0
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரான நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை இரத்து செய்யஇணக்கம் காணப்பட்டுள்ளதாக காந்தபுரம் ஏ.பி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் அறிவித்துள்ளது.
இருப்பினும், ஏமனில் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் வேண்டுகோளின் பேரில், ஷேக் ஹபீப் உமர் பின் ஹஃபீத் நியமித்த ஏமன் அறிஞர்கள் குழு, வடக்கு ஏமனின் ஆட்சியாளர்கள் மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள் கலந்துகொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
உயிரிழந்த தலாலின் குடும்பத்தினருடன் மேலும் கலந்துரையாடிய பின்னர் ஏனைய விடயங்கள் முடிவு செய்யப்படும் என்றும் காந்தபுரத்தின் அலுவலகம் அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி : ஏமனில் நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள கேரளா பெண்!
முன்னதாக, காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் தலையீட்டை அடுத்து, கடந்த ஜூலை 16ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை இரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக காந்தபுரம் ஏ.பி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் அறிவித்துள்ளது.
கேரளா பாலக்காடு, கொல்லங்கோடு, தெக்கிஞ்சிராவைச் சேர்ந்த நிமிஷா பிரியா, தற்போது ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.