ஏமன் நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவரை மீட்பதற்கான பல்வேறு முயற்சிகளை அவரது குடும்பத்தினர் எடுத்து வரும் நிலையில், அவரது மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மனித உரிமை ஆர்வலரும், நிமிஷா பிரியாவின் தாயார் சார்பாக வழக்கைக் கையாளும் அதிகாரம் கொண்டவருமான சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார்.
நிமிஷா பிரியா தற்போது ஏமன் தலைநகரான சனாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மீட்பதற்கு ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ என்ற குழுவும், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரியும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தனர். பிரேமா குமாரி, இதற்காக இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏமன் சென்றார்.
ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் இருப்பதால், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ‘ப்ளட் மணி (Blood Money)’ என்னும் இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்து மன்னிப்பு பெறுவதன் மூலம் மட்டுமே நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியும்.
அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் நாட்டு அதிபர் மெஹ்தி அல் மஷாத்(ஹூதி பிரிவு) கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளித்தார்.
மரண தண்டனை தேதி அறிவிப்பு
நிமிஷா பிரியா தற்போது ஏமனில் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மத்திய சிறையின் தலைவர் தொடர்புகொண்டு மரண தண்டனை தேதி முடிவு செய்யப்பட்டது குறித்துத் தனக்குத் தெரிவித்ததாக ஜெரோம் கூறுகிறார்.
அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நேற்று சிறைத் தலைவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதியன்று நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து இந்திய தூதரகத்திற்கும் தெரிவித்துள்ளேன். இந்திய தூதரக அதிகாரி நேரடியாகச் சென்று மரண தண்டனை ஆவணத்தைப் பார்த்து உறுதி செய்துள்ளார்” என்று தெரிவித்தார்.
அதோடு, “நான் ஏமனுக்கு பயணித்துக் கொண்டிருக்கிறேன். அங்கு சென்றபிறகு என்ன வாய்ப்புகள் நம் முன் இருக்கின்றன என்பதைப் பார்க்கவுள்ளேன். இன்னமும் இதில் இந்திய அரசு தலையிட முடியும்” என்று சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார்.
நிமிஷா பிரியாவை காப்பாற்ற இருக்கும் வழி என்ன?
நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம். பல ஆண்டுகளாக ஏமன் நாட்டில் வானூர்தி ஆலோசகராகப் பணிபுரியும் ஜெரோம், மஹ்தி குடும்பத்தினரின் மன்னிப்பை நிமிஷாவுக்கு பெற்றுத் தருவதற்கான முயற்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
கடந்த 2023 டிசம்பரில் பிபிசி தமிழிடம் பேசியபோது, மன்னிப்பு பெறுவதற்கான செயல்முறையில் பணம் பிரதானமல்ல என்று கூறிய ஜெரோம், “ப்ளட் மணி (Blood money) என்பது மன்னிப்புக்கான ஓர் அடையாளம் மட்டுமே. வேறு சில வழக்குகளில் 5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 42 கோடிகள்) கொடுக்க முன்வந்தும்கூட பாதிக்கப்பட்ட ஏமன் குடும்பங்கள் மன்னிப்பு வழங்கவில்லை. எனவேதான் மஹ்தியின் குடும்பத்தாருடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது,” என்றார்.
இந்த மன்னிப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய அவர், “மரண தண்டனைக்கு ஏமன் அதிபர் அளித்துள்ள ஒப்புதல், அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, பிறகு அவர் மரண தண்டனையை நிறைவேற்ற ஆணை பிறப்பிப்பார். அதற்கு முன், மஹ்தியின் குடும்பத்தை அழைத்து ‘நிமிஷாவுக்கு தண்டனை வழங்குவதில் ஆட்சேபம் உள்ளதா எனக் கேட்பார்’. அவர்கள் விருப்பமில்லை அல்லது நிமிஷாவை மன்னிக்கலாம் என்று கூறிவிட்டால் உடனே தண்டனை நிறுத்தப்படும்” என்று கூறினார்.
இப்போதுள்ள சூழலில், கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டு, நிமிஷாவுக்கு மன்னிப்பு வழங்குவதுதான் ஒரே வழி என்றும் அவர் முன்பு கூறியிருந்தார்.
நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?
நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி முன்பு பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த வழக்கு குறித்த முழு விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த 35 வயதான நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு கணவருடன் ஏமன் சென்றார்.
இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். செவிலியர் பணியில் குறைந்த ஊதியமே கிடைத்தது என்பதால் நிமிஷாவின் குடும்பம் அங்கு வசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே 2014ஆம் ஆண்டு, தனது மகளுடன் கேரளா திரும்பினார் டோமி தாமஸ். நிமிஷா தொடர்ந்து ஏமனில் பணிபுரிந்தார்.
“மீண்டும் தனது குடும்பத்தை ஏமனுக்கு அழைத்து வர, நிதி நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதால், அங்கு சொந்தமாக ஒரு சிறிய மருத்துவமனையைத் தொடங்க விரும்பினார் நிமிஷா. ஆனால், ஏமன் நாட்டுச் சட்டப்படி மருத்துவமனை தொடங்க உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கட்டாயம் பங்குதாரராக இருக்க வேண்டும்.
எனவே 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். இந்த மருத்துவமனைக்காக, நிமிஷா தனது நண்பர்கள், உறவினர்களிடம் 50 லட்சம் வரை கடன் வாங்கினார்” என்று பிரேமா குமாரி தெரிவித்தார்.
அதன் பிறகு கணவரையும் மகளையும் ஏமன் அழைத்து வருவதற்கான வேலைகளை அவர் தொடங்கிய போதுதான் அங்கு உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. அதனால், அவர்களால் ஏமன் செல்ல முடியவில்லை. 2015இல் ஏமனில் வசித்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை ‘ஆபரேஷன் ரஹாத்’ என்ற பெயரில் இந்திய அரசு மீட்டது. அப்போது ஏமனில் இருந்து வெளியேறாமல், அங்கேயே தங்க முடிவு செய்த சில இந்தியர்களில் நிமிஷாவும் ஒருவர்.
மருத்துவமனை தொடங்கப்பட்டு, அது சிறப்பாகச் செயல்படத் தொடங்கியதும் நிமிஷாவுக்கும் உள்ளூர் பங்குதாரர் மஹ்திக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்தன என்றும், இது குறித்துப் பல புகார்களை தொலைபேசியில் பேசும்போது நிமிஷா தெரிவித்தார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
கடந்த வருடம், நிமிஷாவின் தாயாரை ஏமன் அனுப்ப அனுமதி கோரி, ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மஹ்தி, உடல்ரீதியாக நிமிஷாவை கொடுமைப்படுத்தியதாவும், மருத்துவமனை வருமானம் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல சந்தர்ப்பங்களில், “மஹ்தி, துப்பாக்கியை வைத்து நிமிஷாவை அச்சுறுத்தியதாகவும்” மற்றும் “நிமிஷா நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுக்க அவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டதாகவும்” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிமிஷா ஏமன் காவல்துறையிடம் புகார் அளித்தபோது, “மஹ்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நிமிஷாவை ஆறு நாட்கள் சிறையில் அடைத்து வைத்ததாகவும்” கூறப்பட்டுள்ளது.
“தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்க, அவருக்கு மயக்க மருந்து செலுத்த நிமிஷா முடிவு செய்தார். ஆனால் தவறுதலாக மயக்க மருந்தின் அளவு கூடியதால், மஹ்தி உயிரிழந்தார். இந்த வழக்கில் நிமிஷாவும் பாதிக்கப்பட்டவர்தான். அவரை குற்றவாளியாகக் கருத முடியாது” என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன்.
கடந்த 2018இல், கேரளாவின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையத்தில் (NRI Commission) நிமிஷா சார்பில் ஆஜரானவர் வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன்.
“இந்த வழக்கின் தொடக்கத்தில் நிமிஷாவுக்கு ஏமனில் சட்ட உதவிகள் முறையாகக் கிடைக்கவில்லை. இதனால் அவர் தரப்பு நியாயத்தைக் கூற முடியவில்லை. மொழி தெரியாமல், அவர்கள் காட்டிய ஆவணங்களில் எல்லாம் அப்போது அவர் கையெழுத்திட்டுவிட்டார்” என்று கூறுகிறார் பாலச்சந்திரன்.
தலோல் அப்டோ மஹ்தி கொலை வழக்கில், 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிமிஷா சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நிமிஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை ஏமனின் உச்சநீதிமன்றம் நவம்பர் 2023இல் தள்ளுபடி செய்து, மரண தண்டனையை உறுதி செய்தது.
நவம்பர் 2023இல் உறுதி செய்யப்பட்ட தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் மெஹ்தி அல் மஷாத் (ஹூதி பிரிவு) கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தார்.
ஏமனில் ஷரியத் சட்டம் அமலில் உள்ளதால், மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், நிமிஷாவால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு