நூல் பார்வை: அன்பாதவன்
நூல் : மகரந்தக் கவிதைகள்
நூலாசிரியர்: வதிலைபிரபா
பக்கம் : 136
விலை : ₹160
பதிப்பகம் : ஓவியா பதிப்பகம்
8-13-11, பில்டிங் சொசைட்டி இரண்டாவது தெரு,
வத்தலகுண்டு 624 204
திண்டுக்கல் மாவட்டம். அலைபேசி : 766 755 711 4
•
“நவீன கவிதைகள் வரத் தொடங்கியதும் வாசிப்பில் ஆகப் பெரும் சவாலாக எதைக் கருதி னோம்? சொற்களைத்தான். பழக்கமான பொருளில் அவை இல்லை. சொற்கள் கவிதைக்குள்ளிருந்து புதிதாகப் பிறந்தன. பொருள் கொள்வதையும் கவிதைகளே தீர்மானித்தன. ஒவ்வொரு கவிதையும் தனித்த அடையாளங்களைக் கொண்டிருந்தது. அகச்சூழலும் அதன் அடர்த்தியும் கவிதைக்குக் கவிதை வேறானதாக இருந்தது. அகம், புறம் என்று சுட்டமுடிந்த சங்ககாலம் தொடங்கிப் பிறகான பாடல்களும் வகைமாதிரிகளைக் கொண்டிருந்தன.”- க.வை. பழனிசாமி [கவிதையின் அந்தரங்கம்- முன்னுரையில்]
கவிதையை மொழியின் இளவரசி என்போம்,காரணம் கவிதையின் மீது ஆளுமை செலுத்துவது மொழி. நமக்கு தெரிந்த, அறிமுகமான சொற்கள் தாம் ஆனால் நாம் புரிந்த பொருளில் இல்லை. கவிதை எனும் குகைக்குள் திறக்கப்படுபவை. மனிதர்களின் அந்தரங்கக் கதவுகள். குகைக்குள் நுழைபவர்க்கு காத்திருக்கிறது புதிய உலகம். உள் நுழையும் கவிவாசகன் எவருடைய உதவியுமின்றி புத்துலகுக்குள் புத்தனுபவம். கிடைக்கும் வாய்ப்பு.
தமிழ்க் கவிதையுலகில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர்களில் கவிஞர் வதிலைபிரபா முக்கியமானவர். தன்னைச் சுற்றி நிகழும் எதையும் கவிதையாக்கும் வதிலைபிரபா வின் புதியக் கவிதைத் தொகுப்பாக வாசகன் கரங்களில் ” மகரந்தக் கவிதைகள்” நூல்.
தமிழில் நவீனக் கவிதைகள் வானிற்கு கீழேயுள்ள எது குறித்தும் பேசும்; விவாதிக்கும்! கவிஞர்கள் தேர்ந்தெடுக்கிற மொழியும் கட்டமைக்கிற அரசியலுமே கவிதைகளின் திசைவழியைத் தீர்மானிக்கின்றன. வதிலைபிரபா வின் இந்தப் புதிய தொகுப்பின் பல கவிதைகள் முகநூலில் வெளியிடப் பட்டுள்ளதாக கவிஞர் குறிப்பிடுவதால் இவை சமகால சிந்தனைகளின், அந்தந்த நேரத்து மனக் கொந்தளிப்பின் வடிகட்டியப் பிரதிகளாகவும் இருக்கின்றன
“குருவிகள் கூட்டமாய்
உரையாடும் அழகு.
நெல் பொறுக்கி
சொல் பொறுக்கி
எழுத எழுத/ ஒரு கவிதை.[ப.38]”
-இதில் ‘சொல் பொறுக்கி’ எனும் சொல் மிக முக்கியமானது. இந்தத் தொகுப்பில் வதிலைபிரபா கவிதைக்கென சொற்களைத் தேர்ந்தெடுத்து கவிதைகளைக் கோர்த்திருக்கிறார்.
“ஒரு விதைநெல்லில் பசியாற
புல்லாங்குழலின் ஒரு துளையில் இசைக்க
ஓரெழுத்தில் ஒரு கவிதை புனைய
ஒரு புள்ளியில் பேரண்டம் உருவாக்க
கற்றுக் கொள்!
உன் ஒற்றை விரல்
லட்சம் பேரைத் தீண்டுகிறது பார்! [ப.31]”
வதிலைபிரபாவின் கவிதைகளை நம்முள் கலந்த பல்வேறு அனுபவங்களோடுதான் வாசிக்கிறோம். இந்தத் தொகுப்பின் கவிதைகள் தன்னளவில் கொண்டிருக்கும் பிரத்யேகமான அனுபவம் வாசகமனத்தில் உள்நுழைய கவிதை குறித்த புதுவிதமான அனுபவம் தீயாய்ப் பற்றுகிறது.
“கூர் வாளெடுத்து வீசுகிறான்
கவிதை மீது
இப்போது இரண்டாகப் பிளந்து
இருவேறு கவிதைகளாகிறது.
மீண்டும் மீண்டும் பிளக்கிறான்
மீண்டும் மீண்டும் உருவாகிறது
கவிதை! [ப.36] “
“ஒரு கவிஞர் எழுதும் விஷயங்கள், முன் வைக்கும் கேள்விகள் பெரும்பாலும் அவருடையதாகவே இருக்குமென்றாலும் அப்படியாக மட்டுமே இருக்குமென்று சொல்ல முடியாது; அதற்கானத் தேவையுமில்லை, ஆனாலும் ஒரு கவிஞருடைய கவிதையில் கவிதை சொல்லியும் தொடர்புடையவர்களாகவும் மாறிவிழுவதே அந்த பரிவதிர்வே ஒரு கவிதையை நமக்கு நெருங்கியதாக்குகிறது என்று தோன்றுகிறது – என்பது கவிஞர் லதா ராமகிருஷ்ணன் கருத்து. (அன்பாதவனின் கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்கள் முன்னுரையில்..)
“முன்பொருமுறை சந்தித்தேன்
மகிழ்ந்திருந்தான்/
அவனிடம் புதுக் கவிதைகள் இருந்தன.
இப்போது சந்தித்தேன்
மதுவிலிருந்தான்
அவனிடம் நவீனக் கவிதைகள் இருந்தன.[ப.131]”
சமகாலக் கவிதை உலகின் மீது கவிஞர் வீசும் கடுமையான விமர்சனமெனக் கொள்ளாலாமா..? ஆனால் உண்மையும் இந்தக் கவிதைக்கு மிக நெருக்கமாக இருக்கிறதையும் மறுப்பதற்கில்லை. ஒரு பிரபல நவீனக்கவிஞருக்கு வாழ்வியல் பாதுகாப்புக்காக சில நண்பர்கள் பணம் வசூலிக்கிறார்கள், றிதொரு நண்பர் UNOFFICIAL ஆகக் கூறியதிது:” இந்த மொத்த பணத்தையும்..அவர் அரிசிப்பருப்பா வாங்கப் போறார்..பேசாம டாஸ்மாக்கில் அட்வான்சா கட்டிடலாம்”. கசக்கும் நிஜமிது.
“பெரும்பாலும்
நவீனக் கவிஞர்களின்
கவிதையெனும் குறிப்புகள்
இரவு நேரங்களில் எழுதுகிற
யாரோ ஒருவருக்கான
சங்கேதக் குறியீடாகத்தான் இருக்கின்றன.” [ப.39]
“கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தொந்தரவு செய்யாதீர்கள்!” [ப.128]
“என் கவிதைகளை
ஒருபோதும் நான் எழுதுவதில்லை!” [ப.14]
“ஒருபுறம் கவிதையை
அவன் எழுதுகிறான்
மறுபுறம் கவிதை
அவனை எழுதுகிறது!” [ப40]
ஒரு பொருண்மையில் உள்ளடக்கம் அமைகையில் இதுபோன்ற சுவாரசிய முரண்கள் தவிர்க்க முடியாதவை;

வதிலைப் பிரபா
“வார்த்தைகள் பயனற்றதாகிற இடத்தில் பேசுகிற நிர்ப்பந்தம் கவிதை. முடிவிலியைப் பார்ப்பதல்ல கவிதை. முடிவின்மையை உணர்த்துவது கவிதை. வார்த்தைகளின் ஊடாகத் தன்னைப் பார்க்க முயல்கிறது கவிதை. கவிதை தன்னைப் பார்க்க விழைகிற தருணம் ஒன்றிற்குக் காத்திருக்கத்தான் வேண்டும். தன்னை அது காணும் தருணத்தில் நாமும் கவிதையைப் பார்க்கிறோம், உணர்கிறோம். இந்தக் கவிதையின் அழகே கவிதை சொல்லியே தனது வார்த்தைகளைத் துறப்பதில் நிகழ்கிறது.’ என்பார் கவிஞர் க. வை. பழனிசாமி [கவிதையின் அந்தரங்கம் பக் 68)”
VathilaiPraba
“என் கவிதை எனக்கானது அல்ல
என் கவிதைக்கு ஒருபோதும்
நான் உரிமை கோரியதில்லை.
என் கவிதையைச் சுமந்து செல்லும்
காற்றுக்குத் தெரியும்
எந்தக் கூரைமீது விடுவதென்று,
பற்றி எரிகிற கூரைகள் அவை.
இப்போது என் கவிதை எரிகிறது.
எரிகிற கூரை அணையும் ஒருநாள்
அன்று
என் கவிதை யாருக்கானது எனத் தெரியும்!”
அவரவரின் உரிமைகளைச்
சுமந்து வருமிந்தக் கவிதைக்கு
எப்படி நான் உரிமை கோருவேன்?
ஏனென்றால்
என் கவிதை எனக்கானது அல்ல[.ப,71]
கவிதையின் வெளியில் காலத்தின் இருப்பு மிக முக்கியமானது,உணர்வுகள் பொங்கும் கவிதைகளில் சொற்சிக்கனத்தையும் கவிஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். கவிஞர். சொற்களின் கருமியாவது கவிதைக்கு சிறந்தது.
“ஒற்றைச் சுவரில் நழுவாது பதுங்கும் பூனையொன்று எனக்குள்ளிருந்து வெளிவருகிறது கவிதையென.
ஆயிரம் எலிகளை வேட்டையாடிய திமிருடன் பூனையொன்று மதில் தாண்டுகிற இந்த இரவில் விழித்துக் கொண்டிருக்கிறது இன்னுமொரு கவிதை.ப.37”
வதிலைபிரபாவின் இந்தத் தொகுப்பில் எலியும் பூனையுமாய் கவிதையிலொரு கண்ணாமூச்சி ஆட்டம் தான் நிகழ்கிறது, அது வாசகனை வசீகரிக்கிறது
“என் கவிதையைக்
கிழித்தெறிந்ததாய்ச் சொல்கிறாய்!
அத்தனை இலகுவானதா கவிதை?”
கிழித்தெறிந்தது எதனை? எழுதியவரையா..எழுதியவற்றையா..?
“கவிதை எழுதுவது அவ்வளவு சுலபமல்ல.
வாசிப்பவர்களுக்கு அது புரியும்”.
“பெரும் ஆரவாரங்களுக்கிடையே
நிறைவு செய்கிறாய் கவிதையை!
கவிதை முடிய ஆரவாரமும் அடங்குகிறது!
எஞ்சியிருப்பவை
கவிதையா? கைதட்டலா?” [ப63]
வதிலைபிரபாவுக்கு மட்டுமான வினாவல்ல..! இது ஒவ்வொரு கவிதைத் தொகுப்புக்கும் பொருந்தும். “கவிதை மிக எளிமை என்றால் எளிமையானது. எளிமை மொழியில் எழுதியும் வாசித்தும் விடலாம் என்பது மேம்போக்கான ஒரு கூற்று. ஒரு சிறு கவிதைக்குள் ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒரு சிறுகதையில் சொல்லி விடக்கூடிய, ஒரு புதினத்தில் சொல்ல வேண்டிய ஒன்றை சிலவரிகளுக்குள் சொல்லிவிட வேண்டும். அது வாசகனை வசீகரிக்க வேண்டும். வாசகனை ஏதாவது செய்ய வேண்டும். இந்த சொற்களுக்குள் நிகழ்த்தப்படும் அற்புதம் கவிதை”-எனக் குறிப்பிடுவார் -கவிஞர் இரா. பூபாலன் (மாயநதியின் கால்தடம் – முன்னுரையில்]
அத்தகையதொரு வார்த்தை வசீகரமுள்ளத் தொகுப்பை வாசிக்கப் பரிந்துரைக்கிறேன்.

அன்பாதவன்
The post எலியும் பூனையுமாய் கவிதையிலொரு கண்ணாமூச்சி ஆட்டம் appeared first on Vanakkam London.