0
பல உலக நாடுகள் மீது அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் புதிய வரிகள், இம்மாதம் 9ஆம் திகதியளவில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தடுப்பதற்காக பல உலக நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்படாத நாடுகளுக்கு வரிகள் குறித்துக் கடிதம் அனுப்பப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் Fox தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரி தவிர்ப்பு நீட்டிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வரி தவிர்ப்பை நீட்டிக்க டிரம்ப்பும் மூத்த அதிகாரிகளும் கடந்த வாரம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு நாட்டுடனும் ஒப்பந்தம் செய்துகொள்வது சவால்மிக்கது என்று டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து மட்டுமே தப்பியது
அமெரிக்காவின் வரி தவிர்ப்பைத் தற்காலிகமாக நீட்டிக்க உலக நாடுகள் பல விரும்புகின்றன.
எனினும், இதுவரை இங்கிலாந்து மட்டுமே அமெரிக்காவுடன் வரிகள் தொடர்பாக ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
எல்லா வரிகளையும் நீக்க வேண்டி ஜப்பானிய அதிகாரிகள் பலமுறை அமெரிக்கா சென்றனர். ஆனால், அவை கைகூடவில்லை.
அதேவேளை, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை எதிர்வரும் 9ஆம் திகதிக்குள் ஒப்பந்தம் வந்துவிடும் என்று நம்புகின்றன.
தொடர்புடைய செய்தி : இங்கிலாந்து-அமெரிக்க வரி ஒப்பந்தம்; கையெழுத்திட்டார் டிரம்ப்!