பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ஷ்யாம் பக்ஷி
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
(இந்தச் செய்தியில் இடம்பெறும் சில விவரங்கள் சங்கடம் தரக்கூடும்)
“ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்தான் இவர்களைத் திருப்பி அனுப்புவோம். இல்லையென்றால், இவர்களின் உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி உங்களுக்கு அனுப்பி வைப்போம்” என எத்தியோப்பியாவில் இருந்த கடத்தல்காரர் ஒருவர், இந்தியாவின் குஜராத் மாநிலம் மெஹசானாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தார்.
இளைஞர் ஒருவரும் இரண்டு இளம்பெண்களும் கடத்தப்பட்டனர். கடத்தல்காரர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள் மூவரும் அக்டோபர் முதல் நாளன்று மெஹசானா மாவட்டத்தில் உள்ள வடஸ்மா கிராமத்திற்குத் திரும்பியபோது, அவர்களின் குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
ரித்விக், மயூர், மம்தா ஆகிய மூவரும் ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகள். இவர்கள் முகவர்களின் உதவியுடன் சட்டவிரோதமாக அமெரிக்கா செல்வதற்காகப் புறப்பட்டனர்.
இந்த கடத்தல் விவகாரம் பற்றி பேசிய குடும்பத்தினர் கூறுகையில், “செப்டம்பர் 22-ஆம் தேதி மம்தா தனது தந்தையைத் தொடர்புகொண்டு, தாங்கள் கனடா சென்றுவிட்டதாகத் தெரிவித்தார். அதன்பிறகு, செப்டம்பர் 29-ஆம் தேதி வரை குடும்பத்தினரால் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.
இதையடுத்து, மம்தாவின் தந்தை கிரீத் செளகான், மெஹசானாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.”
அதன்பிறகுதான், தங்கள் குடும்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளும் எத்தியோப்பியாவில் கடத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.
மூவரையும் விடுவிப்பதற்காகக் கடத்தல்காரர்கள் ஒரு கோடி ரூபாய் பிணைத் தொகை கேட்டனர்.
மூவரும் எத்தியோப்பியாவுக்குக் கடத்தப்பட்டது எப்படி?
ரித்விக், மயூர், மம்தா ஆகிய மூவரும் அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பினர். இதற்காக அவர்கள் முகவர்களின் உதவியை நாடினர்.
இந்த வழக்கில் இதுவரை இரண்டு முகவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் ஒருவர் மெஹசானா மாவட்டம், டோங்கர்வா கிராமத்தைச் சேர்ந்த அல்பேஷ் பஞ்சால். மற்றொருவர் வதோதராவைச் சேர்ந்த பார்கவ் படேல்.
முகவர்களில் ஒருவர் ஊடகங்களிடம் பேசுகையில், அவர்கள் மூவரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து விமானத்தில் புறப்பட்டதாகத் தெரிவித்தார். அங்கிருந்து அபுதாபி வழியாக எத்தியோப்பியாவுக்குச் சென்றுள்ளனர்.
இதே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பிபிசியிடம் கூறுகையில், “அவர்கள் தங்கள் பயணத்தின்போது எத்தியோப்பியாவில் இரண்டு மணி நேரம் மட்டுமே தங்கியிருக்க வேண்டும். அதன்பிறகு வேறு விமானத்தில் கனடாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது” என்றார்.
“ஆனால், அவர்கள் எத்தியோப்பியாவை சென்றடைவதற்கு முன்பே, இந்தியாவிலிருந்து வந்த அந்த மூன்று பேரைப் பற்றிய முழு விவரங்களும் கடத்தல்காரர்களிடம் இருந்தன” என்றும் அவர் தெரிவித்தார்.
“எத்தியோப்பியாவைச் சென்றடைந்ததும், கடத்தல்காரர்கள் மூவரையும் பெயர் சொல்லி அழைத்தனர். இதனால், தங்களை அங்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்த முகவர்களுடன் கடத்தல்காரர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று அவர்கள் நம்பினர்.
“எத்தியோப்பியாவில் ஓர் இரவு தங்க வேண்டும் என்றும், மறுநாள் காலையில் விமான டிக்கெட் கிடைத்துவிடும் என்றும் அவர்களிடம் கூறப்பட்டது. அதன் பிறகு, அவர்கள் கனடாவுக்குப் புறப்பட்டுச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.”
“இந்தக் காரணத்தைக் கூறி, மூவரையும் வாகனத்தில் ஏற்றி ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்” என்று குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Ketan Patel/BBC
குடும்பத்தினருக்கு கடத்தல் பற்றி தெரியவந்தது எப்படி?
குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பிபிசியிடம் பேசினார். இந்த மூவரும் கடத்தப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, கடி பகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞரும் இதேபோன்று கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கடத்தப்பட்ட அந்த இளைஞர், 53 லட்சம் ரூபாய் கொடுத்து கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டார்.
விடுவிக்கப்பட்ட பிறகு, தன்னை அடைத்து வைத்திருந்த இடத்திற்கு வடஸ்மா கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேரையும் அழைத்து வந்திருப்பதாக அந்த இளைஞர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த இளைஞரின் குடும்பத்தினர் வடஸ்மா கிராமத்தைச் சேர்ந்த மூவரின் குடும்பத்தினரையும் தொடர்புகொண்டனர்.
இவ்வாறாக, மூன்று நாட்களுக்குப் பிறகுதான் தங்களது மூன்று பிள்ளைகளும் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தகவல் அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.
“60 லட்சம் ரூபாய் கொடுத்தோம்; அவர்கள் ஒரு கோடி ரூபாய் கேட்க தொடங்கினர்”
பட மூலாதாரம், Ketan Patel/BBC
ரித்விக்கின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கடத்தல்காரர் அடிக்கடி வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து அழைத்ததாகக் கூறினார்.
“அவர் இந்தியில் பேசினார். அதனால், அவர் ஓர் இந்தியராக இருக்கலாம் என்று எங்களுக்குத் தோன்றியது” என அவர் தெரிவித்தார்.
குடும்ப உறுப்பினரின் கூற்றுப்படி, “ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்தான் மூவரையும் திருப்பி அனுப்புவோம். இல்லையென்றால், இவர்களின் உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி அனுப்பிவிடுவோம் என்று கடத்தல்காரர் மிரட்டினார்.”
“முகவர் ஒருவர், வீடியோ அழைப்பு மூலம் ரித்விக்கை எங்களுடன் பேச வைத்தார். அந்தக் காணொளியில், ரித்விக்கின் பின்னால் கடத்தல்காரர்கள் துப்பாக்கிகளுடன் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது” என்று அவர் கூறினார்.
ரித்விக்கையும் அந்த இரண்டு இளம் பெண்களையும் மிரட்டி, பொய்யான தகவல்களைச் சொல்லுமாறு கடத்தல்காரர்கள் கட்டாயப்படுத்தியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
“நாங்கள் கனடாவிற்கு வந்துவிட்டோம். கீழே ஒரு வாகனம் தயாராக இருக்கிறது. இப்போது அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும்; அதற்குப் பணம் அனுப்புங்கள்” என்று கூறுமாறு சொல்லி கடத்தல்காரர்கள் அவர்களை மிரட்டியுள்ளனர்.
“முதலில் 60 லட்சம் ரூபாய் அனுப்புகிறோம் என்றும், அவர்கள் அடுத்த இடத்தைச் சென்றடைந்ததும் மீதமுள்ள தொகையை அனுப்பிவிடுவதாகவும் நாங்கள் கூறினோம்” என்று குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.
“ஆனால், உண்மையில் அவர்கள் கனடாவுக்குச் செல்லவில்லை. எத்தியோப்பியாவில் இருந்துகொண்டுதான் எங்களுடன் பேசினார்கள். கனடாவிற்கு சென்றுவிட்டதாகப் பொய் சொல்லுமாறு கடத்தல்காரர்கள் அவர்களைக் கட்டாயப்படுத்தியிருந்தனர்” என்றும் அவர் கூறினார்.
பணம் அனுப்புவதற்காகக் கடத்தல்காரர்கள் தங்களுக்கு ஒரு கியூஆர் குறியீட்டையும் அனுப்பியதாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அந்தக் குறியீட்டைப் பெற்றுக்கொண்டு, குடும்ப உறுப்பினர் மெஹசானாவுக்குச் சென்று பணத்தைப் பரிமாற்றம் செய்தார். பணம் அனுப்பியதற்கான ரசீதும் தங்களிடம் இருப்பதாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
“நாங்கள் 60 லட்சம் ரூபாயை அனுப்பிவிட்டோம். ஆனால், அதன்பிறகு கடத்தல்காரர்களின் கோரிக்கை அதிகரித்தது. ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான தொகையைப் பெற அவர்கள் தயாராக இல்லை” என்று குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.
“ஆரம்பத்தில், அடுத்தகட்டப் பயணத்திற்கான செலவு என்று கூறிப் பணம் கேட்டனர். பின்னர், ‘உங்கள் பிள்ளைகள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க வேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் அனுப்புங்கள்’ என்று வெளிப்படையாகவேக் கூறினார்கள்.”
பணம் அனுப்பப்பட்ட பிறகும், அந்தத் தொகை தனக்குக் கிடைக்கவில்லை என்று கடத்தல்காரர் தொடர்ந்து கூறிவந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அடுத்தகட்டப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய முகவருக்கும் கடத்தல்காரருக்கும் இடையே நடந்த உரையாடலை ரித்விக் கேட்டதாகவும், பின்னர் அந்த உரையாடல் குறித்த விவரங்களைத் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தங்க நகைகள் அடமானம்
ஒவ்வொருவரையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதற்கு முகவர் தலா 80 லட்சம் ரூபாய் கேட்டதாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். அதன்படி, மூன்று பேரையும் அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான மொத்தத் தொகை 2 கோடியே 40 லட்சம் ரூபாயாக இருந்தது.
இருப்பினும் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இறுதியில் ஒருவருக்கு 70 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் எனப் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இந்தத் தொகைக்கு, மூவரையும் பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதாக முகவர் உறுதியளித்திருந்தார்.
குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. எங்களிடம் இருந்த 200 முதல் 250 கிராம் வரையிலான தங்க நகைகளை அடகு வைத்தோம்; அந்த நகைகள் இன்னும் அடமானத்தில் தான் உள்ளன, இதைத் தவிர நண்பர்களிடமிருந்தும் கடன் வாங்கினோம்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “அமெரிக்காவில் எனக்கு நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர். குழந்தைகள் எப்படியாவது அமெரிக்கா போய் சேர்ந்துவிட்டால் போதும்; அதன் பிறகு அங்குள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் பணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம் என்று அவர்கள் கூறியிருந்தனர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஆபத்தான வழியைத் தேர்ந்தெடுத்தோம்” என தெரிவித்தார்.
பட மூலாதாரம், Ketan Patel/BBC
கடத்தப்பட்டவர்களின் பின்னணி
வடஸ்மா கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான ரித்விக், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து, அவர் வயர்மேன் (Wireman) பணிக்கான பயிற்சியைப் பெற்றார். அவரது தந்தைக்குப் புற்றுநோய் உள்ளது. ரித்விக்கிற்கு ஒரு சகோதரனும் இருக்கிறார்.
குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “ரித்விக் அமெரிக்காவுக்குச் சென்றால், தந்தையின் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் கிடைக்கும் என்று நினைத்தோம். தனது மகன்களில் ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார் என்ற நிம்மதியாவது அவருக்கு இருக்கும். அதனால்தான் ரித்விக்கை வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்தோம்” என்றார்.
மம்தா சாவ்தா, பி.எஸ்சி. படிப்பை முடித்த பிறகு பி.எட். படித்துள்ளார். ஆசிரியையாகப் பணியாற்றிய அவருக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அவரது கணவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, மம்தாவின் கணவர் ஆறு மாதங்களுக்கு முன்பு மாணவர் விசாவில் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.
மம்தாவைச் சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்கு அனுப்புவதற்குக் குடும்பத்தினர் ஐந்து முறை முயன்றுள்ளனர். ஆனால், ஒவ்வொரு முறையும் அவரது விசா நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சட்டவிரோத வழியைப் பயன்படுத்த வேண்டியிருந்தாலும் பரவாயில்லை, எப்படியாவது மம்தாவை அமெரிக்காவில் வசிக்கும் அவரது கணவரிடம் அனுப்பிவிட வேண்டும் என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
மயூரி காந்திநகரில் வசித்து வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், வெளியுறவுத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, “எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இந்தியக் குடிமக்கள், அந்நாட்டு அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாக பிபிசி செய்தியாளர் ராக்ஸி காக்டேகரிடம் பேசிய லாங்ணஜ் காவல் நிலைய ஆய்வாளர் ஏ.எம். கெலாட் கூறுகையில், “இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் ஓர் இடைத்தரகர் மட்டுமே. முக்கிய முகவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்றார்.
கடத்தல்காரர்களுக்குப் பணம் கொடுத்துவிட்டதாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால், காவல்துறையினர் இதற்கு மாறான தகவலைத் தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளர் கெலாட் கூறுகையில், “கடத்தல்காரர்களுக்கு குடும்பத்தினர் பணம் எதுவும் கொடுக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, பேச்சுவார்த்தையின்போது பணம் கொடுப்பதற்குத் தங்களிடம் வசதி இல்லை என்று குடும்பத்தினர் கடத்தல்காரரிடம் கூறியுள்ளனர்” என்றார்.
பாபா கான் என்ற நபர்தான் அந்த மூவரையும் கடத்தியதாகவும், அவரே அவர்களது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் ஆய்வாளர் கெலாட் தெரிவித்தார்.
புதிய ‘டாங்கி ரூட்’ குறித்து முகவர்கள் சொல்வது என்ன?
தனது பெயரை வெளியிட விரும்பாத முகவர் ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், “ஐரோப்பா மற்றும் மெக்சிகோ வழியாக இதுபோன்ற சட்டவிரோதப் பயணங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், எத்தியோப்பியா வழியாகவும் இத்தகைய பாதை செயல்பட்டு வருவது எங்களுக்கே புதிய தகவலாக உள்ளது” என்றார்.
“இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முகவர்கள் எங்கள் முகவர் வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களுடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று அவர் கூறினார்.
“மக்களைத் துபையிலிருந்து எத்தியோப்பியாவுக்கு அழைத்துச் செல்வதும், அங்கு அவர்கள் கடத்தப்பட்டுவிட்டதாகக் கூறி அவர்களின் குடும்பத்தினரை நம்ப வைப்பதும், அதன் மூலம் பணம் பறிப்பதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மோசடியாக இருக்கலாம்” என்றார்.
“அமெரிக்க எல்லையில் தற்போது கடுமையான பாதுகாப்புச் சோதனைகள் நடைபெறுவதால், இதுபோன்ற வழிகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இந்த முறையில் மக்களை அனுப்பும் நடவடிக்கைகளும் தற்போது நடைபெறுவதில்லை” என்று அவர் தெரிவித்தார்.
பல்வேறு நாடுகள் வழியாக நடைபெறும் சட்டவிரோதக் குடியேற்றப் பயணங்களைக் குறிக்க ‘டாங்கி ரூட்’ என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குச் செல்ல விரும்புபவர்கள், பல நாடுகள் வழியாகவும் இடைத்தரகர்கள் அல்லது முகவர்களின் உதவியுடனும் மேற்கொள்ளும் ஆபத்தான பயணங்களைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள்?
பட மூலாதாரம், Ketan Patel/BBC
வதோதராவைச் சேர்ந்த பயண முகவர் ரிஷப் ஷா கூறுகையில், “இப்போது சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்புவது என்பது, இலக்கு நாட்டில் அவர்களை கொண்டு சேர்ப்பதோடு முடிந்துவிடுவதில்லை” என்றார்.
“வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் சிலரை, அங்கு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தவும், தடை செய்யப்பட்ட பொருட்களைக் கடத்தவும் பயன்படுத்துகிறார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.
ரிஷப் ஷா கூறுகையில், “சிலரை அடர்ந்த காடுகள் வழியாகச் சட்டவிரோதமாக ஒரு நாட்டுக்குள் நுழையச் செய்கிறார்கள். பின்னர், அந்நாட்டுக் காவல்துறையினரிடம் அவர்களைப் பிடித்துக் கொடுக்கிறார்கள்.
“அதன்பிறகு, அவர்களை விடுவிப்பதாகக் கூறி மிரட்டி, வேறு சில சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்” என்றார்.
இதற்கு உதாரணமாக அவர் கூறுகையில், “சிலரை இங்கிருந்து துபைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவர்களை ஒரு வேலையில் அமர்த்தியிருப்பதுபோல் காட்டுகிறார்கள். பின்னர், அவர்களின் பெயரில் போலி வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கிறார்கள். இந்தியாவிலிருந்து சென்றவர்களுக்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட தொகையைக் கொடுத்துவிட்டு, அவர்களை அங்கிருந்து அனுப்பிவிடுகிறார்கள். சிலரை வேறு நாடுகளுக்கு அனுப்பி, இறுதியில் அவர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்” என்றார்.
ரிஷப் ஷா மேலும் கூறுகையில், “இத்தகைய மோசடி வலையில் சிக்கிக்கொள்பவர்கள், எவ்வளவு விரைவாக அதிலிருந்து வெளியேறுகிறார்களோ, அவ்வளவு நல்லது. இல்லையெனில், அவர்கள் பல்வேறு வழிகளில் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக நேரிடும்.
மக்களை ஏமாற்றுவதற்கு மோசடிக்காரர்கள் பல்வேறு வழிகளைக் கையாளுகின்றனர்; இதற்கென ஒரே ஒரு முறையை மட்டும் அவர்கள் பின்பற்றுவதில்லை என்று ரிஷப் ஷா விளக்கினார்.
இந்தியாவில் உள்ள உள்ளூர் முகவர்களுக்குக்கூட, வெளிநாடுகளில் தாங்கள் அனுப்பும் நபர்களுக்கு என்ன நடக்கும் என்பது முழுமையாகத் தெரியாமல் இருக்கலாம். தாங்கள் அனுப்பி வைக்கும் நபர்கள் அங்கு சென்ற பிறகு கடத்தல், மிரட்டல் அல்லது பிற ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும் என்பதை அவர்கள் அறிந்திருக்காமல் இருக்கலாம்.
ரிஷப் மேலும் கூறுகையில், “இந்தியாவில் உள்ள உள்ளூர் முகவர்கள், வெளிநாடுகளில் செயல்படும் மற்ற முகவர்களை நம்பியே மக்களை அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டில் உள்ள அந்த முகவர்கள் ஏமாற்றும்போது, அவர்களை நம்பிச் சென்றவர்கள் பல்வேறு ஆபத்துகளிலும் சிக்கல்களிலும் மாட்டிக்கொள்கிறார்கள்” என்றார்.
சட்டவிரோதமாக வெளிநாடு சென்றவர்கள் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படலாம்
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2025 டிசம்பர் 4-ஆம் தேதி மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தார்.
அவர் அளித்த தகவலின்படி, 2009 முதல் 2025 நவம்பர் 28 வரை அமெரிக்கா மொத்தம் 18,822 இந்தியக் குடிமக்களை திருப்பி அனுப்பியுள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்களின்படி, 2025 நவம்பர் 28 நிலவரப்படி, அந்த ஆண்டில் மட்டும் 3,258 இந்தியக் குடிமக்கள் அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில், வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், 2025 மார்ச் 21-ஆம் தேதி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தார். அதில், 2009 முதல் 2024 வரை அமெரிக்கா 15,564 இந்தியக் குடிமக்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
2025 ஜனவரி முதல் மார்ச் 21 வரை 388 இந்தியக் குடிமக்கள் அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு