‘நிமிஷா பிரியா’, இந்தப் பெயர் மீண்டும் செய்திகளில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷாவுக்கு, 2017இல் ஏமனில் அந்நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது ஏமனின் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷா. தலால் அப்தோ மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்படலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அவருக்கு, ஜூலை 16 மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நிமிஷா பிரியாவின் குடும்பத்தின் சார்பாக, ஏமனில் இந்த வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம் பிபிசி தமிழிடம் இதைக் கூறினார். ஆனால், இதை பிபிசியால் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியுடன் இந்தியாவுக்கு நேரடியாக தூதரக உறவுகள் இல்லை என்பதால், இந்திய தூதரகமும் இந்தச் செய்தியை இதுவரை உறுதி செய்யவில்லை.
ஜூலை 16-ஆம் தேதிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நிமிஷாவைக் காப்பாற்ற ஏதேனும் வாய்ப்புகள் உள்ளனவா?
‘மரண தண்டனைக்கான தேதி அறிவிப்பு’
ஏமன் நாட்டில் இஸ்லாம் மதத்தின் ஷரியா சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்டவரின் (தலால் அப்தோ மஹ்தி) குடும்பம் மன்னிப்பு அளித்தால், நிமிஷாவின் தண்டனை ரத்து செய்யப்படும். அந்த மன்னிப்பிற்கு ஈடாக ‘ப்ளட் மணி’ (Blood money) அல்லது தியா (Diyah) எனப்படும் நஷ்டஈடு (பெரும்பாலும் பணம்) வழங்கப்படும்.
நிமிஷாவின் குடும்பத்தின் சார்பாக ஏமனில் இந்த வழக்கை கையாள மற்றும் மன்னிப்பு பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க அதிகாரம் பெற்றவர் (Power of attorney) சாமுவேல் ஜெரோம். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர், ஏமனில் பல வருடங்களாக வானூர்தி ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் தனது தனிப்பட்ட வேலைகளுக்காக தமிழ்நாட்டிற்கு வந்தவர், நிமிஷா குறித்த செய்தி தெரியவந்ததும் ஏமன் வந்தடைந்தாகக் கூறுகிறார்.
ஏமனின் ஏடன் நகரில் இருந்து தொலைபேசி மூலம் பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஜூலை 16, நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற செய்தி எனக்கு திங்கட்கிழமை (ஜூலை 8) கிடைத்தது. சனா நகரின் சிறைச்சாலைத் தலைவர் தொலைபேசி மூலம் அதைக் கூறினார்.
உடனடியாக சௌதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்தேன். அவர்கள் சனாவில் உள்ள தங்கள் அதிகாரிகள் மூலம் இதை உறுதி செய்தனர்” என்று கூறுகிறார். (இதனை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.)
ஏமனில், தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில், 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் நிமிஷா (தற்போது 35 வயது). 2020ஆம் ஆண்டில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து நிமிஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை ஏமனின் உச்ச நீதிமன்றம் நவம்பர் 2023இல் தள்ளுபடி செய்து, மரண தண்டனையை உறுதி செய்தது.
நவம்பர் 2023இல் உறுதி செய்யப்பட்ட தண்டனையை நிறைவேற்ற ஏமனின் ஹூதி பிரிவு அதிபர் மெஹ்தி அல் மஷாத், இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தார்.
நிமிஷாவைக் காப்பற்ற இந்திய அரசு கொடுத்த அழுத்தம்
உள்நாட்டுப் போரால் பிளவுபட்டுள்ள ஏமன் நாடு தற்போது 3 பிரிவினரால் ஆளப்படுகிறது. அதில் ஒன்று ஹூதி கிளர்ச்சிக் குழு.
சனா உள்ளிட்ட ஏமனின் ஒரு பகுதி ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹூதிக்களின் அரசியல் பிரிவு தலைவராக உள்ள மெஹ்தி அல் மஷாத், அந்த கிளர்ச்சிக்குழு அமைத்துள்ள ஏமன் குடியரசின் (சனா) அதிபராக செயல்படுகிறார். ஹூதி கிளர்ச்சிக் குழுவை இந்திய அரசு இதுவரை அங்கீகரிக்கவில்லை.
ஆனால், இந்திய அரசின் சார்பாக ஹூதி குழுவுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே நிமிஷாவின் தண்டனை தள்ளிவைக்கப்பட்டது என்று சாமுவேல் ஜெரோம் கூறுகிறார்.
“மஹ்தியின் குடும்பத்திடம் மன்னிப்பைப் பெறுவதற்காகவே நாங்கள் பல மாதங்களாக முயற்சித்து வந்தோம். அவர்கள் ஏமனின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ள எங்களுக்கு அதிகாரம் இல்லை. மத்தியஸ்தர்கள் மூலம் பேசி வந்தோம். அவர்கள் இதுவரை எங்களிடம் மன்னிப்பிற்கு சம்மதமும் தெரிவிக்கவில்லை, மறுப்பும் தெரிவிக்கவில்லை.” என்கிறார் ஜெரோம்.
இந்நிலையில், ஜூலை 16ஆம் நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற ஆணை, மஹ்தி குடும்பத்தின் ஒப்புதல் இல்லாமல் வந்திருக்காது என அவர் குறிப்பிடுகிறார்.
“ஆணை வந்ததை சிறைத் தலைவர் என்னிடம் உறுதிப்படுத்திவிட்டார். விதிகளின்படி அதை பிறப்பிப்பதற்கு முன், மஹ்தி குடும்பத்தினரிடம் ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா எனக் கேட்பார்கள். எனவே, அவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பது தெளிவாகிறது” என்கிறார் ஜெரோம்.
மஹ்தியின் குடும்பத்துடனான பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ என்ற குழு நிமிஷாவை மீட்பதற்கு தேவையான நிதியை நன்கொடை மூலம் திரட்டி வந்தது. இந்தக் குழுவின் உதவியால், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏமன் சென்றார்.
நிமிஷாவை மீட்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக சுமார் 34 லட்சம் ரூபாய் (40,000 அமெரிக்க டாலர்கள்) இந்திய வெளியுறவுத்துறையால் நியமிக்கப்பட்ட ஏமனிய வழக்கறிஞரின் கணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால், இது மஹ்தியின் குடும்பத்திற்கான ‘தியா’ பணம் அல்ல.
இதுகுறித்து பேசிய கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் சேவ் நிமிஷா கவுன்சிலின் துணைத் தலைவர் தீபா ஜோசப், “ஏமனின் பழங்குடி மக்களுடன் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்வது சுலபமான விஷயம் அல்ல. அதற்கான செலவுகளுக்கே இந்தப் பணம் அனுப்பப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தைகள் அடுத்தடுத்த கட்டங்களை எட்டவில்லை.” என்கிறார்.
மஹ்தியின் குடும்பத்திடம் மன்னிப்பு கோருவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஏமனைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் உதவினர் என்று சாமுவேல் ஜெரோம் கூறுகிறார்.
“இந்தப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்வதற்கான செலவுகள் இரு தவணைகளாக, இந்திய வெளியுறவுத் துறையால் நியமிக்கப்பட்ட ஏமன் நாட்டின் வழக்கறிஞரின் கணக்கில் செலுத்தப்படும் என்பதே ஒப்பந்தம்.”
“ஆனால் இரண்டாம் தவணை பணம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை. இதனால் மஹ்தியின் குடும்பத்தினர் விரக்தி அடைந்தனர்” என்கிறார் ஜெரோம்.
நிமிஷாவைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்
‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ குழு, தன்னார்வலர்கள், நிமிஷாவின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உதவியால் மஹ்தியின் குடும்பத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை (இந்திய மதிப்பில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய்) ‘தியா’ பணமாக அளிக்க முடியும் என கோரிக்கை வைத்தும் மஹ்தியின் குடும்பம் எந்த நேர்மறையான பதிலையும் கொடுக்கவில்லை என்கிறார் தீபா ஜோசப்.
“மஹ்தியின் குடும்பத்திற்கு ‘ப்ளட் மணி’ கொடுப்பது மட்டுமே நோக்கமல்ல. சௌதியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சில ஏமன் குடும்பங்களின் மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவுகளை ஏற்றுக்கொள்வது போன்ற திட்டங்களும் முன்வைக்கப்பட்டன. ஹூதி குழுக்களுடன் இந்திய அரசுக்கு நேரடி தூதரக உறவுகள் இல்லை என்பதால் பல தடைகள் இருந்தன.” என்கிறார் தீபா.
மேலும், “மஹ்தியின் குடும்பம் இதுவரை எந்த நிபந்தனையையும் வைக்கவில்லை, பணமும் கேட்கவில்லை. அவர்கள் மன்னிப்பு வழங்க விரும்பவில்லை என்பதே உண்மை. ஒருவேளை இந்த ஐந்து நாட்களில் அவர்கள் மனம் மாறினால், நிமிஷாவைக் காப்பாற்றலாம்” என்கிறார் தீபா.
இறுதி வாய்ப்பு
ஜூலை 16க்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மஹ்தியின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஏமனின் ‘இன்ப்ளூயன்சர்ஸ்’ (அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் அல்லது ஏமனின் பழங்குடி குழுக்களிடையே செல்வாக்கு பெற்றவர்கள்) மூலம் முயற்சி செய்வதே நிமிஷாவைக் காப்பற்றுவதற்கான இறுதி வழியாக இருக்கும் என ஜெரோம் கூறுகிறார்.
“எந்த ‘இன்ப்ளூயன்சர்ஸ்’ முலமாக, எப்படி இந்த விஷயத்தை அணுகலாம் என இரண்டு நாட்களாக ஏமன் அதிகாரிகள் மற்றும் ஏமனில் உள்ள இந்திய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். ஜூலை 10 அன்று நான் சனா நகரத்தை அடைவேன். அதன் பிறகு முழு வீச்சில் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்படும்” என்கிறார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏமன் சென்ற நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, இருமுறை நிமிஷாவை சனாவின் மத்திய சிறையில் சந்தித்துப் பேசினார். அவர் தற்போது சாமுவேல் ஜெரோமின் குடும்பத்துடன் சனாவில் தங்கியுள்ளார்.
பிரேமா குமாரியுடன் பேச பிபிசி தமிழ் முயற்சித்தபோது, “நிமிஷாவின் மரண தண்டனை குறித்த சமீபத்திய தகவலால் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறார், நாளை பேசுவார்” என்று சாமுவேல் ஜெரோம் குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
அடுத்த 5 நாட்களுக்குள் மஹ்தி குடும்பத்துடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால், நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுப்பது கடினம் என்கிறார் ஜெரோம்.
இந்திய அரசின் தலையீடு உதவுமா எனக் கேட்டபோது, “தன்னால் முடிந்த அனைத்தையும் இந்திய அரசு செய்துவிட்டது. அதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். ஹூதி கிளர்ச்சிக் குழுவுக்கு, இந்தியா மீது பெரும் மதிப்பு உள்ளது. நிமிஷாவின் தண்டனை இப்போது வரை நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு காரணமே இந்திய அரசுதான். ஒருவேளை அரசு நேரடியாக தலையிட்டால், ஒரு தீர்வு கிடைக்கும். எனவே நிமிஷாவைக் காப்பாற்ற வேண்டுமென இந்திய அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.” என்கிறார் ஜெரோம்.
வழக்கின் பின்னணி
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த 35 வயதான நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.
அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.
நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.
மஹ்திக்கு ‘அதிகப்படியான மயக்க மருந்து’ கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.
மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
ஆனால், 2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு