0
நிலத்தில் விதைகளைத்தான் நடுவர்
எங்கள் நாட்டிலோ
பூவென்றும் பிஞ்சென்றுமான
ஈழக் குழந்தைகளைப்
புத்தகப் பையுடன் புதைப்பர்.
குழந்தைகளைச் செல்வமென்பர்
எங்கள் நாட்டிலோ
இராணுவச் சீருடை தரித்து
குழந்தைகளுக்கு எதிராக யுத்தம் செய்து
அவர்களை மண்ணுள் அடக்குவர்.
குழந்தைகளைக் களஞ்சியம் என்பர்
எங்கள் நாட்டிலோ
குழந்தைகள் படிக்கும் புத்தகங்களை
ஆயுதங்கள் என்பர்.
குழந்தைகளைத் தெய்வங்களென்பர்
எங்கள் நாட்டிலோ
குழந்தைகளை மாத்திரமின்றி
அவர்கள் கையிலுள்ள பொம்மைகளையும்
பயங்கரவாதிகள் என்பர்.
தீபச்செல்வன்
-நன்றி – ஆனந்த விகடன்