13
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி, சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அணித் தலைவராகத் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, அணியின் வழிகாட்டியாக (Team Mentor) புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
அணியின் பயணத்தின் ஆரம்பம் முதல் தோனி முக்கிய பங்காற்றி வந்துள்ளதாகவும், எண்ணற்ற வெற்றிகள், சவாலான காலகட்டங்கள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளின் மையமாக அவர் திகழ்ந்துள்ளதாகவும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அத்துடன், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற தோனி, தற்போது அடுத்த தலைமுறை வீரர்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தோனி எப்போதும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் அடையாளத்தின் ஒரு பகுதியாக இருப்பார் என்றும், சென்னை நகரம் அவருக்கு எப்போதும் சொந்த இல்லமாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இந்த அறிவிப்பு, தோனியின் எதிர்காலப் பங்களிப்பு தொடர்பாக ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
2008ஆம் ஆண்டு ஆரம்பமான ஐபிஎல் தொடரின் முதல் பருவத்திலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக விளங்கிய தோனி, தனது தலைமையில் அந்த அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கிண்ணத்தை வென்று கொடுத்துள்ளார். அவரது தலைமைத்துவம், வியூகங்கள் மற்றும் சிறந்த ஆட்டத்திறன் ஆகியவை சென்னை அணியின் வெற்றிப் பயணத்தில் முக்கிய பங்காற்றியுள்ளன. தோனியின் கிரிக்கெட் பயணத்தில் புதிய அத்தியாயமாகவும் அமைந்துள்ளது