• Thu. Jul 31st, 2025

24×7 Live News

Apdin News

கடலூர் மாநகராட்சி குப்பை வண்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள்: அதிகாரிகள் விசாரணை | Kallakurichi district voter cards were found in the Cuddalore Corporation garbage truck.

Byadmin

Jul 30, 2025


கடலூர்: கடலூர் மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குப்பை சேகரிக்கும் பேட்டரி வண்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் வாக்காளர் அட்டைகள் கிடந்தன. இவற்றை வருவாய் துறை அதிகாரி கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மஞ்சக்குப்பம் பில்லு கடை தெருவில் உள்ள கடலூர் மாநகராட்சி பிரிவு அலுவலகம் 3 ல் (மாநகராட்சி பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு வருகை பதிவேடு எடுக்கும் இடம்) வாயிலில் குப்பை எடுக்கும் மூன்று சக்கர பேட்டரி வண்டி நேற்று (ஜூலை.29) மாலை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று (ஜூலை.30) காலை ஓட்டுநர் துப்புரவு பணியாளர் காமாட்சி (38) குப்பை சேகரிக்கும் வண்டியை எடுத்துள்ளார்.

அப்போது வண்டியில் ஒயர்கள் அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் வண்டியில் குப்பை போடும் இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள் 48, தேர்தல் வாக்கு பதிவின் போது வைக்கப்படும் மை, மற்றும் தேர்தல் பணிக்கு செல்பவர்கள் அணியும் பேட்ச், தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் இருந்தன.

இது குறித்து தகவல் அறிந்த கடலூர் வட்டாட்சியர் மகேஷ் , மஞ்சக்குப்பம் வருவாய் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்று குப்பை வண்டியில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி அவற்றை குப்பை சேகரிக்கும் வண்டியில் போட்டது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது கடலூரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.



By admin