பட மூலாதாரம், Handout
-
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
-
தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த குற்றத்திற்காக, மரண தண்டனையை எதிர்நோக்கி ஏமனின் சனா நகரின் மத்திய சிறையில் பல வருடங்களாக அடைக்கப்பட்டுள்ளார் கேரள செவிலியர் நிமிஷா பிரியா.
ஏமன் நாட்டில் இஸ்லாம் மதத்தின் ஷரியா சட்டம் அமலில் உள்ள நிலையில், மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்படலாம் என்ற நம்பிக்கையில் நிமிஷாவும் அவரது குடும்பத்தினரும் இருந்தனர்.
ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜூலை 16 மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதாக நிமிஷாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நிமிஷா பிரியாவின் குடும்பத்தின் சார்பாக, ஏமனில் இந்த வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம் பிபிசி தமிழிடம் இதைக் கூறினார். ஆனால், இதை பிபிசியால் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியுடன் இந்தியாவுக்கு நேரடியாக தூதரக உறவுகள் இல்லை என்பதால், இந்திய தூதரகமும் இந்தச் செய்தியை இதுவரை உறுதி செய்யவில்லை.
இந்த வழக்கின் தொடக்கம் முதல் சமீபத்திய அறிவிப்பு வரை, என்னென்ன நடந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
2008 – கேரளாவின் சேர்ந்த நிமிஷா பிரியா என்ற செவிலியர் தனது 19வது வயதில் ஏமன் நாட்டுக்குச் சென்றார். குடும்பத்தின் வறுமையைப் போக்க வேண்டும் என்பதற்காக அவர் வீட்டைவிட்டு வெளியேறினார் என நிமிஷாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
2011 – ஏமனில் சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த நிமிஷா, 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். பிறகு கணவருடன் ஏமன் செல்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
2012 – டோமி தாமஸ்-நிமிஷா தம்பதிக்கு ஒரு மகள் பிறக்கிறார். ஆனால், அதன் பிறகு ஏமனில் வாழ்க்கை நடத்த அவர்கள் சிரமப்படுகின்றனர்.
2014 – செவிலியர் பணியில் குறைந்த ஊதியமே கிடைக்கும் என்பதால் நிமிஷாவின் குடும்பம் அங்கு வசிப்பதில் மேலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே 2014ஆம் ஆண்டு, தனது மகளுடன் கேரளா திரும்புகிறார் டோமி தாமஸ். நிமிஷா தொடர்ந்து ஏமனில் பணிபுரிகிறார்.
மீண்டும் தனது குடும்பத்தை ஏமனுக்கு அழைத்து வர, நிதி நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதால், அங்கு சொந்தமாக ஒரு சிறு மருத்துவமனை தொடங்க விரும்புகிறார் நிமிஷா.
ஆனால், ஏமன் நாட்டுச் சட்டப்படி மருத்துவமனை தொடங்க உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கட்டாயம் பங்குதாரராக இருக்க வேண்டும். இந்த இடத்தில்தான் நிமிஷா வாழ்க்கை திசை மாறக் காரணமான மஹ்தி என்பவர் கதைக்குள் வருகிறார்.
மஹ்தி ஏமனில் ஜவுளிக்கடை நடத்தி வந்தவர். அவரது மனைவி, நிமிஷா பணி செய்த மருத்துவமனையில்தான் குழந்தை பெற்றார்.
2015 ஜனவரி – தன் மகளின் ஞானஸ்தானத்திற்காக நிமிஷா இந்தியா வந்தபோது மஹ்தியும் விடுமுறையில் உடன் வருகிறார்.
பின்னர் ஒரு மாதம் கழித்து ஏமன் திரும்பிய நிமிஷா, தலால் அப்தோ மஹ்தியுடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்குகிறார்.
இந்த மருத்துவமனைக்காக, நிமிஷா தனது நண்பர்கள், உறவினர்களிடம் 50 லட்சம் வரை கடன் வாங்கினார் என நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி தெரிவித்தார்.
அதே வருடம், கணவரையும் மகளையும் ஏமன் அழைத்து வருவதற்கான வேலைகளை நிமிஷா தொடங்கிய போதுதான் அங்கு உள்நாட்டுப் போர் வெடிக்கிறது. அதனால், டோமி தாமஸ் மற்றும் நிமிஷாவின் மகளால் ஏமன் செல்ல முடியவில்லை.
பட மூலாதாரம், Handout
2015 இல் ஏமனில் வசித்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை ‘ஆபரேஷன் ரஹாத்’ என்ற பெயரில் மீட்டது இந்திய அரசாங்கம். அப்போது ஏமனில் இருந்து வெளியேறாமல், அங்கேயே தங்க முடிவு செய்த சில இந்தியர்களில் நிமிஷாவும் ஒருவர்.
2016 – மருத்துவமனை தொடங்கப்பட்டு, அது சிறப்பாக செயல்படத் தொடங்கியதும் நிமிஷாவுக்கும் உள்ளூர் பங்குதாரர் மஹ்திக்கும் இடையேயான முரண்பாடுகள் அதிகரித்தன என்றும், இது குறித்து பல புகார்களை தொலைபேசியில் பேசும்போது நிமிஷா தெரிவித்தார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
2017 – ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்படுகிறது.
மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மாதம் கழித்தே சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்படுகிறார்.
மஹ்திக்கு ‘அதிகப்படியான மயக்க மருந்து’ கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் செய்தியை தொலைக்காட்சி மூலம் தெரிந்துகொள்கிறார் டோமி தாமஸ்.
அதே ஆண்டு இந்தியர்கள் ஏமனுக்கு செல்ல இந்திய அரசு தடை விதித்தது. கட்டாயம் செல்ல வேண்டும் என்றால் அரசின் சிறப்பு அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதி நடைமுறைக்கு வருகிறது.
2018- நிமிஷாவின் வழக்கு ஊடக வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, கேரளாவின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையத்தில் (NRI Commission) நிமிஷா சார்பில் வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன் ஆஜராகி வாதாடி, நிமிஷாவின் நிலை குறித்து எடுத்துரைக்கிறார்.
“இந்த வழக்கின் தொடக்கத்தில் நிமிஷாவுக்கு ஏமனில் சட்ட உதவிகள் முறையாக கிடைக்கவில்லை. இதனால் அவர் தரப்பு நியாயத்தைக் கூற முடியவில்லை. மொழி தெரியாமல், அவர்கள் காட்டிய ஆவணங்களில் எல்லாம் அப்போது அவர் கையெழுத்திட்டுவிட்டார்” என்று கூறுகிறார் பாலச்சந்திரன்.
அவருக்கு உதவுவதற்காக இந்தியாவில் இருந்து முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
2020 – மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
ஆனால், 2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது.
பட மூலாதாரம், Handout
2023 – சனாவில் உள்ள நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நிமிஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை ஏமனின் உச்சநீதிமன்றம் நவம்பர் 2023இல் தள்ளுபடி செய்து, மரண தண்டனையை உறுதி செய்தது.
ஆனால், ‘ப்ளட் மணி’ எனப்படும் பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னிப்பு அளித்தால் மரண தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்ற வாய்ப்பு தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
அதேவருடம், நிமிஷாவின் தாயாரை ஏமன் அனுப்ப அனுமதி கோரி, ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்கிறது. அந்த மனுவில் “மஹ்தி, உடல் ரீதியாக நிமிஷாவை கொடுமைப்படுத்தியதாவும், மருத்துவமனை வருமானம் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024- ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ குழு நிமிஷாவை மீட்பதற்கு தேவையான நிதியை நன்கொடை மூலம் திரட்டி வந்தது. இந்தக் குழுவின் உதவியால், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ஏப்ரல் மாதம் ஏமன் சென்றார்.
அதேவருடம், பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்வதற்கான செலவுகள் 40,000 அமெரிக்க டாலர்கள் (Pre-negotiation expense- இந்திய மதிப்பில் 34 லட்சம்) இரு தவணைகளாக, இந்திய வெளியுறவுத் துறையால் நியமிக்கப்பட்ட ஏமன் நாட்டின் வழக்கறிஞரின் கணக்கில் செலுத்தப்பட்டது.
பட மூலாதாரம், Handout
“ஆனால் இரண்டாம் தவணை பணம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை. இதனால் மஹ்தியின் குடும்பத்தினர் விரக்தி அடைந்தனர்” என்கிறார் நிமிஷா பிரியாவின் குடும்பத்தின் சார்பாக, ஏமனில் இந்த வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம்.
2025 ஜனவரி – 2023இல் உறுதி செய்யப்பட்ட தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் மெஹ்தி அல் மஷாத் (ஹூதி பிரிவு) ஒப்புதல் அளித்தார். மீண்டும், தலால் அப்தோ மஹதி குடும்பத்துடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் முடக்கிவிடப்படுகின்றன.
அந்த சமயத்தில் இந்திய அரசின் சார்பாக ஹூதி குழுவுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே நிமிஷாவின் தண்டனை தள்ளிவைக்கப்பட்டது என்று சாமுவேல் ஜெரோம் கூறுகிறார்.
2025 ஜூலை 8 – “ஜூலை 16, நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற செய்தி எனக்கு திங்கட்கிழமை (ஜூலை 8) கிடைத்தது. சனா நகரின் சிறைச்சாலைத் தலைவர் தொலைபேசி மூலம் அதைக் கூறினார்.
உடனடியாக சௌதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்தேன். அவர்கள் சனாவில் உள்ள தங்கள் அதிகாரிகள் மூலம் இதை உறுதி செய்தனர்” என்று சாமுவேல் ஜெரோம் தொலைபேசி மூலம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். (இதனை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.)
ஜூலை 16க்கு சில நாட்களே உள்ள நிலையில் நிமிஷாவைக் காப்பற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜெரோம் கூறியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு