தயாரிப்பு : விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் & ரோமியோ பிக்சர்ஸ்
நடிகர்கள் : ருத்ரா, மிதிலா பால்கர் , நிர்மல் பிள்ளை, மிஷ்கின், கருணாகரன், கீதா கைலாசம் மற்றும் பலர்.
சிறப்பு தோற்றம் : விஷ்ணு விஷால்
இயக்கம் : கிருஷ்ணகுமார் ராமகுமார்
மதிப்பீடு : 2.5/5
விஷ்ணு விஷாலின் உடன்பிறவா சகோதரர் ருத்ரா கதையின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம்…’ பைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் நடிகர் கிருஷ்ணாவாக ரசிகர்களுக்கு அறிமுகமான கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் இந்த இரண்டு காரணங்களுக்காகவும் அறிமுக நாயகன் ருத்ரா முத்தக் காட்சிகள் நடித்திருக்கிறார் என்ற விளம்பரமும் படத்தை படமாளிகையில் காண்பதற்கு போதுமான காரணங்களாக இருந்தது. இந்த எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு படம் மன நிறைவை அளித்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவு காணும் அஸ்வின்( ருத்ரா ) நடிகர் விஷ்ணு விஷாலை சந்தித்து கதை சொல்கிறார். அவர் சொன்ன கதை விஷ்ணு விஷாலுக்கு பிடிக்கவில்லை. இன்றைய டிரெண்டிங்கிற்கு ஏற்றாற் போல் ஏதேனும் காதல் கதை இருந்தால் சொல்லுங்கள் என விஷ்ணு விஷால் அஸ்வினிடம் சொல்கிறார். சிறிது நேர தாயக்கத்திற்குப் பிறகு தன்னுடைய காதல் அனுபவத்தை கதையாக விஷ்ணு விஷாலிடம் அஸ்வின் பகிர்ந்து கொள்கிறார். இந்தக் கதை நன்றாக இருக்கிறது. இதனை முழு திரைக்கதை வடிவமாக மாற்றி எடுத்து வந்தால் நான் நடிக்கிறேன் என வாக்குறுதி தருகிறார். அஸ்வினால் அந்தக் கதையை முழுமையாக எழுத முடிந்ததா ? இல்லையா? அவரது இயக்குநர் கனவு நனவானதா? இல்லையா? என்பதை விவரிக்கும் படம் தான் ‘ஓஹோ எந்தன் பேபி’.
நாயகன் ,நாயகி, நாயகனின் நண்பர் என அனைவரும் புது முகங்கள் சில காட்சிகள் புதிது இதனால் படத்தின் முதல் பாதி கலகலப்பாகவும், ஏதேனும் விடயம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் கடந்து செல்கிறது.
அதிலும் அஸ்வின் கதை சொல்லும் போது முதல் அத்தியாயம் மூன்றாவது அத்தியாயம் அதன் பிறகு இரண்டாவது அத்தியாயம் என கதையைச் சொல்வதெல்லாம் சிரிப்பு + கவர்ச்சி அதிகம் என்பதால் ரசிக்கிறார்கள். நாயகனை விட நாயகியின் தோற்றம் சற்று முதிர்ச்சியாக இருக்கிறது என்பதால் கதாபாத்திரத்தை நாயகனை விட மூன்று வயது அதிகம் என்று இயக்குநர் சொல்லி இருப்பதும் ஓகே.
ஆனால் இரண்டாம் பாதியில் இவர்கள் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதை நோக்கியே திரைக்கதை பயணிக்கும் என்று பார்வையாளர்கள் தீர்மானித்து விடுவதால் அதில் எந்த பரபரப்பான அல்லது சுவாரசியமான திருப்பங்கள் இல்லாததால் ரசிகர்களிடம் சோர்வு ஏற்படுகிறது. இருந்தாலும் இதனை அஸ்வினாக நடித்திருக்கும் ருத்ராவும் , மீராவாக நடித்திருக்கும் மிதிலா பால்கரும் தங்களின் அற்புதமான வசீகரிக்கும் திரை தோற்றத்தால் ரசிகர்களை ஆறுதலை தருகிறார்கள்.
நடிகராக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் திரைக்கதைக்கு வலுவூட்டுகிறார். அதே தருணத்தில் மிஷ்கின் இயக்கத்தில் இவர் ஷட்டிலாக நடிப்பது ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகிறது.
மிஷ்கின் இயக்குநராகவே தோன்றி தன் பங்களிப்பை நிறைவு செய்து இருக்கிறார். அஸ்வினின் சித்தப்பா முரளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரனும் தன் பங்கினை வழக்கம்போல் நேர்த்தியாக செய்து இருக்கிறார்.
டிஜிட்டல் திரையுலகின் நட்சத்திர முகமான நிர்மல் பிள்ளை – நாயகனின் நண்பராக திரையில் தோன்றும் போது ரசிகர்களிடம் கரவொலி & குரலொலி எழுகிறது.
இன்றைய இணைய தலைமுறையினரின் காதலைப் பற்றிய எண்ணங்களை அதில் உள்ள சிக்கல்களை விவரிக்கும் இந்தப் படத்தில் ‘ காதலிக்கும் போது இரண்டு தரப்பில் இருந்தும் விட்டுக் கொடுக்கும் தன்மை அவசியம்’ என்பதை வலியுறுத்தி இருப்பதால் காதலர்களின் நிபந்தனையற்ற ஆதரவை இந்த படைப்பு பெறுகிறது.
ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை, ஒலிக் கலவை , கலை இயக்கம் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய நூறு சதவீத அர்ப்பணிப்பை வழங்கி படைப்பை கவனிக்க வைத்துள்ளனர்.
ஓஹோ எந்தன் பேபி – ஒரு முறை கேட்கும் ‘டிரெண்ட்டிங் ‘பாட்டு.
The post ஓஹோ எந்தன் பேபி | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.