இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. இரட்டை வருமானம் இருந்தாலும், சில நேரங்களில் மனநிம்மதி குறைந்துவிடுகிறது. அலுவலகத்தில் பணி அழுத்தம், வீட்டு வேலைகள், குழந்தைகளை பராமரிப்பது, குடும்ப பொறுப்புகள் என இருவருக்குமே ஓய்வில்லாத சூழல் உருவாகிறது.
ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்க முடியாமல், சிறு விஷயங்களுக்கு கூட சண்டைகள் ஏற்படுகின்றன. ஆனால், இருவரும் வேலைக்கு செல்வது பிரச்சினையல்ல; பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளாததுதான் பிரச்சினை.
பொது மக்கள் கருத்து:
அந்த வகையில், இரட்டை வருமானத்தால் நிம்மதி இருக்குமா, இருக்காதா? என மாலைமலர் சார்பில் பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் கணவன் மற்றும் மனைவி என இருவரும் வேலைக்கு செல்வதால் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என 20 சதவீதம் பேரும், 80 சதவீதம் பேர் பாதிக்காது என்றும் பதிலளித்துள்ளனர்.
இதே கேள்விக்கு மாலைமலர் யூடியூப் தளத்தில் பதிலளித்தவர்களில் 68 சதவீதம் பேர் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என்றும் 28 சதவீதம் பேர் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் 4 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் பதிலளித்தனர்.
மாலைமலர் இன்ஸ்டாகிராம் தள பக்கத்தில் பதிலளித்தவர்களில் 58 சதவீதம் பேர் கணவன், மனைவி வேலைக்கு செல்வதால் குடும்ப வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் என்றும் 36 சதவீதம் பேர் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் 6 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்தனர்.
எக்ஸ் தளத்தில் இதே கேள்விக்கு பதிலளித்தவர்களில் 50 சதவீதம் பேர் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் 25 சதவீதம் பேர் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் 25 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.