• Fri. Jul 4th, 2025

24×7 Live News

Apdin News

“என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடியவர் நிகிதா” – திருமாறன் புகார் | Nikita married me and ran away on the same day – Thirumaran complains

Byadmin

Jul 3, 2025


சிவகங்கை: ‘என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் நிகிதா ஓடிவிட்டார்’ என தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் புகார் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “எனக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதா குடும்பத்தை தெரியும். அவர் என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் பாலும், பழமும் சாப்பிடுவதற்கு முன்பே ஓடிவிட்டார். அவர் 3-க்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிப்போய் விடுவார்.

பின்னர் திருமணம் செய்தவர்கள் மீது வரதட்சிணை புகார் கொடுத்து, அந்த குடும்பத்தை சித்ரவதைக்கு ஆளாக்கினார். தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பது தான் அவரது வேலை. என்னிடம் அவரது தந்தை ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டுதான் விவகாரத்து கொடுத்தனர். திருமண மோசடி மட்டுமின்றி வேலை வாங்கி தருவதாகவும் பல்வேறு மோசடிகளை செய்துள்ளனர்.

புகார் கொடுத்தவர் குறித்து முழுமையாக போலீஸார் விசாரித்திருக்க வேண்டும். நகை திருடுபோக வாய்ப்பில்லை. அது பொய்யான குற்றச்சாட்டுதான். கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தன்னுடைய ஆளுமையை காட்ட வேண்டுமென்று எண்ணித்தான் புகார் கொடுத்துள்ளார். ஈகோ பிரச்சினை கொலையில் முடிந்துள்ளது.

அஜித்குமார் கொலைக்கு அரசு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும், நிகிதா குடும்பத்தை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். நிகிதா தந்தை கோட்டாட்சியராக இருந்தவர். அவரது அம்மா அரசு ஊழியர். அவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே, திருமண மோசடியில் 2 எஸ்பிகள், ஒரு டிஎஸ்பி உதவி செய்தனர். அதேபோல் அவருக்கு தற்போது அதிகாரத்தில் இருக்கிறவர்கள் உதவி செய்திருக்கலாம்” என்று அவர் கூறினார்.

கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகிதா, மதுரை திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்தவர். திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிகிறார். நிகிதாவின் தந்தை ஜெயபெருமாள், தாயார் சிவகாமி அம்மாள், சகோதரர் கவியரசு என்ற வைபவ் சரண், இவரின் மனைவி சுகதேவி, உறவினர் பகத்சிங் ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்திருப்பதாக ஏற்கெனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திருமங்கலம் உதவி எஸ்.பி.யிடம் இன்று (ஜூலை 3) பலரும் புகார் அளித்தனர் என்பது கவனிக்கத்தக்கது.



By admin