8
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஒன்றுதிரண்டு வருகின்றனர்.
சமகாலத்தில் சர்வதேச ரீதியாகத் தீவிரமடைந்துள்ள ஆயுத மோதல்கள், பிராந்திய அரசியல் பதற்றங்கள், செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட மிக முக்கிய விவகாரங்கள் தொடர்பில் இம்முறை தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, ஈரானைச் சூழவுள்ள நெருக்கடிகள், காஸா மற்றும் உக்ரேன் ஆகிய பிராந்தியங்களில் தொடரும் போர்கள் தொடர்பிலான விவாதங்கள் இப்பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பிரதான இடத்தைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, ஈரான் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான விவகாரங்களில் இராஜதந்திர ரீதியான புதிய முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், சர்வதேச வல்லரசு நாடுகளுக்கு இடையில் நிலவும் விரிசல்களைக் குறைத்து, ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் இந்தியா போன்ற நாடுகள் பாலமாகச் செயற்பட முடியுமா என்பது குறித்தும் இம்முறை மாநாட்டில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
இவற்றுடன், சமகாலத்தில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உலக நாடுகள் எவ்வாறு பாதுகாப்பான முறையில் கையாள்வது என்பது தொடர்பிலும் கூட்டத்தொடரில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. மறுபுறம், உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் தீவிர வெப்ப அலை மற்றும் பாரதூரமான வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனர்த்தங்களை அடுத்து, பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்வது தொடர்பில் உலகத் தலைவர்கள் விசேட அமர்வொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர்.
எவ்வாறாயினும், தீவிரமடைந்துள்ள அரசியல் முரண்பாடுகளைக் கடந்து, 193 உறுப்பு நாடுகளும் இணைந்து இச்சிக்கல்களுக்கு அர்த்தமுள்ள தீர்வுகளை நோக்கிச் செயற்பட முடியுமா என்பதே தற்போதைய பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.