• Thu. Jun 25th, 2026

24×7 Live News

Apdin News

கட்சி நிதி குற்றச்சாட்டு, கையால் சைகை: சட்டப்பேரவை மரபுகளை மீறினாரா முதல்வர் விஜய்?

Byadmin

Jun 25, 2026


தமிழ்நாடு, விஜய். உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை

பட மூலாதாரம், TamilNadu Assembly

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், கட்சி நிதி என்று குற்றம்சாட்டியதும் கைகளால் சைகை காட்டியதும் தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. முதல்வர் ஆதாரமின்றிப் பேசுவதாகக் குற்றம்சாட்டும் திமுக, முதல்வரின் பேச்சும் செயலும் சட்டப்பேரவை மரபுகளை அப்பட்டமாக மீறியது என்கிறது.

ஆனால் கட்சி நிதி என்று முதல்வர் விஜய் கூறியதற்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாகவும், சட்டப்பேரவையில் முதல்வர் நகைச்சுவையாகப் பேசியதை பெரும் குற்றமாகச் சித்தரிக்க திமுக முயற்சி செய்வதாக தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.

சட்டப்பேரவையில் விஜய் பேசியதும், பிற கட்சிகளின் எதிர்வினைகளும்!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், கடந்த 18 ஆம் தேதியிலிருந்து துவங்கியது. ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அதில் உரையாற்றினார். ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆளும்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட திமுக, அதிமுக உறுப்பினர்கள் பலரும் பேசினர். இதற்குப் பதிலளித்து முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) பேசினார்.

அவர் பேசுகையில், தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின் 40 நாட்களில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் பணிகளைப் பட்டியலிட்டார். அதன்பின் திமுக வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து பல விஷயங்களை அவர் தனது உரையில் குறிப்பிட்டார். திமுக ஆட்சியின்போது, தமிழக சட்டப்பேரவையில் குடியரசுத்தலைவர் கலந்து கொண்ட கருணாநிதி படத்திறப்புவிழாவின்போது இரு முறை தேசியகீதம் பாடப்பட்டது ஏனென்று கேள்வி எழுப்பினார்.

திமுகவை மறைமுகமாகக் குறிப்பிட்டுப்பேசிய முதல்வர் விஜய், “அவர்களுடைய தயவில்தான் ஆட்சி நடக்கிறது” என்று கூறுவதாக குற்றம் சாட்டியதுடன், மக்களின் ஆதரவில்தான் ஆட்சி நடக்கிறது என்றார். திமுக கூட்டணியிலிருந்து வந்த கட்சிகள், தவெக ஆட்சிக்கு ஆதரவளிப்பது என்ற முடிவை சுதந்திரமாகத்தான் எடுத்தார்கள் என்றும் அவர் பேசினார். கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களிக்க திமுக மறுத்ததாகவும் அவர் குறைகூறினார்.

By admin