3
சுசீலா வேலையிலிருந்து ஓய்வுபெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான நாட்களை என்னவோ ஏதோ செய்து கழித்துவிட்டாள், ஆனாலும் உண்மையாகப் பார்த்தால், அவள் எப்போதும் ஒருவிதமான சலிப்புடன் தான் தனது நேரங்களைக் கழித்துக் கொண்டிருக்கின்றாள். அவளது பணப்புழக்கமும் இப்போது நன்றாக இல்லை.
கடந்த பல ஆண்டுகளாக நல்லதொரு பதவியில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தவள் சுசீலா. அவளது பணியாளர் கூட்டத்தில் ஆண்கள் நிரம்பி இருந்ததால், அவர்களுடன் நெருக்கமான நட்பு அவளுக்கு இருக்கவில்லை. ஆனால் அனைவரும் சந்திக்கும் வேளைகளில் நலன் விசாரித்து, சிறு கதைகள் பேசி பின் திரும்பவும் விரைந்து இருக்கைகளுக்குச் சென்று, தமது பணிகளில் கவனம் செலுத்துவது அங்கே வழமையாக இருந்தது.
சுசீலாவின் கணவர் திடீரென இறந்த பிறகு, வேறு வழியின்றி தனது வாழ்க்கையை வேலையிலேயே கழித்துவிட்டாள் சுசீலா. கூடுதல் வேலைகளை எடுத்துச் செய்வது அவளுக்குப் பிடித்திருந்தது. வேலை முடிந்த பின்பு, வீடு திரும்பி, சிறிய இரவு உணவுடன் டெலிவிஷன் பார்த்துவிட்டு, அதிகாலை 5:30 மணிக்கு எழும்ப வேண்டும் என்பதால், எப்போதும் விரைவாகவே தூங்கச் சென்று விடுவாள் சுசீலா.
சுசீலாவின் 65 வது பிறந்த நாளன்று அவளது நிறுவனம் அவளுக்கு ஒரு பிரியாவிடை விழாவை ஏற்பாடு செய்திருந்தது. அவளுக்கு அதில் விருப்பமே இருக்கவில்லை. ஆனால் தனது எண்ணத்தை வெளிப்படையாகக் கூறுவதற்கு அவளுக்குத் தைரியம் வரவில்லை. இன்னும் பத்து வருடங்கள் வேலை செய்யவும் அவள் தயாராகத்தான் இருந்தாள். ஆனாலும் தனது நிறுவனத்தின் முடிவை அவள் மரியாதையுடன் ஏற்றுக் கொண்டாள். வாழ்த்து அட்டைகள், சாக்லேட் பெட்டிகள், நிறுவனம் பரிசளித்த உயர் ரகக் கைக்கடிகாரம் என எல்லாவற்றையும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு, மனதளவில் மிகுந்த வெறுமையுடன் கலங்கிக்கொண்டே வீடு திரும்பினாள். அந்த வெறுமை நிறுவனத்தின் மீதுள்ள பாச உணர்வால் அல்ல, இனிமேல் சந்திக்கப்போகும் தனிமையால் என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும்.
இப்போது வீட்டில் இருந்தபடி, தினம் தினம் பார்த்த முகங்களைச் சந்திக்காமல், பேசுவதற்கு நெருங்கிய நண்பர்கள் இல்லாமல், வெறுமையுடன், உயிரோடு மட்டும் தான் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. வழமையாகப் பார்க்க விரும்பும் திரைப்படங்களைக்கூட அவளால் இப்போது பார்க்க முடியவில்லை. தன்னை வற்புறுத்திப் பார்க்கச் சொன்னாலும், அந்த எண்ணம் கூட அவளது தனிமையை இன்னும் அதிகமாக உணரச் செய்தது. அவளுக்குப் பொதுவாகவே புத்தகங்கள் வாசிப்பதும் பெரிதாகப் பிடிப்பதில்லை.
வெற்றுப்பார்வையுடன் கதிரையில் இருந்த சுசீலாவின் கண்கள் மேசை மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு கசங்காது சுத்தமாக இருந்த உள்ளூர் நாளிதழைப் பார்த்தன. வழக்கம்போல் வேண்டா வெறுப்பாக அதை எடுத்துப் படித்தாள். செய்திகள், விளம்பரங்கள் அனைத்தையும் தவிர்த்து, “வேலை வாய்ப்புகள்”என்ற பகுதிக்குள் சென்ற போது, தனது செயலை நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.
“எனக்கு 66 வயசு. யார் என்னை இப்ப வேலைக்கு எடுக்கப் போறாங்கள்?” என்ற எண்ணத்துடன் பார்த்தவளுக்கு அதிலிருந்த ஓர் வேலை விளம்பரம் அவளது கவனத்தை ஈர்த்தது.
“சிட்னி பல்கலைக்கழக பழைய நூலகக் கட்டடத்திற்கு பகுதி நேர தூய்மைப் பணியாளர் தேவை. புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை ஏலத்திற்கு தயார் செய்யவேண்டும். தன்னிச்சையாக, குறைந்த கண்காணிப்புடன் வேலை செய்யக்கூடிய அனுபவமுள்ள நபர் தேவை. நேர்காணல் 22ம் திகதி யூலை செவ்வாய்க்கிழமை காலை 10 மணி.’
அதை வாசித்தவுடன் சுசீலா நிமிர்ந்து அமர்ந்தாள்.
“வயசைப் பற்றி எதுவும் சொல்லேல்லைத்தானே” என்று சுடச்சுட எண்ணினாள்.
“அனுபவம் வேணும் என்று சொல்லியிருக்கினம், அனுபவம் இருக்க வேணும் என்றால் வயசும் இருக்க வேணும்தானே”
எதுவும் யோசிக்காமல் அந்த வேலைக்கான விருப்பத்தை இமெயிலில் அனுப்பிவிட்டாள். இதைப்பற்றி யாருடனாவது ஆலோசனை கேட்கலாம் என்று நினைத்தால் அவளது மனதிற்கு ஒருவரும் பொருத்தமானவராகத் தெரியவில்லை.
அதனால், செவ்வாய்க்கிழமை நேர்காணலுக்குப் போவோம் என்று எண்ணிக்கொண்டு அமைதியானாள். அவளுக்கு தனிமை நன்றாகப் பழக்கப்பட்டு விட்டது. அவளது கணவன் கூட யாருடனும் பெரிதாகப் பேசக்கூடியவனல்ல.
நாட்கள் செல்லச் செல்ல, வேலை பற்றிய சிந்தனை மேலும் மேலும் உற்சாகத்தை உருவாக்கியது.
மீண்டும் காலையில் உற்சாகத்துடன் எழுவதற்கான ஒரு காரணம் இருக்கும், இரவு உணவை ஏற்பாடு செய்வதற்கான ஒரு காரணம் இருக்கும், சீரான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதற்கும், தன்னை அழகுபடுத்துவதற்கும் தேவைகள் இருக்கும், ஒவ்வொரு நாளும் அடுத்த நாளை எதிர்நோக்கிய வண்ணம் இரவில் தூங்குவதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டாள்.
குறிப்பிட்ட நேரத்திற்குப் பத்து நிமிடங்கள் முன்பாகவே அந்த மண்டபத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள் சுசீலா. சுவரோடு அண்டியபடி இருக்கைகள் வரிசையாக இருந்தன. சில நிமிடங்கள் பிறருக்காகக் காத்திருந்துவிட்டு, யாரும் வராத பட்சத்தில் நடுப் பகுதியில் உள்ள கதிரையில் வந்து அமர்ந்து கொண்டு, ஓர் பழைய பழுப்புநிறக் கைப்பையை தனது மடியின் மீது வைத்துக்கொண்டாள்.
குறிப்பாக பத்துமணிக்கு, ஒரு முதியவர் போல் தெரிந்த, சுருண்ட சாம்பல் தலைமுடியுடன் ஒரு ஆண்மகன், அந்தப் பழைய நூலக அறையிலிருந்து வெளியே வந்தார். அவர் நேரடியாக சுசீலாவிடம் வந்து, “நீங்க தான் துப்பரவு வேலைக்காக வந்தீங்களா?” என்று சிரித்தபடி கேட்டார்.
“ஆமாம்” என்று மெதுவாகப் பதிலளித்தாள் சுசீலா.
“நான் ஜாக் ப்ரவுன், இங்கு நூலகராக வேலை பாக்கிறன். உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா? உங்கள் பணி, உங்கள் அனுபவம், ஏலத்திற்கு தயாராக்கிய அனுபவம்? இப்படி ஏதாவது?”
“அப்பிடி ஒரு அனுபவமும் என்னிடம் இல்லை, ஆனால் நான் நன்றாக சுத்தம் செய்யக்கூடியவள். நான் இதுவரை கணக்காளராகத்தான் வேலை பார்த்தேன். ஆனால்… நீங்கள் சொல்லித்தந்தால் நான் எதையும் சுலபமாகக் கற்றுக்கொள்வேன்.”
சுசீலா கூறியதைக் கேட்டு ஜாக் சிரித்தார். “நீங்கள் தனியாக வேலை செய்ய முடியுமா? வேறு யாரும் நேர்காணலுக்கு சமூகமளிக்கவில்லைப் போல தெரிகிறதே.”
சுசீலா மேலும் சந்தோசமாகச் சிரித்தாள். “மிகவும் சந்தோசமாகவே வேலை செய்வேன். எனக்குத் தனியாக வேலை செய்யும் பழக்கம் நிறைய இருக்கு.”
ஜாக் அவளை நூலகத்திற்குள் அழைத்துச் சென்றார். “உங்களுக்கு இந்த வேலை விருப்பமாக இருந்தால், சம்பளம் மற்றும் வேறு நிபந்தனைகள் பற்றிப் பேசலாம்.”
ஆக சுசீலாவிற்கு வேலை கிடைத்துவிட்டது
முதல் சில வாரங்கள் சோர்வுடன் இருந்தாலும், சுசீலாவுக்கு அது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. புத்தகங்கள் தூசி தட்டப்பட்டு, சரிபார்க்கப்பட்டு ஒழுங்கு வரிசையாக அடுக்கப்பட்டன. ஜாக் ப்ரவுனும் சுசீலாவும் எந்தவிதத் தொந்தரவும் இன்றி அமைதியாகத் தங்கள் வேலைகளைச் செய்தனர்.
அவ்வப்போது சின்னச் சின்ன விடயங்களைப் பேசிக் கொள்வார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அந்த நூலக அறைக்குள் அமைதியாக நடமாடிக் கொண்டிருந்தார்கள். நாட்கள் செல்லச் செல்ல, சிரித்துக்கொண்டே பேசும் நல்ல நண்பர்கள் ஆக மாறிவிட்டனர்.
ஒரு சத்தமில்லாத உலகம் அது. அதன் உள்ளே ஒரு சின்ன மேசை இரண்டு கதிரைகள். சுசீலா இருவருக்கும் தேனீரும் பிஸ்கெட்டும் பரிமாறுவாள். அந்த இடம் இருவருக்குமான ஒரு நிரந்தர இடம் இல்லை. ஆனாலும் ஓய்வு பெற்ற சில வாரங்களில் இப்படிப்பட்ட இனிய நினைவுகளுக்குள்ளே இருவரும் சேர்ந்திருக்கின்றார்கள். அதனால்தான் அவர்களால் அங்கே சந்தோசமா இருக்கமுடிகிறது. அவள் தேடி வந்த அமைதியுடன், தேனீர் பரிமாறி, மகிழ்ச்சியுடன் அவளால் இருக்கமுடிந்தது.
“ஜாக் ஒரு கேள்வி, இந்தக் கட்டடத்தை இடிக்கப் போறாங்களா? அப்போ இந்தப் புத்தகங்கள்”
ஜாக் சிரித்தார். “அது பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டது சுசீலா. இந்தப் புத்தகங்கள் புதிய நூலகத்திடம் ஒப்படைக்கப்படும். அவை பாதுகாப்பான கைகளில்தான் இருக்கும்.”
“அப்போ இங்கே இருக்கும் நினைவுகள்?”
“அவை மட்டும் தான் இடிக்க முடியாத கட்டிடம், சுசீலா. இங்கே நினைவுகள் மட்டுமல்ல, சில உறவுகளும் வாழ்கின்றன, நம்மைப் போல் அமைதியான உயிர்களும் வாழ்கின்றார்கள்.”
சுசீலா மீண்டும் அந்த நூலக அறைக்குள் கவனத்தைச் செலுத்தினாள். அந்தக் அறைக்குள்ளே ஒரு நிலைத்த வாழ்க்கை இருக்கிறது. ஆனால் அது முதியவர்களின் உலகமாகத் தோன்றவில்லை. அங்கு வந்து சென்றவர்களை மீண்டும் நினைவுகூரும் இடமாகத் தோன்றியது.
மௌனமாக இருந்த ஜாக், மெதுவாகத் தொடர்ந்தார், “நீங்கள் இந்த இடத்துக்கு வந்தது எனது அதிஷ்டம், சுசீலா. இந்த நூலகம் முடிவடையப் போகிறது, ஆனால், உங்களால் எனது நாட்கள் இன்னும் பல பக்கங்கள் சுழலப் போகிறது, இல்லையா.”
“நான் ஒரு சுத்தம் செய்யும் பெண்தான், ஜாக்” என்று சிறு சிரிப்புடன் சுசீலா கூறினாள்
“அதுதான் முக்கியமானது. நீங்கள் சுத்தம் செய்யிறீங்கள், வெளியில் மட்டும் இல்லை, உள்ளத்திலும். நீங்கள் வந்த நாளிலிருந்து இந்த இடமும் நானும் நன்றாகச் சுவாசிக்கத் தொடங்கியிருக்கிறோம் சுசீலா.”
சுசீலா, ஒரு காலத்தில் வாழ்க்கையில் மிகச் சிறிய மகிழ்ச்சியையே அனுபவித்தவள், இப்போது அவளுக்கு புதிய ஓர் உலகம் கிடைத்திருக்கிறது. அமைதியான வரவேற்பு, ஒரே பாணியில் சிந்திக்கின்ற மனம், பொருந்தமான வயசு, பக்கத்தில் ஒரு சின்ன மேசை, கையில் ஒரு coffee cup. இதைவிட அவளுக்கு என்ன வேண்டும்.
வாரங்கள் வேகமாக மாறின. சுசீலாவும் ஜாக்கும் நூலகத்தில் அதிக நேரத்தைச் செலவழிக்கத் தொடங்கினார்கள். உண்மையில், அவர்கள் இருவருக்கும், ஒருவரின் உதவியும் அக்கறையும் மற்றவருக்குத் தேவையாக இருந்தது.
ஜாக் காலை முதலில் வருவார். சுசீலா சிறிது நேரம் கழித்து வருவாள். வந்தவுடன், ஒரு கோப்பைக்குள் தேநீரும் பிஸ்கட்டும் எடுத்து வந்து அந்தச் சின்ன மேசையில் வைப்பாள். இருவருக்குமிடையில் வார்த்தைகள் அதிகமாக இருப்பதில்லை, ஆனால் அமைதி மிகுந்த உறவொன்று அங்கே வளர்ந்துகொண்டு வந்தது.
ஒருநாள் மாலை, வேலை முடிந்த பிறகு, ஜாக் சிரித்துக்கொண்டு கேட்டார்,
“சுசீலா, நீங்கள் சத்தமில்லாமல் என் வாழ்க்கையில் நுழைந்து விட்டீர்கள். இப்போ எனக்கு எல்லாமே சத்தமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கு.”
சுசிலா திரும்பிப் பார்த்தாள், “நீங்களும் நானும் பல நாட்களாகவே ஒரே இடத்தில் இருந்திருக்க வேண்டும், ஜாக், ஆனால் என்னசெய்வது இப்பதான் அதற்கான சந்தர்ப்பம் வந்தது..”
ஜாக் மெதுவாக அவளது தோளில் கை வைத்தார், பரிதாபத்துடன் அல்ல, ஒரு மென்மையான அன்புடன். அந்தப் பசுமையான தொடுதல் சுசீலாவின் மனதையும் தொட்டுவிட்டுச் சென்றது. திடீர் நட்பு ஆனால் தீவிரமான நட்பு. சில நேரம் அமைதியாக இருப்பதற்கும் அனுமதிக்கின்ற நட்பு.
அடுத்தடுத்த வாரங்களில், சுசீலா தனது பிழைப்பிற்காக வேலை செய்யும் எண்ணத்தில் அங்கு போவதில்லை. அவளுக்கு இப்போது வேலை ஒரு தேவையாகவும் நோக்கமாகவும் மாறிவிட்டது. வேலை இடத்தை மட்டும் சுத்தம் செய்வது அல்ல, ஒருவருக்கொருவர் உள்ளே ஒளிரும் தூசிகளை
அழிப்பதுவும் இருவரது வேலைகளில் ஒன்றாகிவிட்டது. ஒருவரது முகம் பளிச்சென்று காட்சியளிக்கவில்லை என்றால் உடனடியாக இருவரும் உணர்ந்து விடுவார்கள். காலம் தாழ்த்தாமல், ஏன்? எதற்காக? என்று அக்கறையுடன் விசாரித்து, அதைப்பற்றிப் பேசி அதற்கான தீர்வையும் கண்டுபிடித்துவிட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்தளவுக்கு ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் அவர்களது பார்வையில் அன்பையும் நம்பிக்கையும் மெளனமாக வளர்த்துக் கொண்டார்கள்.
இப்படியாகச் சென்ற நாட்கள் மாதங்களாகின. ஒரு நாள் மாலை
“சுசீலா, நாளை மறுநாள், நூலகம் மூடப்படும் என்று கூறுகிறார்கள். நாம் என்ன செய்வோம், சுசீலா?” , என்று ஜாக் சோகமாகக் கேட்டார்.
சுசீலா சிரித்தாள்.
“வேறு என்ன செய்யமுடியும்? அந்த நூலக நினைவுகளைக் காப்பாற்றுவோம். அதில் எமது சத்தங்களும், நினைவுகளும் வாழ்கின்றன. நாங்களும் இன்னும் உயிரோடு இருக்கிறோம். அது போதும் அல்லவா.”
ஜாக் தலை அசைத்தார். “நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா, சுசீலா?”
“எதுவென்றாலும் கேளுங்கள், ஜாக்.”
“நாளை நூலகத்தின் கடைசி நாளாக இருந்தாலும், நாளைக்குப் பின்பும், நீங்கள் என்கூட தேனீர் அருந்த வருவீங்களா சுசீலா?”
சுசீலா சிரித்தாள். கண்களில் வெண்மை இருந்தாலும், உள்ளத்தில் பசுமை மலர்ந்தது.
“உங்களுக்காக ஒரு கோப்பை தேனீரும், பிஸ்கட்டும் தயார் நிலையில் இருக்கும், ஜாக், நீங்கள் எப்போதும் என் வீட்டுக்கு வரலாம்.”
சுசீலாவின் மனதில் இப்போது வெறுமை இல்லை. தனக்காகவும் சிந்திக்கக்கூடிய ஒரு நல்ல நண்பன் கிடைத்திருக்கிறான். என்ன தேவை என்றாலும் அழைப்பெடுத்துப் பேசுவதற்கு பொருத்தமான ஒரு ஜீவனைக் கண்டு பிடித்துவிட்டேன் என்ற மன நிறைவோடு வீடு திரும்பினாள் சுசீலா.
– சௌந்தரி கணேசன்
நன்றி : sirukathaigal.com