• Mon. Sep 23rd, 2024

24×7 Live News

Apdin News

“ஒரே நாடு ஒரே தேர்தல் பாஜக அரசின் சதி” – கோவையில் தயாநிதி மாறன் எம்.பி. குற்றச்சாட்டு | One nation one election is a conspiracy of BJP government

Byadmin

Sep 23, 2024


கோவை: ஒரே நாடு ஒரே தேர்தல் பாஜக அரசின் சதி என்று கோவையில் தயாநிதிமாறன் எம்.பி தெரிவித்தார்.

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம் கோவை கொடிசியா அருகே தனியார் ஹாலில் இன்று (செப்.22) நடைபெற்றது. கூட்டத்தில் அந்த அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்

அப்போது அவர் கூறியதாவது “விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் 18 மாதங்களில் 185 நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளோம். இதில் புதிய இளைஞர்களை உருவாக்க வேண்டும். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 200 எ‌ம்எல்ஏக்களை பெற வேண்டும் என்பதே நமது இலக்கு” என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசின் சதி. கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்போ அல்லது ஜாதி வாரி கணக்கெடுப்போ நடத்தவில்லை. அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த திட்டமிடுகிறார்கள். காஷ்மீருக்கே இப்போது தான் தேர்தல் நடத்துகிறார்கள். பாஜக அரசு ஏதோ சதி செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வடமாநிலத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ஒருவர் இந்தியில் பேசி கேள்வி கேட்டால் அவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். இங்கு ஒருவர் தமிழில் பேசி கேள்வி கேட்டால் மரியாதை கொடுப்பதில்லை. நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்கின்றன.

பிரதமர் மோடி இந்தியாவில் இருப்பதே குறைவு. வெளிநாடுகளில் மட்டும் இருக்கிறார். மதத்தை வைத்தே பாஜக அரசியல் செய்கிறது. அதிமுக மிக கஷ்டமான காலத்தில் உள்ளது. முதுகு தண்டு வளைந்துள்ளதால் தான் அவர்களால் நிமிர முடியவில்லை. பாஜகவிடம் அடிமையாக வைத்திருந்தது பழனிசாமி செய்த தவறு” இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



By admin