1
ஜூலை 1, 2026: விருதுகள் பெற்ற தமிழ் எழுத்தாளரும் ஆசிரியருமான தீபச்செல்வன் பிரதீபன் அவர்களின் இரண்டு நூல்களின் பிரதிகளை இலங்கை சுங்கத் திணைக்களம் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து சர்வதே அளவில் எழுத்தாளர்களுக்காகச் செயற்படுகின்ற PEN International ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
எஞ்சியுள்ள அனைத்து நூல்களையும் தாமதமின்றி விடுவிக்குமாறும், தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு போன்ற தெளிவற்ற சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி இலக்கிய வெளிப்பாட்டை ஒடுக்குவதையும் சிறுபான்மை மக்களின் குரல்களை மௌனமாக்குவதையும் நிறுத்துமாறும் அது இலங்கை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
PEN International-இன் Writers for Peace Committee-யின் தலைவர் ஜெர்மன் ரோஹாஸ் (Germán Rojas) கூறியதாவது:
“தீபச்செல்வன் பிரதீபனின் நூல்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, இலக்கியச் சுதந்திரத்தின் மையத்தையே தாக்கும் தணிக்கைச் செயலாகும். எழுத்தாளர்கள், தங்களது படைப்புகள் அரச அதிகாரிகளால் ஒடுக்கப்படும் என்ற அச்சமின்றி எழுதுவதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே பல ஆண்டுகளாக வெளியிடப்பட்ட நேர்காணல்கள் மற்றும் கருத்துரைகளின் தொகுப்புகளாக உள்ள நூல்களை தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தால் தடுத்து வைப்பது, சட்டபூர்வமான கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
2026 மார்ச் 18 அன்று, வடக்கு இலங்கையின் கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரும் பாடசாலை ஆசிரியருமான தீபச்செல்வன் பிரதீபனின் நூல்கள் அடங்கிய ஒரு சரக்கை இலங்கை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்தது. இந்தியாவில் மறுபதிப்பிடப்பட்டிருந்த அந்த சரக்கில் நாவல்கள், கட்டுரைகள், நேர்காணல்கள் மற்றும் முன்னர் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புகள் உள்ளிட்ட ஐந்து நூல்கள் இடம்பெற்றிருந்தன.
தீபச்செல்வன் பிரதீபன், போர், நினைவு, இழப்பு, நல்லிணக்கம் மற்றும் இலங்கையின் பல தசாப்த கால உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வனுபவங்களை மையமாகக் கொண்டு நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் புனைவற்ற எழுத்துகளைப் படைத்துவரும் பரவலாக மதிக்கப்படும் இலக்கிய ஆளுமையாகக் கருதப்படுகிறார். அவரது பல படைப்புகள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவை இனங்களுக்கும் மொழிகளுக்கும் இடையிலான புரிதலையும் உரையாடலையும் ஊக்குவித்துள்ளன.
பொதுமக்கள் மற்றும் எழுத்தாளர் அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் மூன்று நூல்களை விடுவித்தனர். இருப்பினும், “எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்” (2008 முதல் 2024 வரையிலான நேர்காணல்களின் தொகுப்பு) மற்றும் “இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்” (முன்னர் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு) ஆகிய இரண்டு நூல்கள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
சுங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை கலை மன்றம் மற்றும் அரச இலக்கிய உபக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த இரண்டு நூல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், அவற்றில் இலங்கை தண்டனைச் சட்டத்தின் 120ஆம் பிரிவின் கீழ் வரக்கூடிய, அரசுக்கு எதிரான அதிருப்தி உணர்வுகளைத் தூண்டக்கூடிய உள்ளடக்கங்கள் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இந்த இரண்டு நூல்களும் பெரும்பாலும் பல ஆண்டுகளாக இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்களில் ஏற்கனவே வெளியிடப்பட்ட நேர்காணல்கள், கட்டுரைகள் மற்றும் கருத்துரைகளின் தொகுப்புகளாகும். அவற்றின் உள்ளடக்கம் சட்டவிரோதமானது என்று எந்த நீதிமன்றமும் இதுவரை தீர்ப்பளிக்கவில்லை. மேலும், அவற்றை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதற்கான விரிவான காரணங்களையும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தவில்லை.
இந்த இரண்டு நூல்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது, இலங்கையில் தமிழ் மொழி இலக்கியங்கள் எதிர்கொள்ளும் நிலைமை குறித்த பரந்த கவலைகளையும் எழுப்புகிறது. அண்மைய ஆண்டுகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்களின் பிற நூல்களும், குர்ஆன் பிரதிகளும் கூட சுங்கக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சிறுபான்மை சமூகங்களின் குரல்களும் அவர்களின் வெளியீடுகளும் அதிகப்படியான கண்காணிப்புக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றன என்ற அச்சத்தை வலுப்படுத்துகிறது.
எனவே, இலங்கை அதிகாரிகள்:
இலங்கை சுங்கத் திணைக்களத்தில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வன் பிரதீபனின் அனைத்து நூல்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
வன்முறையைத் தூண்டாத இலக்கிய மற்றும் ஊடகப் படைப்புகளை தணிக்கை செய்வதற்காக தேசிய பாதுகாப்பு, சுங்கம் அல்லது பொது ஒழுங்கு தொடர்பான சட்டப்பிரிவுகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சமூகங்களையும் சேர்ந்த எழுத்தாளர்கள் எந்தவித பாகுபாடும் தேவையற்ற அரச தலையீடும் இன்றி தங்களது படைப்புகளை வெளியிடவும், விநியோகிக்கவும், விவாதிக்கவும் உரிமை பெற்றிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்…” என PEN International தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.