பட மூலாதாரம், Universal History Archive/Universal Images Group via Getty Images
அமெரிக்கா முதல் அணுகுண்டை வெடிக்கச் செய்து 80 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது இரானின் அணுசக்தித் திட்டம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுவதற்குக் காரணமாக உள்ளது.
ஜூலை 2 அன்று, இரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியான், ஐக்கிய நாடுகளின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையுடன் (IAEA) இரான் ஒத்துழைப்பை இடைநிறுத்தும் சட்டத்தில் கையெழுத்திட்டார். இஸ்ரேலும் அமெரிக்காவும் ஜூன் மாதத்தில் இரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை தாக்கியதற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்க இந்தத் தாக்குதல்கள் அவசியம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறியுள்ளன.
இந்தத் தாக்குதல்கள் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தின என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதேபோல், இந்தத் தாக்குதல்களின் விளைவுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கும், அணு ஆயுத பரவலைத் தடுக்க உருவாக்கப்பட்ட ஐ.நா.வின் பரவல் தடை ஒப்பந்தத்திற்கும் (NPT) என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்பதும் இன்னும் புரியவில்லை.
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தம், அணு ஆயுதங்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவியுள்ளது.
ஒன்பது நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அறியப்படுகிறது. அவர்கள் அணு ஆயுத சக்திகளாக மாறியது எப்படி? மற்ற நாடுகளும் இப்போது அவற்றைப் பெற முடியுமா?
எந்தெந்த நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன?
பட மூலாதாரம், Universal History Archive/Universal Images Group via Getty Images
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அறியப்படுகிறது. இவற்றில், இஸ்ரேல் மட்டுமே இதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இரண்டாம் உலகப் போரின்போது மன்ஹாட்டன் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆயுதங்களை ரகசியமாக உருவாக்கிய பின்னர் அமெரிக்கா உலகின் முதல் அணு சக்தி நாடாக மாறியது.
ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகளை வீசி, 1945ஆம் ஆண்டில், அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை, பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தியது. ஜப்பான், இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி மற்றும் இத்தாலியுடன் கூட்டணி சேர்ந்திருந்தது. இந்தக் கூட்டணி, நேச நாடுகளுடன் (Allied forces) போர் புரிந்தன.
அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சில் குறைந்தது 2 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. உலகளவில், இந்த ஒரு முறை மட்டும்தான் மோதலில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.
“அணு ஆயுதப் போட்டியின் உண்மையான தொடக்கம் இதுதான்” என்கிறார் ஆயுதக் கட்டுப்பாட்டு நிபுணர் முனைவர் பாட்ரிசியா லூயிஸ். இந்த தாக்கம், குறிப்பாக சோவியத் யூனியனை, தாக்குதலுக்கு எதிராகத் தங்களை பாதுகாக்கவும், பிராந்திய மற்றும் உலகளவில் தங்களது அதிகாரத்தை வெளிப்படுத்தவும், தங்களுக்கே உரிய அணு ஆயுதங்களை அவசரமாக உருவாக்கவும் தூண்டியது.
அதன் பிறகு என்ன நடந்தது?
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பனிப்போர் தொடங்கியது. அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் இரு தரப்புகளின் நட்பு நாடுகளுக்கும் இடையே உலகளாவிய அதிகாரப் போட்டி தொடங்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. சில நேரங்களில் இந்தப் போட்டி, அணு ஆயுத மோதலாக மாறும் அபாயமும் உருவானது.
சோவியத் யூனியன், இரண்டாம் உலகப் போரின்போது அணுகுண்டுகளை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியது. 1949இல் அவர்கள் ஒரு வெற்றிகரமான அணுகுண்டு சோதனையை நடத்தினர். அப்போது, அணு ஆயுதம் வைத்திருந்த ஒரே நாடு என்ற அமெரிக்காவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். அதன் பிறகு, அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இன்னும் அதிகமான அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கின.
அடுத்த 15 ஆண்டுகளில் மேலும் மூன்று நாடுகள் அணுசக்தி கொண்ட நாடுகளாக மாறின. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவுடன் அணு ஆயுத மேம்பாட்டில் ஒத்துழைத்த பிரிட்டன், கடந்த 1952ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களை உருவாக்கிய மூன்றாவது நாடாக மாறியது.
அதைத் தொடர்ந்து, 1960இல் பிரான்ஸ் மற்றும் 1964இல் சீனா, அணு ஆயுதங்களை வெற்றிகரமாகச் சோதித்து, அணு சக்தி நாடுகள் பட்டியலில் இணைந்தன.
மற்ற நாடுகள் அணு ஆயுத சக்திகளாக எப்போது மாறின?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து நாடுகளும் 1960களுக்குள் அணு ஆயுத சக்திகளாக உறுதியாக நிறுவப்பட்டிருந்தன. அதன் பின்னர் அணு ஆயுத நாடுகளின் எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என்ற அச்சமும் அதிகரித்தது.
இதற்குப் பதிலடியாக, அணு ஆயுதங்கள் மேலும் பரவுவதைத் தடுக்கவும், அணு ஆயுதம் இல்லாத நாட்டை ஊக்குவிக்கவும், அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதை எளிதாக்கவும் வடிவமைக்கப்பட்ட ‘அணு சக்திப் பரவல் தடை ஒப்பந்தத்தை’ (NPT) ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்தியது.
இந்த ஒப்பந்தம் 1970இல் நடைமுறைக்கு வந்தது, ஆனால் அனைத்து நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மறுபுறம், அணு ஆயுதம் கொண்ட நாடுகளும் உருவாகத் தொடங்கின.
இந்தியா 1974இல் அணுசக்தி நாடாகவும், 1998இல் பாகிஸ்தான் அணுசக்தி நாடாகவும் மாறின. இரு நாடுகளும் அவற்றின் பாதுகாப்பு குறித்த கவலைகளின் காரணமாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அதேபோல், இஸ்ரேலும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
தங்களது பிராந்திய அச்சுறுத்தல்கள், பதற்றங்கள் மற்றும் பல அண்டை நாடுகளின் விரோதப் போக்கை, ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருப்பதற்கான காரணமாக இஸ்ரேலிய அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். அணு ஆயுதங்கள் உள்ளதா இல்லையா என்பதை இஸ்ரேல் உறுதி செய்யவோ மறுக்கவோ இல்லை. மாறாக, ‘அணுசக்தித் தெளிவின்மை’ (nuclear ambiguity) என்ற கொள்கையை இஸ்ரேல் பின்பற்றி வருகிறது.
வட கொரியா ஆரம்பத்தில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திட்டது. ஆனால் 2003ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிகளை குற்றம் சாட்டி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
கடந்த 2006இல், வட கொரியா அணு ஆயுத சோதனையை நடத்தியது. அதோடு, 2011இல் உருவான தெற்கு சூடான், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடாத மற்றொரு ஐ.நா. உறுப்பு நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரானிடம் அணு ஆயுதம் உள்ளதா?
பட மூலாதாரம், Getty Images
“எங்களுக்குத் தெரிந்தவரை இரான் இன்னும் வெடிகுண்டை உருவாக்கவில்லை” என்று பிரிட்டனில் உள்ள லீசெஸ்டர் பல்கலைக் கழகத்தின் சர்வதேச அரசியல் பேராசிரியரான ஆண்ட்ரூ ஃபூட்டர் கூறுகிறார்.
“ஆனால் தொழில்நுட்ப ரீதியாகவோ அல்லது அறிவியல் ரீதியாகவோ, அவர்கள் அதைச் செய்வதைத் தடுக்கும் தடைகள் எதுவும் இல்லை” என்றும் அவர் கூறுகிறார்.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட இரான், தனது அணுசக்தித் திட்டம் அமைதியானது என்றும், அணு ஆயுதத்தை உருவாக்க முற்படவில்லை என்றும் கூறி வருகிறது.
இருப்பினும், ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) பத்து ஆண்டுகளாக நடத்திய விசாரணையில், 1980களின் பிற்பகுதியில் இருந்து 2003ஆம் ஆண்டு வரை இரான் “அணுவை வெடிக்கச் செய்யும் சாதனத்தை உருவாக்குவது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை” நடத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதைக் கண்டறிந்தது. இந்த நடவடிக்கைகள் “அமட் திட்டம்” (Project Amad) என அழைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் நடைபெற்றன மற்றும் அந்த திட்டம் 2003இல் நிறுத்தப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டில், இரான் ஆறு உலக வல்லரசுகளுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் கீழ், இரான் தனது அணுசக்தி நடவடிக்கைகளில் சில கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டது மற்றும் சர்வதேச தடைகள் தளர்த்தப்படுவதற்குப் பதிலாக சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பதை அனுமதித்தது.
ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2018ஆம் ஆண்டில் தனது முதல் பதவிக் காலத்தில், இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுப்பதற்கு இந்த ஒப்பந்தம் போதுமானதாக இல்லை என்று கூறி, மீண்டும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதற்குப் பதிலாக, இரான் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான சர்வதேச அணுசக்தி முகமையின் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து மீறத் தொடங்கியது.
கடந்த ஜூன் 12 அன்று, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையின் 35 நாடுகளைக் கொண்ட ஆளுநர்கள் குழு, இரான் 20 ஆண்டுகளில் முதல் முறையாக, தனது அணு ஆயுதப் பரவல் தடைக் கடமைகளை மீறியுள்ளதாக அறிவித்தது.
அதற்கு அடுத்த நாள், இஸ்ரேல் இரானின் அணுசக்தி மற்றும் ராணுவ இலக்குகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியது. பின்னர், அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா இதில் இணைந்தது. அமெரிக்கா, இரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களைத் தாக்கியது. இதில் நிலத்தடியில் பாதுகாப்பாகக் கட்டப்பட்ட ஃபோர்டோ தளமும் அடக்கம்.
இஸ்ரேலிடம் அணு ஆயுதம் உள்ளதா?
பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை, ஆனால் குறிப்பிடத்தக்க ஆயுதங்களை வைத்திருப்பதாகப் பரவலாக நம்பப்படுகிறது.
கடந்த 1986 அக்டோபரில், இஸ்ரேலிய அணுசக்தி தொழில்நுட்ப வல்லுநரான மொர்டெகாய் வனுனு, பிரிட்டிஷ் நாளிதழான சண்டே டைம்ஸுக்கு(The Sunday Times), இஸ்ரேலிடம் முன்பு நினைத்ததைவிட மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட அணு ஆயுதத் திட்டம் இருப்பதாக விவரங்களை வழங்கினார்.
இதற்காக 18 ஆண்டுகள் அவர் இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டு, 2004இல் விடுதலை செய்யப்பட்டார். ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (SIPRI) வெளியிட்ட அறிக்கையின்படி, “இஸ்ரேல் தனது அணு ஆயுதக் களஞ்சியத்தை நவீனமயமாக்கி வருகிறது.”
கடந்த ஆண்டில்(2024), இஸ்ரேல் ஒரு ஏவுகணை உந்துவிசை அமைப்பின் சோதனையை நடத்தியது. இது, “அணுசக்தித் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளான ‘ஜெரிகோ’ (Jericho) உடன் தொடர்புடையதாக இருக்கலாம்” என்றும், இஸ்ரேல் தனது புளூட்டோனியம் உற்பத்தித் தளமான டிமோனா அணுசக்தி நிலையத்தையும் மேம்படுத்தி வருவதாகத் தெரிகிறது என்றும் ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.
பிராந்திய எதிரிகள் அணுசக்தி திறன்களைப் பெறுவதைத் தடுக்க இஸ்ரேல் ராணுவரீதியாகச் செயல்பட்டது. இரான் மீதான அதன் தாக்குதல்களுக்கு அடுத்தபடியாக, 1981இல் இராக்கில் உள்ள அணு உலை மற்றும் 2007இல் சிரியாவில் இருந்த சந்தேகத்திற்கிடமான அணுசக்தித் தளம் மீது இஸ்ரேல் குண்டு வீசியது.
அணுசக்தித் திட்டங்களைக் கைவிட்ட நாடுகள் யாவை?
பட மூலாதாரம், Getty Images
பிரேசில், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து போன்ற சில நாடுகள், அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கில் ஆரம்பத்தில் செயல்பட்டன. ஆனால் பின்னர், தாங்களாக முன்வந்தோ அல்லது வெளிப்புற அழுத்தங்களாலோ, அந்தத் திட்டங்களைக் கைவிட்டன.
உலகில், அணு ஆயுதங்களை வெற்றிகரமாகத் தயாரித்து, பின்னர் தானாகவே அவற்றைச் சிதைத்து, அணுசக்தி திட்டத்தை முழுமையாகக் கைவிட்ட ஒரே நாடு தென்னாப்பிரிக்கா தான்.
“அணுசக்தி யுகத்தில் அது இன்னும் மிகவும் குறிப்பிடத்தக்க விதிவிலக்காகவே இருக்கிறது. தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்கி, பின்னர் அவற்றை அழிக்க முடிவு செய்த நாடு அது” என்று ஃபட்டர் கூறுகிறார்.
நிறவெறி ஆட்சியின் முடிவு, பிராந்திய மோதல்கள் குறையத் தொடங்கியது, உலக அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை தென்னாப்பிரிக்கா அணு ஆயுதங்களைக் கைவிட முடிவு செய்வதற்கான முக்கியக் காரணிகளாக இருந்தன.
கடந்த 1991இல் சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு, புதிதாக சுதந்திரம் பெற்ற மூன்று நாடுகளான யுக்ரேன், பெலாரூஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் அதன் அணு ஆயுதங்களை மரபுரிமையாகப் பெற்றன. ஆனால், அந்த நாடுகள் பின்னர் அவற்றைக் கைவிட்டன. யுக்ரேன், 1994 புடாபெஸ்ட் நினைவூட்டல் ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட பாதுகாப்பு உறுதிமொழிகளுக்கு ஈடாகத் தனது அணு ஆயுதங்களைக் கைவிட்டது.
ஆனால், ரஷ்ய படைகளுடன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மோதலைச் சந்தித்து வரும் தனது நாடு, அணு ஆயுதங்களை விட்டுக் கொடுத்ததற்குப் பதிலாகப் பெரிதாக எதையும் பெறவில்லை என்று யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி பலமுறை கூறியுள்ளார்.
எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?
பட மூலாதாரம், Getty Images
அரசாங்கங்கள் தங்கள் அணு ஆயுதக் களஞ்சியங்கள் பற்றிய முழுமையான விவரங்களை அரிதாகவே வெளியிடுவதால், ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்வது கடினம்.
ஆனால் ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (SIPRI) சிந்தனைக் குழு வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 2025 நிலவரப்படி, உலகின் அணு சக்தி நாடுகள் மொத்தமாக சுமார் 12,241 அணுகுண்டுகளை கொண்டுள்ளன. ரஷ்யாவும் அமெரிக்காவும் உலகளாவிய கையிருப்பில் 90% அணுகுண்டுகளை வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயன்பாட்டில் இல்லாத அணுகுண்டுகளை அகற்றும் வேகம், புதிய அணு ஆயுதங்களை உருவாக்கும் வேகத்தைவிட அதிகமாகவே இருந்தது. ஆனால் இந்தப் போக்கு “வரவிருக்கும் ஆண்டுகளில்” தலைகீழாக மாறக்கூடும் என்று ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (SIPRI) குறிப்பிடுகிறது.
இன்னும் பல நாடுகள் அணு ஆயுதங்களை உருவாக்க முடியுமா?
இரானின் அணுசக்தித் திட்டத்தில் என்ன நடக்கிறது என்பது, மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை உருவாக்க வேண்டுமா என்பதைப் பற்றிய அவர்களது முடிவுகளை அதிகம் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரானின் அணுசக்தி தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து, “இரானின் அணுசக்தித் திட்டம் பத்து ஆண்டுகளுக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
ஜூலை மாதம், அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் இரானின் அணுசக்தித் திட்டத்தை இரண்டு ஆண்டுகள் வரை பின்னோக்கித் தள்ளியுள்ளன என்று பென்டகன் (அமெரிக்க பாதுகாப்புத் துறை) தெரிவித்துள்ளது.
இரான் இறுதியில் அணு ஆயுதத்தை உருவாக்கினால், மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகள், குறிப்பாக சௌதி அரேபியா போன்றவை தங்களுக்கென அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சி எடுக்கலாம் என்று நிபுணர் ஆண்ட்ரூ ஃபுட்டர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
“சௌதி அரேபியா தற்போது அணு ஆயுத திறனை விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால், இரான் அணு ஆயுதம் பெற்றுவிட்டால், அது முழு சூழலையும் மாற்றிவிடும்,” என்று கூறும் ஃபுட்டர்,
“எவ்வளவு விரைவாக அல்லது எளிதாக செய்ய முடியும் என்பது மற்றொரு கேள்வியாக உள்ளது” என்றும் கூறுகிறார்.
இரான், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (NPT) விலகுவதற்கான “அதிக ஆபத்து” இருப்பதாக லூயிஸ் கூறுகிறார். அது நடந்தால், மற்ற நாடுகளும் ஒப்பந்தத்திலிருந்து விலகும் வாய்ப்பு அதிகரிக்கும். இது அந்த ஒப்பந்தத்திற்கு “பெரும் பின்னடைவாக” இருக்கும், ஆனால் அது அதற்கான முடிவாக இருக்காது என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால், மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிக்க முடிவு செய்தாலும் கூட, அவை கடக்க வேண்டிய முக்கியமான சவால்கள் உள்ளன என்கிறார் லூயிஸ். குறிப்பாக, செறிவூட்டப்பட்ட யுரேனியம் அல்லது ஆயுத தர புளூட்டோனியம் ஆகியவற்றைப் பெறுவதற்கான கட்டுப்பாடுகள் கடுமையாக அதிகரித்துள்ளதால், அவை அணு ஆயுத தயாரிப்பில் மிகப்பெரிய தடையாக இருக்கின்றன.
பொருளாதாரச் சுமையையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“இதற்கு மிகவும் செலவாகும், குறிப்பாக ரகசியமாக செய்ய முயன்றால், அதற்கு பல ஆண்டுகள் கூட ஆகும். ஆனால் அதுவும் வட கொரியா மற்றும் பாகிஸ்தான் போன்ற ஏழ்மையான நாடுகளைத் தடுக்கவில்லை,” என்று லூயிஸ் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு