை நம்புவது கடினமாக இருக்கலாம், ஆனால் உண்மை என்னவென்றால், 76 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1950-ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியக் கால்பந்து அணி பங்கேற்கத் தயாராக இருந்தது; இருப்பினும், இறுதியில் அதனால் பங்கேற்க முடியாமல் போனது.
இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த முடியவில்லை. 12 ஆண்டுகள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, 1950-இல் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெறவிருந்தன. பிரேசிலில் நடக்கவிருந்த இந்த உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் விளையாட வெறும் 33 நாடுகள் மட்டுமே சம்மதம் தெரிவித்திருந்தன.
தகுதிச் சுற்றுப் பிரிவு 10-ல் பர்மா (மியான்மர்) மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இடம் பெற்றிருந்தது. ஆனால், பர்மாவும் பிலிப்பைன்ஸும் தகுதிச் சுற்றில் இருந்து திடீரென விலகின.
இதன் காரணமாக, இந்தியா ஒரு போட்டி கூட விளையாடாமலேயே உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த வாய்ப்பு கைகூடியிருந்தது. உலகக் கோப்பை மேடையில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்திய அணி முதன்முறையாகப் பெற்றிருந்தது.
ஒருவேளை இந்தியா பங்கேற்றிருந்தால்?
பட மூலாதாரம், Getty Images
1950-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான இறுதிச் சுற்று அட்டவணை தயார் செய்யப்பட்டபோது, இந்தியா ‘பிரிவு-3’-ல் ஸ்வீடன், இத்தாலி மற்றும் பராகுவே ஆகிய நாடுகளுடன் இடம் பிடித்திருந்தது. ஒருவேளை இந்தியா இந்தத் தொடரில் பங்கேற்றிருந்தால், அதன் செயல்பாடு எப்படி இருந்திருக்கும்?
இது குறித்து, மறைந்த பிரபல கால்பந்து பத்திரிகையாளர் நோவி கபாடியா தனது உலகக் கோப்பை கால்பந்து வழிகாட்டி புத்தகத்தில், “அந்தக் காலகட்டத்தில் பராகுவே அணி மிகவும் பலமான ஒன்றாக இருக்கவில்லை. இத்தாலி அணியோ, ஒழுக்கமின்மை காரணமாகத் தனது 8 முக்கிய வீரர்களை அணியில் சேர்க்காமல் தவிர்த்திருந்தது. அந்த அணி எவ்வளவு மோசமான நிலையில் இருந்தது என்றால், பிரேசில் சென்றடைந்த பிறகு அந்த அணியின் பயிற்சியாளர் விட்டோரியோ போஸோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஸ்வீடன் அணி மட்டுமே இந்தியாவை விடப் பல மடங்கு சிறந்த நிலையில் இருந்தது. இந்தச் சூழ்நிலைகளை வைத்துப் பார்த்தால், இந்தியா தனது பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கக் கூடும்; அதோடு இந்திய அணிக்கு ஒரு மிகச்சிறந்த உலகளாவிய அனுபவமும் கிடைத்திருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்போது இந்திய கால்பந்தின் நிலை எப்படி இருந்தது?
பட மூலாதாரம், STRDEL/Getty Images
1950-களில் இந்திய கால்பந்து அணிக்கு பெரிய அளவில் சர்வதேச அனுபவம் இருந்திருக்கவில்லை. இருப்பினும், சிறந்த பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி என்ற நற்பெயரை அது பெற்றிருந்தது.
இதன் ஒரு சிறு முன்னோட்டத்தை 1948-ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி காட்டியிருந்தது. அப்போது பிரான்ஸ் போன்ற மிகவும் பலம் வாய்ந்த அணியிடம் இந்தியா வெறும் 1-2 என்ற கோல் கணக்கில்தான் தோல்வி அடைந்தது.
அந்தக் காலகட்டத்தில், முன்கள மற்றும் பந்தைக் கையாண்டு முன்னேறிச் செல்லும் திறன் கொண்ட வீரர்களின் துணையுடன், இந்திய கால்பந்து தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது.
அகமது கான், எஸ். ராமன், எம்.ஏ. சத்தார் மற்றும் எஸ். மேவாலால் போன்ற கால்பந்து வீரர்களுக்குப் பல ரசிகர்கள் இருந்தனர். லண்டன் ஒலிம்பிக்கில், ‘ரைட் பேக்’நிலையில் விளையாடிய தாஜ் முகமதுவைத் தவிர, இந்திய வீரர்கள் அனைவரும் காலணிகள் இன்றி வெறும் காலுடனே கால்பந்து விளையாடக் களமிறங்கினர்.
1959 உலகக்கோப்பையில் இந்திய அணி பங்கேற்காதது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
1950 உலகக் கோப்பையில் இந்திய கால்பந்து அணி ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை எந்தவொரு தெளிவான பதிலும் இல்லை. இருப்பினும், அணித் தேர்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் பயிற்சிக்கு போதிய நேரம் கிடைக்காதது ஆகியவையே இந்திய அணி உலகக்கோப்பையில் பங்கேற்காமல் விலகியது என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டது.
ஆனால், இது குறித்து பல ஆண்டுகளாகப் பல்வேறு வதந்திகளும் விவாதங்களும் நடந்து வருகின்றன. அதில், இந்திய வீரர்கள் காலணிகள் அணியாமல் வெறும் காலுடன் விளையாட விரும்பியதும், அதற்கு ஃபிஃபா அனுமதி மறுத்ததுமே முதன்மையான காரணமாக கூறப்படுகிறது.
ஆனால், நோவி கபாடியாவைத் தவிர, மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர் ஜெய்தீப் பாசுவின் அண்மைய புத்தகமும் இந்தக் காலணி இல்லாமல் வெறும் காலுடன் விளையாட விரும்பியதே இந்திய அணி பிரேசில் கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளில் இருந்து விலகியதற்கான காரணமாக நம்பவில்லை.
ஜெய்தீப் பாசு தொகுத்து எழுதிய ‘பாக்ஸ் டு பாக்ஸ்: 75 இயர்ஸ் ஆஃப் தி இந்தியன் ஃபுட்பால் டீம்’ என்ற புத்தகத்தில், “இந்திய வீரர்கள் வெறும் காலுடன் விளையாடுவதற்கு ஃபிஃபா எதிர்ப்பு தெரிவித்தது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.
லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற 7 அல்லது 8 வீரர்களைக் குறிப்பிட்டு”அந்த அணியில் இருந்த ஏழு அல்லது எட்டு வீரர்களின் பயணப் பைகளில் ஸ்பைக் பூட்ஸ் எனப்படும் கால்பந்து காலணிகள் வைக்கப்பட்டிருந்தன; அது வீரர்கள் தங்களின் விருப்பப்படி தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் ஒரு விஷயமாக மட்டுமே இருந்தது.” என்று ஜெய்தீப் பாசு கூறியுள்ளார்.
உண்மையில் அது, கால்பந்து வீரர்கள் தங்கள் கால்களில் தடிமனான துணிப் பட்டைகளைக் கட்டிக்கொண்டு விளையாட விரும்பிய ஒரு காலகட்டமாகும். 1954-ஆம் ஆண்டு வரை இந்த வழக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவலாக நடைமுறையில் இருந்தது.
பணத் தட்டுப்பாடு தான் இதற்குக் காரணமா?
இந்தியா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்காததற்கு நிதிப் பற்றாக்குறையும் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த வாதமும் உண்மை என்று தோன்றவில்லை.
பிரேசில் வரை செல்வதற்கான அணியின் பயணச் செலவு ஒரு சிக்கலாக இருந்தது உண்மைதான், ஆனால் அதற்கான தீர்வு காணப்பட்டுவிட்டது என்று ஜெய்தீப் பாசு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது இந்தியாவில் உள்ள மூன்று மாநில அளவிலான கால்பந்து சங்கங்கள், இந்திய அணி பிரேசில் செல்வதற்கான பயணச் செலவைப் பகிர்ந்து கொள்ள முன்வந்ததாக அவர் எழுதியுள்ளார்.
அதுமட்டுமின்றி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிரேசில் நாடே இந்திய கால்பந்து சங்கத்தைத் தொடர்பு கொண்டு, இந்திய அணியின் பயணச் செலவில் பெரும் பகுதியைத் தாங்களே ஏற்பதாக உறுதியளித்திருந்தது என்று நோவி கபாடியாவும் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
நோவி கபாடியாவின் புத்தகத்தின்படி, பிரேசில் இவ்வாறு நிதியுதவி செய்ய முன்வந்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன. முதலாவது, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், துருக்கி மற்றும் செக்கோஸ்லோவாக்கியா ஆகிய அணிகளும் அந்த உலகக் கோப்பையிலிருந்து தங்கள் பெயர்களைத் திரும்பப் பெற்றிருந்தன.
இரண்டாவதாக, காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணி தங்கள் நாட்டில் வந்து கால்பந்து விளையாட வேண்டும் என்று பிரேசில் விரும்பியது.
ஜெய்தீப் பாசுவின் புத்தகத்தின்படி, இந்தியா 1950 மே 16 அன்று உலகக் கோப்பைக்குச் செல்லவிருக்கும் தனது அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முன்மொழியப்பட்ட அட்டவணையின்படி, இந்திய அணி ஜூன் 15 அன்று பிரேசிலுக்குப் புறப்படவிருந்தது. பராகுவேக்கு எதிரான அதன் முதல் போட்டி ஜூன் 25 அன்று நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை, இன்றுவரை விடை கிடைக்காத ‘இந்திய கால்பந்து உலகின் மிகப்பெரிய ரகசியம்’ என்று ஜெய்தீப் பாசு குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், நோவி கபாடியா மற்றும் ஜெய்தீப் பாசு ஆகியோரின் புத்தகங்களின் மூலம், அன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த இந்திய கால்பந்து வீரர்களோ அல்லது கால்பந்து அதிகாரிகளோ கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பின் மகத்துவத்தை உணர்ந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது.
அந்தச் சமயத்தில் இந்திய ஹாக்கி அணி ஏற்கெனவே ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அந்தச் சாதனைதான் புகழின் உச்சகட்ட அளவுகோலாகத் திகழ்ந்தது.
இத்தகைய சூழலில், இந்திய கால்பந்து அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் நிர்வாகத்தை நடத்திய அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினருக்குமே, ஒலிம்பிக் போட்டிகளில் சிறந்த திறமையை வெளிப்படுத்துவதில்தான் கவனம் அதிகமாக இருந்தது.
இதுதவிர, 1951-ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் நடைபெறவிருந்தன. போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில், அதில் சிறப்பாகச் செயல்படுவதே இந்தியாவின் முக்கிய நோக்கமாக இருந்தது.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 1950-ஆம் ஆண்டு வாக்கில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இன்று இருப்பது போன்ற உலகளாவிய வரவேற்பும் புகழும் கிடையாது. அக்காலத்தில் அது பெரிய கவர்ச்சியோ அல்லது ஆரவாரமோ இல்லாத ஒரு போட்டியாகவே இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
விளையாட்டு விதிகள் பற்றிய விழிப்புணர்வின்மை
விளையாட்டு விதிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இந்தியக் கால்பந்து அதிகாரிகளின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
அந்தக் காலகட்டத்தில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தொழில்முறை வீரர் என்ற முத்திரை குத்தப்பட்டுவிடும். தொழில்முறை வீரர் என்ற அந்தஸ்து கிடைத்துவிட்டால், அவர்களால் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாது.
ஏனெனில், அன்றைய காலகட்டத்தில் அந்தத் தொடர்களில் பங்கேற்கும் வீரர்கள் ‘அமெச்சூர்’ எனப்படும் தொழில்முறை சாராத வீரர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது.
இருப்பினும், இந்த விதியைத் தவிர்ப்பதற்கான வழிகளும் இருந்தன. உதாரணமாக, ஹங்கேரி, ரஷ்யா மற்றும் பிற சோசலிச நாடுகள் தங்கள் உலகக் கோப்பை வீரர்களை ராணுவப் பணியாளர்களாகக் காட்டிக்கொண்டன.
ராணுவ உறுப்பினர்களைத் தொழில்முறை வீரர்களாக வகைப்படுத்த முடியாது என்று அவர்கள் வாதிட்டு தப்பித்தனர். ஆனால், இந்தியக் கால்பந்து அதிகாரிகளிடம் அக்காலத்தில் அத்தகைய தொலைநோக்குப் பார்வை இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஒருவேளை, ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் தகுதியைத் தங்கள் வீரர்கள் இழந்துவிடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே, இந்திய கால்பந்து சங்கம் 1950 உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கலாம்.
ஆனால், இந்த முடிவு இந்திய விளையாட்டு வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாக மாறிப்போனது. அது கடந்த 76 ஆண்டுகளாக இந்திய விளையாட்டு ரசிகர்களைத் தொடர்ந்து வருத்தி வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பையின்போது அந்த வருத்தம் இன்னும் தீவிரமடைகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு