பட மூலாதாரம், ALOK CHAUHAN
-
- எழுதியவர், சௌரப் சௌஹான்
- பதவி, சிர்மெளரிலிருந்து பிபிசிக்காக
ஹிமாச்சல் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தின் ஷிலாயி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற திருமணம் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா செளஹான் என்ற பெண், பிரதீப் நேகி, கபில் நேகி ஆகிய இரண்டு சகோதரர்களை மணந்தார்.
பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகப் பதிவுசெய்யப்பட்ட ஹாடி சமூகத்தின் ‘ஜோடிதாரா’ என்ற பழங்கால நடைமுறையின்படி இந்த பலதார திருமணம் நடைபெற்றது. உள்ளூர் மொழியில் ‘ஜோடிதாரா’ அல்லது ‘ஜாஜ்டா’ என்று அழைக்கப்படும் இந்த வகைத் திருமணம், சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் பாரம்பரியம் ஆகும்.
சிர்மௌர் மாவட்டம் டிரான்ஸ் கிரி பகுதியில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், கிராமவாசிகள் மற்றும் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய உணவு வகைகள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனம் என திருமணம் களைகட்டியிருந்தது.
கலாசார பாரம்பரியத்திற்கான உதாரணமாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் இந்த திருமணம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமணம் குறித்து தம்பதியினரின் குடும்பத்தினரிடம் பேச பிபிசி பலமுறை முயன்றது, ஆனால் அவர்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பட மூலாதாரம், ALOK CHAUHAN
பழமையான பாரம்பரிய சடங்கு ஜோடிதாரா
சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்தவர் மணமகள். மணமகன்கள் இருவரும் குன்ஹாட் கிராமத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஷிலாய் கிராமத்தை சேர்ந்தவர்கள். இந்தப் பகுதி மாநில தலைநகர் சிம்லாவிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இரண்டு குடும்பங்களும் ஹாடி சமூகத்தைச் சேர்ந்தவை. இந்த சமூகத்தினர், சிர்மௌர் மாவட்டத்தின் டிரான்ஸ் கிரி பகுதியிலும், உத்தரகண்டின் ஜெளன்சர்-பாவர் மற்றும் ரவாய்-ஜெளன்பூர் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
இந்த சமூகத்தினரிடைய பல கணவர் மணம் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. இந்த ‘ஜோடிதாரா’ நடைமுறை குடும்பத்திற்குள் ஒற்றுமையைப் பேணுவதற்காகவும், பரம்பரையாக வரும் சொத்து பிரியாமல் ஒன்றாக இருப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுவதாக ஹாடி சமூகத்தினர் நம்புகின்றனர்.
ஒரு பெண், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சகோதரர்களை மணந்து கொள்வது இயல்பானது. திருமணமானவுடன், வீட்டுப் பொறுப்புகளை பரஸ்பர ஒப்புதலுடன் மேற்கொள்வதற்கு இந்தத் திருமண நடைமுறை உதவுவதாக நம்பப்படுகிறது. சிர்மௌரைத் தவிர, சிம்லா, கின்னௌர் மற்றும் லாஹெளல் ஸ்பிதியின் சில பகுதிகளிலும் இந்த பாரம்பரியம் காணப்படுகிறது.
“ஜோடிதாரா பாரம்பரியம் எங்களது அடையாளம். இது, நிலம் உட்பட சொத்துக்கள் பிரிவதைத் தடுக்கவும், வரதட்சணை முறையைத் தவிர்க்கவும், சகோதரர்களிடையே ஒற்றுமையைப் பேணவும், குழந்தைகளை வளர்க்கவும் உதவுகிறது” என உள்ளூர்வாசியான கபில் செளகான் கூறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, ஷிலாயி பகுதியின் கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும், நான்கு முதல் ஆறு குடும்பங்கள் இந்த நடைமுறையை இன்றும் பின்பற்றுகின்றன.
அண்மையில் நடைபெற்ற திருமணத்தைப் பற்றி கபில் செளகானிடம் கேட்டோம். “இதுபோன்ற திருமணங்கள் நீண்ட காலமாகவே நடைபெறுகின்றன. இதுபற்றி எனக்கு தெரியும். இது புதுமாதிரியான திருமணம் இல்லை. இது ஒரு வழக்கமான பாரம்பரியம். இது எங்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம், மணமகள், மணமகன் மற்றும் அவர்களது குடும்பங்கள் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டால், மற்றவர்களுக்கு இதில் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
“இந்த திருமண முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும், திருமணம் செய்துக் கொள்ளாமலே ஒன்றாக வாழும் ‘லிவ்-இன்’ உறவுகளிலும் மக்கள் வசதியாக இருக்கிறார்கள்.”
பட மூலாதாரம், ALOK CHAUHAN
கலாசார பெருமை
ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணம் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம் ஒரு பெண் ஒரே மணமேடையில் இருவரைத் திருமணம் செய்துக் கொண்டது மட்டுமல்ல. மணமகள் மற்றும் அவரது கணவர்கள் இருவரும் படித்தவர்கள்.
மணமகன்களில் ஒருவரான பிரதீப் நேகி ஹிமாச்சல் பிரதேச மாநில அரசின் ஜல் சக்தி துறையில் பணிபுரிகிறார், கபில் நேகி வெளிநாட்டில் விருந்தோம்பல் துறையில் பணிபுரிகிறார்.
இந்தத் திருமணம் குறித்து பிபிசியிடம் பேசிய சுனிதா செளகான், “இந்தத் திருமணம் என்னுடைய சொந்த முடிவு. இந்தப் பாரம்பரியத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், தெரிந்துதான் அதை ஏற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.
மணமகன்களில் ஒருவரான பிரதீப் நேகி, “எங்கள் கலாசாரத்தில், இது நம்பிக்கை, அக்கறை மற்றும் பகிரப்பட்ட பொறுப்புக்கான உறவு” என்று சொல்கிறார் .
மணமகன்களில் மற்றொருவரான கபில் நேகி, “நான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், இந்த உறவை நான் மதிக்கிறேன். என் மனைவிக்கு நம்பிக்கையையும் அன்பையும் கொடுக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
இந்த திருமணம் பாரம்பரிய ரமல்சார் பூஜை முறைப்படி நடந்தது. இந்த முறையில், சப்தபதி முறையில் தீயை வலம் வருவதற்கு பதிலாக, ‘சின்ஜ்’ எனப்படும் சத்தியப் பிரமாணம் செய்யப்படுகிறது. நெருப்பின் முன் நின்று மணமக்கள் ஒன்றாக வாழ்வதாக சத்தியம் செய்கின்றனர்.
வழக்கமான திருமணங்களில் மணமகன் ஊர்வலமாக மணமகளின் வீட்டிற்கு செல்வார். ஆனால், ஜோடிதாரா பாரம்பரியத்தில், மணமகள் மற்றும் உற்றார் உறவினர்கள் ஊர்வலமாக மணமகன் வீட்டிற்குச் செல்வார்கள். இந்த வகையிலும், ஜோடிதாரா பாரம்பரியம் பிற இந்திய திருமண மரபுகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது.
பட மூலாதாரம், ALOK CHAUHAN
வாஜிப்-உல்-அர்ஸ் மற்றும் சட்ட அங்கீகாரம்
ஹிமாச்சல் பிரதேசத்தில், ஜோடிதாராவின் நடைமுறை ‘வாஜிப் உல் அர்ஸ்’ எனப்படும் காலனித்துவ கால வருவாய் ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணம், கிராமங்களின் சமூக மற்றும் பொருளாதார நடைமுறைகளைப் பதிவுசெய்து ஜோடிதாராவைத் ஹாடி சமூகத்தின் பாரம்பரியமாக அங்கீகரிக்கிறது.
விவசாய நிலங்கள் பிரிந்துபோவதைத் தடுப்பதும், குடும்பத்தை ஒற்றுமையாக வைத்திருப்பதும் இந்த நடைமுறையின் நோக்கமாகக் கூறப்படுகிறது.
ஒருதார மணம் மட்டுமே செல்லுபடியாகும் என்று இந்து திருமணச் சட்டம் கூறுவதால் தான், இத்தகைய திருமணங்களின் சட்டப்பூர்வ நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
“இரண்டு திருமணங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதால், 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 5 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS) பிரிவு 32 ஆகியவை பொருந்தாது” என்று ஹிமாச்சல் பிரதேச உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுஷில் கௌதம் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
கலாசாரம் மற்றும் வரலாற்று பின்னணி
ஜோடிதாரா பாரம்பரியத்தின் வேர்கள், டிரான்ஸ் கிரி பகுதியில் ஆழமாக வேரூன்றியிருப்பதாக நம்பப்படுகிறது. மகாபாரதத்தில் வரும் பாஞ்சாலியுடன் கதையுடன் பாரம்பரிய வேர்கள் இணைக்கப்பட்டுள்ளது, அதனால்தான் பலர் இதை ‘திரௌபதி பிரதா’ என்றும் அழைக்கிறார்கள்.
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சரான டாக்டர் ஒய்.எஸ். பர்மார், ஜோடிதாரா பாரம்பரியத்திற்குப் பின்னால் உள்ள சமூக மற்றும் பொருளாதார காரணங்களை ‘Polyandry in the Himalayas’ என்ற தனது புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, ‘மலைப்பாங்கான பகுதிகளின் கடினமான சூழ்நிலைகளில் இந்த நடைமுறை வளர்ந்தது, அங்கு விவசாய நிலங்களை ஒன்றாக வைத்திருப்பது அவசியம்.’
“இந்த நடைமுறை, சமூக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பதுடன் சமூகத்தின் ஒற்றுமை மற்றும் மரபுகளை பிரதிபலிக்கிறது. இது சமூக மதிப்புகளைப் பாதுகாப்பதாகவே பார்க்கப்பட வேண்டும்” என்று ஹாடி சமூகத்தைச் சேர்ந்த அறிஞரும் சமூக ஆர்வலருமான அமிசந்த் ஹாடி கூறுகிறார்.
மத்திய ஹாடி குழுவின் பொதுச் செயலாளர் குந்தன் சிங் சாஸ்திரி கூறுகையில், இந்த பாரம்பரியம் மிகவும் பழமையானது என்றும், குடும்ப ஒற்றுமையைப் பேணுவதே இதன் நோக்கம் என்றும் கூறுகிறார்.
‘பல கணவர் மணம்’ தொடர்பான விவாதங்களும் விமர்சனங்களும்
இந்தத் திருமணத்திற்குப் பிறகு, சமூக மற்றும் தார்மீக ரீதியிலான விவாதங்களும் தொடங்கிவிட்டன. பல கணவர் மணம் என்பதை, ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் விஷயமாகக் கருதுகின்றனர். இருந்தபோதிலும், இதுபோன்ற திருமணங்கள், பெண்களின் உரிமைகளுக்கு எதிரானது என்று கூறுகின்றன.
“ஜோடிதாரா நடைமுறை பெண்களை சுரண்டுவதை ஊக்குவிக்கிறது மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது” என்று அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தவாலே கூறினார்.
இது அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு எதிரானது என ஹிமாச்சல் பிரதேசத்தின் முன்னாள் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் டாக்டர் ஓம்கார் ஷாத் கூறினார்.
ஹிமாச்சல் பிரதேச அரசின் தொழில்துறை அமைச்சரும் ஷிலாயி எம்எல்ஏவுமான ஹர்ஷ்வர்தன் செளகான், “இது ஷிலாயி-இன் பழைய பாரம்பரியம். பிரதீப்பும் கபிலும் இந்த பாரம்பரியத்தை உயிருடன் வைத்திருப்பதன் மூலம் தங்கள் கலாசார பாரம்பரியத்தை மதித்துள்ளனர்” என்று கூறுகிறார்.
பட மூலாதாரம், ALOK CHAUHAN
ஹாடி சமூகத்தின் பிற திருமண பழக்கவழக்கங்கள்
ஜோதிதாராவைத் தவிர, ஹாடி சமூகத்தில் மேலும் நான்கு பாரம்பரிய திருமண பழக்கவழக்கங்கள் வழக்கத்தில் உள்ளன.
குழந்தை திருமணம்: தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே குழந்தையின் திருமணம் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும், குழந்தை வளர்ந்து தனது சம்மதத்தை அளித்த பின்னரே திருமணச் சடங்குகள் நடைபெறும்.
ஜாஜ்டா திருமணம்: இந்த வகை திருமணத்தில், மணமகன் தரப்பினர் திருமணத்தை முன்மொழிவார்கள். பெண் வீட்டாரின் சம்மதம் பெற்ற பிறகு, திருமணச் சடங்குகள் நடைபெறும். இந்த மரபிலும், ‘சின்ஜ்’ எனப்படும் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு மணமக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்.
கிதையோ திருமணம்: திருமணமான பெண் தனது கணவன் வீட்டாருடனான உறவை முறித்துக் கொண்டு வேறொருவரை மணப்பதை கிதையோ திருமணம் என்று அழைக்கின்றனர்.
ஹார் திருமணம்: ஒரு பெண் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக ஒரு ஆணைத் திருமணம் செய்தால் அதை ஹார் திருமணம் என்று அழைக்கின்றனர்.
பட மூலாதாரம், PUNEET BARNALA/BBC
காலத்திற்கு ஏற்ப மாறும் மரபு
ஜோடிதாரா வகை திருமணங்கள் தற்போது மிகவும் குறைந்துவிட்டதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
“இந்த வழக்கம் தற்போது ஒரு சில கிராமங்களில் மட்டுமே காணப்படுகிறது, பெரும்பாலான திருமணங்கள் ஆரவாரமின்றி அமைதியாக நடைபெறுகின்றன” என்று சமூக ஆர்வலர் ரமேஷ் சிங்டா கூறுகிறார்.
இருப்பினும், இந்த சமீபத்திய திருமணம் சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது, மேலும் ஹாடி சமூகத்திற்கு வழங்கப்பட்ட பட்டியல் பழங்குடி அந்தஸ்து காரணமாகவும் இது அதிகரித்துள்ளது.
ஹாடி சமூகத்தின் மொத்த மக்கள் தொகை குறித்த அதிகாரப்பூர்வ தரவுகள் ஏதும் இல்லை. ஆனால், இந்த சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது, மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை 2.5 முதல் 3 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்பட்டது. இதில் சிர்மௌரின் டிரான்ஸ் கிரி பகுதியைச் சேர்ந்த சுமார் 1.5 முதல் 2 லட்சம் பேர் வரை என்று கூறப்பட்டது.
ஹாடி சமூகத்தினரின் பின்னணி
சிர்மௌர் மாவட்டம் கிரிபார் பகுதியில் 150க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த பகுதியில் நிரந்தர சந்தை இல்லை, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து வந்த சமூகத்தினர், பொருட்களை விற்பதற்காக தற்காலிக சந்தைகளை அமைத்தனர். இப்படி சந்தை அமைத்த இந்த சமூகம் காலப்போக்கில், ஹாடி என்று அறியப்பட்டது. ஹாடி என்றால் சந்தை என்று பொருள் ஆகும்.
ஹாடி என்ற பெயர், உள்ளூர் ஹாட் பஜாரில் வீட்டுப் பொருட்களை விற்கும் பழைய பாரம்பரியத்துடன் தொடர்புடையது என சமூக ஆர்வலர் ரமேஷ் சிங்டாவின் கூறுகிறார். உத்தரகண்டில் உள்ள ஹாட்டி சமூகத்தினர் ஜெளன்சாரி சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறார்கள், இந்த இரு சமூகத்தினரின் மரபுகள் மிகவும் ஒத்தவை.
ஹிமாச்சல் பிரதேசத்தின் ஹாடி சமூகத்திற்கு மத்திய அரசு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்கியது. இருப்பினும், 2024 ஜனவரியில், ‘கிரிபார் பட்டியல் சாதி பாதுகாப்புக் குழு’ தாக்கல் செய்த மனுவின் பேரில் ஹிமாச்சல் பிரதேச உயர் நீதிமன்றம் இந்த முடிவை நிறுத்தி வைத்தது.
ஹாடி சமூகத்திற்கு எஸ்.டி அந்தஸ்து வழங்குவது தற்போதுள்ள இடஒதுக்கீடு முறையைப் பாதிக்கலாம் மற்றும் பட்டியல் சாதியினரின் உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று குழு கூறுகிறது. இந்த சமூகம் பட்டியலின பழங்குடி அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும், அதற்கான வசதிகளைப் பெறுவதில்லை.
உத்தரகண்ட் (அன்றைய ஒருங்கிணைந்த உத்தரப் பிரதேசம்) மாநிலத்தின் ஹாடி சமூகத்தினர் 1967ஆம் ஆண்டிலேயே பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு