படக்குறிப்பு, ஆமதாபாத் விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
ஆமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து பற்றிய முதல் கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்துகள் விசாரணை ஆணையம் (ஏஏஐபி) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் நிலையில் பல ஊடகங்களும் இதைப்பற்றி செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்கு சில வினாடிகளுக்கு முன்பு இரு என்ஜின்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் கட் ஆஃப் நிலைக்கு சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் நின்றது. இந்த சூழ்நிலை மிக மிக அரிதானது என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பல ஊடகங்களும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சு மற்றும் விமானிகளுக்கு இடையேயான உரையாடல் மீதே கவனம் செலுத்தியுள்ளன. இவை முதல்கட்ட விசாரணையின் முக்கிய அங்கமாக உள்ளன.
பிரிட்டன் ஊடக நிறுவனமான டெலகிராப் தனது செய்தியில் விமானிகளின் உரையாடலை மேற்கோள் காட்டிய நிலையில் நியூயார்க் டைம்ஸ், கார்டியன், ஃபினான்சியல் டைம்ஸ் விமான செயல்முறையில் உள்ள பிழைகள், பயிற்சி சிக்கல்கள் மற்றும் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளன.
சுவிட்சுகளை தற்செயலாக நிறுத்த முடியாது
அமெரிக்க தொலைக்காட்சி ஊடகமான சிஎன்என் விமான விபத்துக்குச் சற்று முன்பு என்ஜினுக்கு எரிபொருள் கிடைப்பது நின்றுவிட்டது எனத் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தின் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றி பேசுகையில் பாதுகாப்பு நிபுணர் டேவிச் சுசி, எரிபொருள் சுவிட்சுகள் விமானியின் தலையீட்டின் பேரிலேயே ஆன் அல்லது ஆஃப் செய்யும் வழியில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் எனத் தெரிவித்துள்ளது. ‘அனைத்து எரிபொருள் சுவிட்சுகளும் தற்செயலாக நிறுத்தப்படும் சூழல் மிக அரிது’ என அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த சுவிட்சுகள் கடந்த வருடங்களில் மேம்பட்டுள்ளதாகவும் அவற்றை தற்செயலாக ஆன் அல்லது ஆஃப் செய்துவிட முடியாது” என்றும் சுசி தெரிவித்துள்ளார்.
டிஜிசிஏவின் படி, கேப்டன் சுமித் சபர்வாலுக்கு 8200 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ள நிலையில் துணை விமானி கிளைவ் குந்தருக்கு 1100 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது.
பிரிட்டன் நாளிதழான டெலகிராப் முதல்கட்ட விசாரணை பற்றிய செய்திக்கு , “இந்த கோரமான விபத்துக்கு சற்று முன்பு ஏர் இந்திய விமானி எரிபொருள் விநியோகம் ஏன் நிறுத்தப்பட்டது எனக் கேட்டிருந்தார்” என தலைப்பு வைத்துள்ளது.
“கருப்பு பெட்டி தரவுகள் பதிவிறக்கம் செய்து, ஆய்வு செய்து பகிர்வதில் உள்ள மெதுவான நடைமுறையால் அமெரிக்க அதிகாரிகள் எரிச்சலடைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என டெலகிராப் தனது செய்தியில் எழுதியுள்ளது.
இந்தச் செய்தியில் விமான பாதுகாப்பு ஆய்வாளர் டேவிட் லீயின் கருத்தும் இடம்பெற்றுள்ளது.
“இந்த விசாரணை, விமானி யாரெனும் இதை வேண்டுமென்றே செய்துள்ளனரா அல்லது சுவிட்சு தவறுதலாக பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆராயும். மேலும் சுவிட்சில் ஏதேனும் எலக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரானிக் கோளாறு இருந்ததா என்பதும் ஆராயப்படும்” என டேவில் லீ தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் இதுபோன்ற சில சுவிட்சுகள் லாக்கிங் பிரச்னைகளை சந்தித்ததாகக் கூறும் அவர் இதுவும் விசாரணையின் ஒரு அங்கமாக இருக்கும் எனத் தெரிவிக்கிறார்.
‘எரிபொருள் சுவிட்சை விமானி ஆஃப் செய்யமாட்டார்”
ராய்டர்ஸ் செய்தி முகமை அமெரிக்க விமான பாதுகாப்பு நிபுணரான ஜான் காக்ஸிடம் பேசியுள்ளது. அவரின் கூற்றுப்படி, எரிபொருள் கட் ஆப் சுவிட்சுகளுக்கும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள எரிபொருள் வால்வுகளுக்கும் தனித்தனி மின்சார அமைப்புகள் மற்றும் வயரிங் உள்ளன.
ராய்டர்ஸிடம் பேசிய மற்றுமொரு அமெரிக்க விமான பாதுகாப்பு நிபுணரான ஜான் நேன்ஸ், “எந்த விமானியும் பயணத்தின்போது எரிபொருள் சுவிட்சை ஆப் செய்ய மாட்டார்” எனத் தெரிவித்தார்.
கத்தார் ஊடகமான அல் ஜசீரா முதல்கட்ட விசாரணை பற்றி வெளியிட்ட செய்தியில் “விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின்களின் எரிபொருள் கட்டுப்பாடு சுவிட்சுகள் விபத்துக்குச் சற்று முன்பு ‘ரன்’ என்கிற நிலையிலிருந்து ‘கட் ஆஃப்’ என்கிற நிலைக்குச் சென்றது” எனத் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையில் ‘ஒரு பிழையையும்’ அல் ஜசீரா சுட்டிக்காட்டியுள்ளது.
“முதல்கட்ட அறிக்கை அந்த விமானத்தில் சுவிட்சு எப்படி ‘கட் ஆஃப்’ நிலைக்குச் சென்றது என்பதை விளக்கவில்லை” என அல் ஜசீரா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறை தவறுகள், காக்பிட் உரையாடல்கள் மற்றும் பரந்த பாதுகாப்பு கேள்விகள் உள்ளிட்ட விசாரணையின் முடிவுகள் பற்றிய ஆழமான அலசல் ஒன்றை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
அதற்கு ‘ஏர் இந்தியா விமானம் மோதுவதற்கு முன்பாக எரிபொருள் துண்டிக்கப்பட்டுள்ளது’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
எனினும் முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவர வேண்டியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஏஐபி அறிக்கையின்படி, காக் பிட் உரையாடல் பதிவுகளில் ஒரு விமானி, “ஏன் எரிபொருளை நிறுத்தினீர்கள்” எனக் கேட்டதற்கு மற்ற விமானி “நான் செய்யவில்லை” எனப் பதிலளித்திருந்தார்.
“எரிபொருள் சுவிட்சுகளில் பாதுகாப்பு லாக்குகள் உள்ளன, இது தற்செயலாக ஆஃப் செய்யப்படுவதை சாத்தியமற்றதாக்குகிறது. எனவே தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ நிகழ்ந்த மனித தலையீடு என்பது வெளிப்படை. தொழில்நுட்ப கோளாறு, விமானத்தில் குளறுபடி அல்லது எரிபொருள் மாசுபாடு இந்த விசாரணையில் நிராகரிக்கப்பட்டுள்ளன” என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
“எரிபொருள் சுவிட்சுகள் தொடர்பாக எஃப்ஏஏ 2018-ல் எச்சரித்திருந்தது, ஆனால் அதை ஆபத்தான சூழ்நிலையாக கருதவில்லை. விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இறுதி முடிவுகள் மீதமிருக்கின்றன” என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது என்ன?
கடந்த மாதம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தின் முதல்கட்ட அறிக்கை சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை இந்தியாவின் விமான விபத்துகள் விசாரணை ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
15 பக்க அறிக்கையின்படி, விமானம் கிளம்பிய உடனே அதன் இரு எரிபொருள் கட்டுப்பாடு சுவிட்சுகளும் கட் ஆப் நிலைக்குச் சென்றன.
காக்பிட் ஒலிப்பதிவில், ஒரு விமானி ‘ஏன் எரிபொருளை துண்டித்தீர்கள்?’ என மற்றுமொரு விமானியிடம் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த மற்ற விமானி தான் அவ்வாறு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதில் எந்தக் குரல் எந்த விமானியினுடையது என்பது அறிக்கையில் தெளிவாக இல்லை.
படக்குறிப்பு, விமான புறப்பட்ட 40 வினாடிகளுக்குள் விபத்துக்குள்ளானது.
பயணத்தின்போது துணை விமானி, விமானத்தை இயக்கிய நிலையில் கேப்டன் கண்காணித்து வந்தார்.
ஏர் இந்திய விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக விமானிகளும் பணியாளர்களும் விமானத்தை இயக்க தகுதியாக உள்ளார்களா என்பது பரிசோதிக்கப்பட்டது.
அந்த அறிக்கையின்படி, இரு விமானிகளும் மும்பையைச் சேர்ந்தவர்கள், பயணத்திற்கு ஒரு நாளுக்கு முன்பே ஆமதாபாத் வந்தடைந்தனர். அவர்களுக்கு போதுமான ஓய்வு கிடைத்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை அமைப்புகளுடன் முழுவதும் ஒத்துழைப்பதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில், விமானத்திலும் வெளியிலும் 260 பேர் உயிரிழந்தனர். பிரிட்டன் குடிமகனான விஷ்வாஸ் குமார் என்கிற பயணி மட்டும் உயிர் பிழைத்தார்.