1
கூரிய ஆயுதத்தால் தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் வத்தளைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் இருந்த மேற்படி குடும்பஸ்தரை ஓட்டோவில் வருகை தந்த அடையாளம் தெரியாத நால்வர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
43 வயதுடைய வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தின்போது கொல்லப்பட்டுள்ளார்.
மேற்படி குடும்பஸ்தர் அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளனர்.
உயிரிழந்தவர் கடந்த 2023 ஆம் ஆண்டு மஹபாகே பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தவர் எனவும், அவர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்ய வத்தளைப் பொலிஸார் மற்றும் களனி குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.