• Mon. Aug 24th, 2026

24×7 Live News

Apdin News

உலகின் மிக வயதான நபர் ஏதெல் கேட்டரிம் 117ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்

Byadmin

Aug 24, 2026


உலகின் மிக வயதான நபராக அங்கீகரிக்கப்பட்டுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த ஏதெல் கேட்டரிம் தனது 117ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

1909ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் பிறந்த ஏதெல் கேட்டரிம், தனது 117ஆவது பிறந்தநாளை சர்ரே பகுதியில் உள்ள லைட்வாட்டர் நகரிலுள்ள ‘ஹால்மார்க் லேக்வியூ கேர் ஹோம்’ முதியோர் இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார்.

117 வயதை எட்டிய முதல் இங்கிலாந்து பிரஜை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, கின்னஸ் உலக சாதனை அமைப்பும் அவரை அதிகாரப்பூர்வமாக உலகின் மிக வயதான உயிருடன் இருக்கும் நபராக அங்கீகரித்துள்ளது.

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 116 வயதான பிரேஸில் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி சிஸ்டர் ஈனா கனபாரோ லூகாஸ் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஏதெல் கேட்டரிம் உலகின் மிக வயதான நபரானார்.

எட்வர்ட் ஏழாம் மன்னரின் ஆட்சிக் காலத்தில் பிறந்தவர்களில் தற்போது உயிருடன் இருக்கும் கடைசி நபராகவும் ஏதெல் கருதப்படுகிறார். டைட்டானிக் கப்பல் விபத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பும், ரஷ்யப் புரட்சிக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பும் பிறந்த அவர், இரண்டு உலகப் போர்களையும் கடந்து 117 வயது வரை வாழ்ந்துள்ளார்.

18 வயதிலேயே, 1927ஆம் ஆண்டு, தனியாக இந்தியாவுக்குப் பயணம் செய்த ஏதெல், அங்கு இங்கிலாந்து இராணுவக் குடும்பமொன்றில் குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

1931ஆம் ஆண்டு நடைபெற்ற விருந்தொன்றில் இங்கிலாந்து இராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாகப் பணியாற்றிய நார்மனை சந்தித்த அவர், பின்னர் அவரைத் திருமணம் செய்துகொண்டார். தம்பதியினர் பின்னர் ஹாங்காங்கில் வசித்ததுடன், அங்கு ஏதெல் ஒரு நர்சரி பள்ளியையும் நடத்தினார்.

இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். எனினும், அவர்கள் இருவரும் ஏதெலுக்கு முன்பாகவே உயிரிழந்தனர். அவரது கணவர் நார்மன் 1976ஆம் ஆண்டு காலமானார்.

எட்டு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது இளையவராகப் பிறந்த ஏதெலின் குடும்பத்திலும் நீண்ட ஆயுள் காணப்பட்டது. அவரது சகோதரி கிளாடிஸ் 104 வயது வரை வாழ்ந்தார்.

ஏதெல் தனது 97ஆவது வயது வரை கார் ஓட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், 2020ஆம் ஆண்டு தனது 110ஆவது வயதில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான அவர், அதிலிருந்து மீண்டு வந்தார்.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தனது 116ஆவது பிறந்தநாளுக்குப் பின்னர், இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஏதெலை நேரில் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, 1969ஆம் ஆண்டு சார்லஸ் இளவரசராக அறிவிக்கப்பட்ட நிகழ்வை நினைவுகூர்ந்த ஏதெல், “அப்போது அனைத்துப் பெண்களும் உங்கள் மீது காதலில் இருந்தனர்; உங்களைத் திருமணம் செய்ய விரும்பினர்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.

உலகின் மிக வயதான நபர் ஏதெல் கேட்டரிம் 117ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்

By admin