8
ஆர்மீனியா (Armenia) நாட்டின் தலைநகரமான யெரெவனி (Yerevan) நடைபெறவுள்ள ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் உச்சிமாநாட்டில், கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கலந்துகொள்ளவுள்ளார். இந்த பங்கேற்பு, அந்த அமைப்பின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கும் முதல் ஐரோப்பியரல்லாத நாடாக கனடா உருவாகவுள்ளது. இதன்மூலம், ஐரோப்பிய நாடுகளுடன் கனடா தனது அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதை வெளிப்படுத்துகிறது.
இந்த மாநாட்டில் 48க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில், அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட சவால்கள் மற்றும் வர்த்தக இழப்புகளைத் தொடர்ந்து, புதிய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் இராஜதந்திர கூட்டணிகளை உருவாக்கும் நோக்கத்துடன் தான் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறேன் என மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த நடவடிக்கை, அமெரிக்கா மீது மட்டுமே சார்ந்திருந்த வர்த்தகத் தொடர்புகளை மாற்றி, ஐரோப்பிய சந்தைகளைக் குறிவைத்து கனடா புதிய திசையில் நகர்கிறது என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், ஒட்டோவா நிர்வாகம், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக சேர கனடா முயற்சிக்கலாம் என்ற பரிந்துரைகளை கனேடிய இராஜதந்திரிகள் முற்றிலும் நிராகரித்துள்ளனர். எனினும், இந்த உச்சிமாநாட்டில் கனடாவின் பங்கேற்பு, எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் உறவுகளை விரிவுபடுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.