இந்தியா – மராட்டிய மாநிலம், புனே கோப்டேநகர் சோனவானே அடுக்குமாடி கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது மூத்த மகளை நேற்று (08) காலை பாடசாலை விடச்சென்றார்.
அந்த நேரத்தில் இளைய மகளான பாவிகா (வயது 4) என்ற குழந்தை வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டு இருந்தது.
இந்நிலையில், திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த குழந்தை, வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே செல்ல முயன்றுள்ளது.
எனினும், குழந்தையின் தலை ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது. குழந்தையின் உடல் பகுதி மூன்றாவது மாடி ஜன்னலில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தது.
இதைப்பார்த்து குடியிருப்புவாசி ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக இது குறித்து கட்டிடத்தில் வசித்து வரும் தீயணைப்பு படை வீரரிடம் கூறினார்.
உடனடியாக அந்தத் தீயணைப்பு படை வீரர் 3ஆவது மாடி நோக்கி ஓடினார். அதேசமயத்தில் குழந்தையின் தாயும் வீடு திரும்பினார். உடனடியாக அவர்கள் வீட்டைத் திறந்து உள்ளே ஓடிச்சென்றனர்.
இதில் தீயணைப்பு படை வீரர் வீட்டின் உள்புறத்தில் இருந்து ஜன்னலில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த குழந்தையை மீட்டார். இதனால் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
இந்தச் சம்பவம் புனே கோப்டேநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அந்தரத்தில் தொங்கிய குழந்தை! appeared first on Vanakkam London.