படக்குறிப்பு, 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தங்கள் கணவர்களுக்கு விஷம் வைத்துக் கொன்றதற்காக சில பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.கட்டுரை தகவல்
எழுதியவர், பிபிசி உலக சேவை
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கடந்த 1929, டிசம்பர் 14ஆம் தேதி, ஹங்கேரியில் நடந்த அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் குறித்து அமெரிக்க நாளிதழான “நியூயார்க் டைம்ஸ்” செய்தி வெளியிட்டது. அந்த நேரத்தில் சுமார் 50 பெண்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.
இந்த ஐரோப்பிய நாட்டில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வசித்த பெரும்பாலான ஆண்களை விஷம் வைத்துக் கொன்றதாக பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்தச் செய்தி சிறியதாக இருந்தாலும், அதில் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் இருந்தன.
கடந்த 1911 மற்றும் 1929க்கு இடையில், புடாபெஸ்டுக்கு தெற்கே சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ள நாடிரெவ் கிராமத்தைச் சேர்ந்த பல பெண்கள், 50க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விஷம் வைத்துக் கொன்றதாக அதில் கூறப்பட்டிருந்தது.
இந்தப் பெண்கள் “ஏஞ்சல் மேக்கர்ஸ்” என்று அழைக்கப்பட்டனர். ஆர்சனிக் கலக்கப்பட்ட திரவத்தைக் கொடுத்து ஆண்களை விஷம் வைத்துக் கொன்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. நவீன வரலாற்றில் பெண்களால் ஆண்கள் அதிகளவில் படுகொலை செய்யப்பட்ட மிகப்பெரிய சம்பவமாக இது என்று சிலரால் கருதப்படுகிறது.
இந்தப் பெண்கள் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது, அப்போது ஒரு பெயர் மீண்டும் மீண்டும் அடிபட்டது: அவர்தான் கிராமத்தின் மருத்துவச்சியான சுசானா ஃபசெகாஷ்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கிராமத்துப் பெண்கள் மத்தியில் அந்த மருத்துவச்சிக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.
அந்த நேரத்தில், இந்த கிராமம் ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய பேரரசின் கீழ் இருந்தது, மேலும் அங்கு மருத்துவர் யாரும் இல்லை. கிராமத்துப் பெண்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கும் ஒரே நபராக ஃபசெகாஷ் மட்டுமே இருந்தார். கிராமத்தின் மருத்துவ அமைப்பின் மீது அவர் கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார்.
கடந்த 2004ஆம் ஆண்டு பிபிசி வானொலி ஆவணப் பதிவில், கிராமவாசியான மரியா கோனியா, இந்த விஷம் வைக்கும் சம்பவங்களுக்கு ஃபசெகாஷ் ஏன் மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்பட்டார் என்பதை விளக்கினார்.
அவரது கூற்றுப்படி, கிராமத்தில் உள்ள அனைத்துப் பெண்களும் தங்கள் பிரச்னைகளை ஃபசெகாஷிடம் பகிர்ந்து கொண்டனர். “பெண்களுக்கு தங்கள் கணவர்களுடன் பிரச்னைகள் இருந்தால், தன்னிடம் எளிதான தீர்வு இருப்பதாக அவர் பெண்களிடம் கூறினார்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கொலைகளுக்கு ஃபசெகாஷ் மூளையாகக் கருதப்பட்டாலும், வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கிராமத்தில் உள்ள பெண்களின் சாட்சியங்கள் அவர்களின் வாழ்க்கையின் வித்தியாசமான பக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அதாவது ஆண்களால் பெண்களுக்கு எதிரான வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை அவை விவரிக்கின்றன.
ஆனால் இந்த வழக்கு பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டே இருந்தது. காவல்துறை ஆவணங்களின்படி, முதல் கொலை 1911இல் பதிவாகியுள்ளது, ஆனால் 1929 வரை எந்த விசாரணையும் தொடங்கப்படவில்லை. அப்படியென்றால், குற்றவாளிகளை நெருங்க போலீசாருக்கு துப்பு கிடைத்தது எப்படி?
ஒரு விசித்திரமான காலகட்டம்
கடந்த 1911ஆம் ஆண்டில் சுசானா ஃபசெகாஷ் என்ற பெண் நாடிரெவ் கிராமத்திற்கு வந்தார். மரியா கோனியாவின் கூற்றுப்படியும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலும், ஃபசெகாஷ் இரண்டு காரணங்களுக்காக மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
முதல் காரணம், அவர் ஒரு மருத்துவச்சியாக பணியாற்றியது மட்டுமின்றி, மருத்துவ சிகிச்சைகள் குறித்த அறிவையும் பெற்றிருந்தார். மருந்துகளைத் தயாரிக்க சில ரசாயனங்களையும் பயன்படுத்தினார். அந்தப் பகுதியில் இந்த வகையான மருத்துவ அறிவு மிகவும் சாதாரணமான ஒன்றாக இருக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
இரண்டாவது காரணம், அவரது கணவரைப் பற்றிய எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாது.
“நாடிரெவ் கிராமத்தில் பாதிரியாரோ அல்லது மருத்துவரோ இல்லை. எனவே, அவரது அறிவு மற்றும் திறமையின் காரணமாக, மக்கள் அவரிடம் வரவும், அவரை நம்பவும் தொடங்கினர்” என்று மரியா கோனியா கூறினார்.
“படிப்படியாக, வீடுகளின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்ற தகவல்களை இந்தப் பெண் பெறத் தொடங்கினார். மனைவிகளை அடிக்கும் ஆண்கள், அவர்களை உறவுக்கு கட்டாயப்படுத்துபவர்கள் மற்றும் அவர்களில் பலர் தங்கள் மனைவிகளை ஏமாற்றுபவர்கள் என்ற விவரங்கள் அவருக்குத் தெரியவந்தன. அங்கு துஷ்பிரயோகமும் வன்முறையும் தலைவிரித்தாடியது.”
இந்த நேரத்தில், ஃபசெகாஷ் அந்த காலகட்டத்தில் சட்டவிரோதமாக இருந்த ஒரு செயலிலும் ஈடுபட்டார்: தேவையற்ற கர்ப்பங்களை கலைக்க பெண்களுக்கு கருக்கலைப்பு செய்தார். இதற்காக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது, ஆனால் அவர் ஒருபோதும் குற்றவாளியாக நிரூபிக்கப்படவில்லை.
கோனியாவின் கூற்றுப்படி, அந்த நேரத்தில் இருந்த ஒரு பெரிய பிரச்னை என்னவென்றால், பல திருமணங்கள் குடும்பங்களால் நிச்சயிக்கப்பட்டவை. இளம் பெண்கள் பெரும்பாலும் தங்களை விட வயதில் மூத்த ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.
“அந்தக் காலத்தில் விவாகரத்து செய்வதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. நீங்கள் அடிக்கப்பட்டாலும் அல்லது துன்புறுத்தப்பட்டாலும், உங்கள் கணவரை விட்டு பிரிய முடியாது,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், அந்த காலகட்டத்தின் அறிக்கைகள் வேறு ஒன்றைக் கூறுகின்றன: இந்த நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்கள் நிலம், பரம்பரைச் சொத்து மற்றும் சட்டப்பூர்வ பொறுப்புகள் போன்ற விஷயங்களை உள்ளடக்கிய ஒரு வகையான ஒப்பந்தத்துடனேயே நடந்தன.
“ஃபசெகாஷ் படிப்படியாக பெண்களின் பிரச்னைகளைத் தன்னால் தீர்க்க முடியும் என்று அவர்களை நம்ப வைக்கத் தொடங்கினார்” என்று கோனியா பிபிசியிடம் கூறினார்.
விஷம் வைக்கப்பட்ட முதல் சம்பவம் 1911 இல் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் மேலும் பல ஆண்கள் இறந்தனர். அந்த நேரத்தில், முதலாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது, ஆஸ்ட்ரோ-ஹங்கேரியப் பேரரசு மெதுவாக சிதைந்து கொண்டிருந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆஸ்ட்ரோ-ஹங்கேரியப் பேரரசு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில்தான் இந்த விஷம் வைக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடந்தன.
18 ஆண்டுகளில், கணவர்கள் மற்றும் குடும்பத் தலைவர்களின் இறப்புகள் 45 முதல் 50 வரை நடந்தன. அவர்கள் அனைவரும் கிராமத்து கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டனர்.
படிப்படியாக பலரும் நாடிரெவ் கிராமத்தை ‘கொலையாளிகளின் கிராமம்’ என்று அழைக்கத் தொடங்கினர்.
இந்தச் சம்பவங்கள் காவல்துறையினரின் கவனத்தை ஈர்த்தன. 1929ஆம் ஆண்டின் முற்பகுதியில், அதிகாரிகள் உடல்களைத் தோண்டியெடுத்து பரிசோதிக்கத் தொடங்கினர். அப்போது குற்றவாளிகளுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஒரு சாட்சியத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்: அதுதான் ஆர்சனிக்.
பெண்கள் மீதான வழக்குகள்
ஃபசெகாஷ் கிராமத்தில் சாலையை நோக்கியவாறு இருந்த ஒரு சாதாரண, ஒரு மாடி வீட்டில் வசித்து வந்தார். இந்தக் கொலைகளில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான விஷங்கள் அங்குதான் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1929 ஜூலை 19 அன்று, இந்த வீட்டில் இருந்துதான் தன்னை கைது செய்ய காவல் துறை அதிகாரிகள் வருவதை அவர் பார்த்தார்.
“காவல்துறையினர் தன் வீட்டை நெருங்குவதை அவர் பார்த்தபோது, இனி தான் தப்புவது சாத்தியமில்லை என்பதை அவர் அறிந்திருந்தார்,” என்று மரியா கோனியா கூறினார்.
“காவல்துறையினர் வருவதற்குள், அவர் இறந்துவிட்டார். அவர் தானே தயாரித்த விஷத்தை குடித்திருந்தார்.”
ஆனால் இந்தக் கொலைகளுக்கு ஃபசெகாஷ் மட்டுமே முழுப் பொறுப்பாகக் கருதப்படவில்லை.
கடந்த 1929ஆம் ஆண்டு முதல், மாநில தலைநகரான செல்குக்கில் 26 பெண்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.
அவர்களில் எட்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, மீதமுள்ளவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர், இதில் ஏழு பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் மருத்துவச்சிகள் மட்டுமே இந்தக் கொலைகளுக்குக் காரணமல்ல. இந்தப் பெண்களில் மிகச்சிலரே தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இந்தக் கொலைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கம் முழுமையாக நிறுவப்படவில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 1929-ஆம் ஆண்டில் நாடிரெவ் கிராமத்தில் செய்திகளை அறிவிப்பவர் முரசு அடித்து தகவல்களைத் தெரிவித்தார்.
முனைவர் மற்றும் வரலாற்றாசிரியர் கெசா சே, நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி, இந்த வழக்கின் பல மர்மமான அம்சங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த வரலாற்றாசிரியரின் கூற்றுப்படி, “இந்தப் பெண்களின் நோக்கங்கள் குறித்து பல கோட்பாடுகள் உள்ளன. வறுமை மற்றும் பேராசை முதல் வாழ்க்கை மீதான சலிப்பு மற்றும் சோர்வு வரை அனைத்தும் இதில் அடங்கும்.”
“சில அறிக்கைகளின்படி, தங்கள் கணவர்கள் போர்முனையில் இருந்தபோது, இந்தப் பெண்களில் சிலர் ரஷ்ய போர்க் கைதிகளுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டனர். இந்தப் போர்க் கைதிகள் வயல்களில் வேலை செய்வதற்காக இந்தப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டனர்,” என்று வரலாற்றாசிரியர் கெசா சே கூறினார்.
தங்கள் கணவர்கள் போரிலிருந்து திரும்பியபோது, தங்களுக்குக் கிடைத்த சுதந்திரம் திடீரென இழந்ததை இந்தப் பெண்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதனால், அவர்கள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க முடிவு செய்தனர் என்று அவர் கூறினார்.
கடந்த 1950களில், கம்யூனிச ஆட்சியின் போது சிறையில் இருந்தபோது, வரலாற்றாசிரியர் ஃபிரான்ட்ஸ் யோர்கீஃப் கிராமத்தைச் சேர்ந்த ஒரு முதியவரைச் சந்தித்தார்.
நாடிரெவ் பெண்கள் “பழங்காலத்திலிருந்தே தங்கள் கணவர்களைக் கொன்று வருகிறார்கள்” என்று அந்த முதிய விவசாயி கூறினார்.
மேலும், இந்த கிராமத்து பெண்கள் மட்டுமே இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை. இந்தக் கிராமத்திற்கு அருகில் உள்ள டிசாக்குர்ட் நகரத்திலும் சில கல்லறைகள் தோண்டப்பட்டு, உடல்களில் ஆர்சனிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், இந்த மரணங்களுக்காக யாரும் தண்டிக்கப்படவில்லை.
சில மதிப்பீடுகளின்படி, இப்பகுதியில் விஷம் வைத்து கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 300 வரை இருக்கலாம்.
இந்த விஷம் வைக்கும் சம்பவங்களுக்குப் பிறகு, மனைவிகளிடம் ஆண்களின் நடத்தை ‘கணிசமாக மேம்பட்டது’ என்று கோனியா கூறுகிறார்.