குற்றவாளிகள் மோசடிகளைப் பன்மடங்கு பெருக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால், பொருள் வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; எனவே, நீங்கள் பொருட்களை வாங்கும் இடத்தில் கவனமாக இருங்கள்.
சில மோசடியாளர்கள், போலியான சில்லறை விற்பனையாளர்களுக்கான இணையதளங்களை உருவாக்கியுள்ளனர். தரமான, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் குடும்பத்தினரால் நடத்தப்படும் நிறுவனங்கள் என அவை தங்களைக் கூறிக்கொள்கின்றன.
இந்த இணையதளங்களில், பின்னணியில் யூனியன் ஜாக் கொடிகள் இடம்பெற்றுள்ள பிரிட்டனின் முக்கிய வீதிகளைக் காட்டும் படங்களும் இருக்கலாம்.
இந்த இணையதளங்களில் பொருட்களை ஆர்டர் செய்தால், அவை உங்களிடம் வந்து சேராமல் போகலாம் அல்லது சீனா போன்ற நாடுகளில் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட மலிவான பொருட்கள் கிடைக்கலாம் என்று வர்த்தகத் தரநிலைகள் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்கள், குரல் நகலாக்கத் தொழில்நுட்பம் மற்றும் டீப்ஃபேக் காணொளிகள் ஆகியவை மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தேசிய வர்த்தகத் தரநிலைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
முதன்முறையாக, குற்றவாளிகள் பயன்படுத்தும் சில கருவிகள் மற்றும் நுட்பங்களைச் சுட்டிக்காட்டும் வகையில், செயற்கை நுண்ணறிவு மோசடிகளுக்கான கண்காணிப்புப் பட்டியலை அந்த அமைப்பு தயாரித்துள்ளது.
கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன?
தந்திரங்களில் அடங்குபவை:
குறுகிய நேரத்திலும் குறைந்த செலவிலும், நேர்த்தியாகவும் தொழில்முறையாகவும் தோற்றமளிக்கும் வகையில் போலியான அல்லது ஏற்கெனவே உள்ள இணையதளங்களைப் போன்ற புதிய இணையதளங்களை உருவாக்குதல்.
காதலின் பெயரில் நடைபெறும் மோசடிகளில், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட விவரங்களை நினைவில் வைத்துக்கொண்டு, பல வாரங்கள் அல்லது மாதங்கள் தொடர்ந்து உரையாடுவதற்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, “அவசரநிலை” ஏற்பட்டுள்ளதாகக் கூறிப் பணம் கேட்பதற்காக, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் காணொளிகளும் குரல் நகலாக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒலிப்பதிவுகளும் பயன்படுத்தப்படுகின்றன.
பிழைகளே இல்லாத, தனிப்பட்ட விவரங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட மோசடி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளைச் செயற்கை நுண்ணறிவு மூலம் மிகப் பெரிய அளவில் உருவாக்க முடியும்.
நான் என்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது?
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் காரணமாக, மோசடிகளைத் தவிர்ப்பதற்காக முன்பு பின்பற்றப்பட்ட சில வழிமுறைகள் இப்போது குறைவான பலனையே அளிக்கக்கூடும்.
எழுத்துப் பிழைகள் அல்லது இலக்கணப் பிழைகளை மட்டும் வைத்து மோசடிகளைக் கண்டறிய முடியாது என்று நுகர்வோர் அமைப்பான ‘விச்?’ (Which?) தெரிவிக்கிறது.
வர்த்தகத் தரநிலைகள் அமைப்பின் கூற்றுப்படி, மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான சில வழிமுறைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
நேரில் சந்தித்திராத ஒருவருக்குப் பணம், பரிசு அட்டைகள் அல்லது தனிப்பட்ட அல்லது நிதி தொடர்பான தகவல்களை ஒருபோதும் அனுப்ப வேண்டாம்.
நீங்கள் வாங்கும் பொருட்களைப் பற்றியும் நிறுவனங்களைப் பற்றியும் ஆராயுங்கள். உதாரணமாக, ஒரு கடையின் முகவரி உண்மையானதா என்பதைச் சரிபார்க்கவும். நிதி ஆலோசனை வழங்குவதற்கு ஓர் நிறுவனம் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, நிதி நடத்தை ஆணையத்தின் நிறுவனச் சரிபார்ப்புக் கருவியைப் பயன்படுத்தவும். வேலைவாய்ப்பு விளம்பரம் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த, சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.
ஒருவரின் குரலைக் கேட்டிருக்கிறீர்கள் அல்லது காணொளி அழைப்பில் அவரைப் பார்த்திருக்கிறீர்கள் என்பதற்காக மட்டுமே அவர் உண்மையான நபர் என்று நம்பிவிட வேண்டாம்.
பொதுவாக, பணம் செலுத்துவதற்கு முன்பும், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதற்கு முன்பும் அல்லது ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அழுத்தம் அல்லது அவசரம் குறித்து நீங்கள் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் யோசிப்பதற்கு நேரம் கிடைப்பதற்கு முன்பே குற்றவாளிகள் உங்களைச் செயல்பட வைக்க விரும்புவார்கள்.
மோசடிகள் மற்றும் ஏமாற்றுச் சம்பவங்கள் குறித்து ரிப்போர்ட் ஃபிராட் இணையதளத்தில் புகார் அளிக்கலாம் அல்லது 0300 1232040 என்ற எண்ணை அழைக்கலாம். ஆலோசனை பெற, சிட்டிசன்ஸ் அட்வைஸ் நுகர்வோர் உதவி எண்ணான 0808 223 1133 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.