• Sun. Apr 26th, 2026

24×7 Live News

Apdin News

ஒரே வளாகத்தில் உலக காவல் நிலையங்களின் போலி: மோசடி மையத்தில் பிபிசி கண்டறிந்தது என்ன?

Byadmin

Apr 26, 2026


ராயல் ஹில் கேசினோவில் உள்ள பல அறைகளில் தூசு படிந்த வியட்நாமிய போலீஸ் தொப்பிகள்

பட மூலாதாரம், Lulu Luo/BBC

படக்குறிப்பு, ராயல் ஹில் கேசினோவில் உள்ள பல அறைகளில் வியட்நாமிய போலீஸ் தொப்பிகள்

ராயல் ஹில் கேசினோவிற்குப் பின்னால் உள்ள ஆறு மாடி கட்டிடத்தின் வெளிச்சமில்லாத தாழ்வாரங்களில் நடந்து செல்லும்போது, அங்கிருக்கும் ஒவ்வொரு கதவும் ஒரு மாறுபட்ட உலகத்தைத் திறக்கின்றன.

ஓர் அறையில், வியட்நாமிய வங்கி ஒன்றின் அச்சு அசலான பிரதி உள்ளது. மற்றொன்றில், நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய காவல் நிலையத்திற்குள் இருப்பீர்கள். ஒரு மூலையில் சீன போலீஸ் அதிகாரியின் சட்டை தொங்கிக் கொண்டிருக்கிறது. சுவர்களில் ஊக்கமளிக்கும் வாசகங்கள் வரையப்பட்டுள்ளன. ஒரு பலகையில் இருந்த சீன எழுத்துக்கள், “எல்லா இடங்களிலிருந்தும் பணம் வந்து கொண்டிருக்கிறது” என்று கூறுகின்றன. போலியான நூறு டாலர் நோட்டுகள் தரை முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.

இது ஒரு பிரம்மாண்டமான மோசடி வளாகம். இது ‘ஓ ஸ்மாச்’எனப்படும் எல்லை நகரத்தில், கம்போடியாவிற்குள் அமைந்திருக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பணியாற்றினர். அவர்களது வாழ்க்கை முறை மிகக் கடுமையாக முறைப்படுத்தப்பட்டிருந்தது; அவர்கள் உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் சேமிப்புப் பணத்தை மோசடி செய்து வந்தனர்.

டிசம்பர் மாதம், தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே நடந்த குறுகிய கால எல்லைப் போரின்போது, ராயல் ஹில் கட்டிடம் தாய்லாந்து விமானப் படையால் குண்டுவீசித் தாக்கப்பட்டது – இந்த கேசினோவிலிருந்து கம்போடிய ட்ரோன்கள் ஏவப்பட்டதாக தாய்லாந்து தரப்பு கூறுகிறது. அங்கிருந்த தொழிலாளர்கள் உண்ணாத நூடுல்ஸ் கிண்ணங்கள், பாதி குடித்த கோக் கேன்கள் மற்றும் ஒருவித கடுமையான நெடியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இன்று, ராயல் ஹில் கேசினோ அதை ஆக்கிரமித்துள்ள தாய்லாந்து வீரர்களைத் தவிர மற்றபடி காலியாக உள்ளது. குண்டுவீச்சினால் ஜன்னல்கள் சுக்குநூறாக உடைந்துள்ளன, சில இடங்களில் சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில் பெரிய துளைகள் விழுந்து, அனைத்தும் தூசியால் படர்ந்துள்ளன.

By admin