• Sun. May 3rd, 2026

24×7 Live News

Apdin News

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் கனமழை மற்றும் இடி மின்னல் எச்சரிக்கை

Byadmin

May 3, 2026


கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலும் நிலவி வரும் வெப்பச் சலன மழை, எதிர்வரும் மே மாதம் 4-ஆம் திகதி முதல் வடக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு விரிவடைந்து செறிவடையும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 2.00 மணிக்கு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும், மாலை 4.30 மணிக்கு திருகோணமலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சற்று கனமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

பிற்பகல் 1.00 மணி முதல் மேல், தென், சப்ரகமுவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், பிற்பகல் 2.00 மணி முதல் மத்திய, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பிற்பகல் 3.00 மணியளவில் திருகோணமலை மாவட்டத்திலும் கனமழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும், மாலை 4.00 மணிக்கு வடமத்திய மாகாணத்திற்கும் மிதமானது முதல் கனமானது வரையிலான மழை கிடைக்க வாய்ப்புள்ளது.

மேல் மாகாணம், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக 8-ஆம் திகதி வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

எதிர்வரும் நாட்களில் பெய்யவுள்ள மழையானது அதிக இடி மின்னலுடன் கூடியதாக அமையும். குறிப்பாக மே 5, 7 மற்றும் 11-ஆம் திகதிகளில் அதிக மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், தொடர்ச்சியான மழை காரணமாக மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் நடுத்தர அளவிலான நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் நிலைமைகள் சாதகமாக இருந்தாலும், உள்ளூர் புவியியல் காரணிகளின் செல்வாக்கினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளுக்கு இதுவரையில் மிகக் குறைவான மழையே கிடைத்துள்ளது. எனினும், எதிர்வரும் நாட்களில் அங்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.

எதிர்வரும் மே 14-ஆம் திகதி அரபிக் கடலில் புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால் இலங்கையின் தெற்கு, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மழை வீழ்ச்சி அதிகரிப்பதுடன், தென்மேற்கு, மேற்கு மற்றும் வடமேற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும். எனினும், இத்தாழமுக்கம் குறித்த தெளிவான விபரங்கள் இன்னும் சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் கனமழை மற்றும் இடி மின்னல் எச்சரிக்கை appeared first on Vanakkam London.

By admin